தமிழ்ப்பாலி

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வோர் ஆற்றுக்கும் ஒரு பெருமையுண்டு.  மகாகவி பாரதியார்,  "காவிரி தென்பெண்ணை பாலாறு / தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி' என்கிறார்.
தமிழ்ப்பாலி

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வோர் ஆற்றுக்கும் ஒரு பெருமையுண்டு.  மகாகவி பாரதியார்,  "காவிரி தென்பெண்ணை பாலாறு / தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி' என்கிறார். புகழ்பெற்ற பாலாற்றின் பெருமைகளையும், சிறப்புகளையும் இலக்கியங்களும் கல்வெட்டுகளும் போற்றுகின்றன. கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் பழைய பாலாறு, "பாலி ஆறு' என்றும், வடமொழியில் "க்ஷீரநதி' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர்,

உரையா தாரில்லை யொன்றும்நின் தன்மையை
பரவா தாரில்லை நாள்களும்  திரையார் 
பாலியின் தென்கரை மாற்பேறு
அரையானே அருள் நல்கிடே!

என்று, பாலியாற்றின் தென்கரையில் திருமாற்பேறு சிவத்தலம் அமைந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். சேக்கிழார் பெருமான் (திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்) பாலியாற்றின் செழிப்பை, 

துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலோடு மணிகள்
பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி!

பாலி ஆறானது நந்திமலையிலிருந்து முத்து, சந்தனம், அகில் முதலியவற்றுடன் மணிகளையும் கொணர்ந்து தாமரைக் குளங்கள் நிறைக்குமாறு இறங்கி வருகிறது. ஜெயங்கொண்டார்  இயற்றிய "கலிங்கத்துப்பரணி' காளிக்குக் கூளி கூறியதில்,  "பாலாறு குசைத்தலை பொன்முகரிப் /  பழவாறு படர்தெழு கொல்லி எனும்' - பாலாறு, குசைத்தலை என்னும் இரண்டு ஆறுகளும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், பொன்முகரி ஸ்ரீகாளத்தியிலும் பாய்வனவாகும்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய "திருவாரூர்த் தியாகராச லீலை' திருநாட்டுப்படலத்தில், பாலாற்றின் கரையில் விரிஞ்சீபுரம் சிவத்தலம் அமைந்துள்ளதை "மீன்றிவழ் பாலி சூழும் விரிஞ்சைமா நகரத் தெம்மான்' என்று போற்றுகிறார்.  

பாலாற்றின் பிறப்பிடம் கர்நாடக மாநிலம் நந்தி துர்கம், இந்த ஆறு ஆந்திராவில் 35 கி.மீ. கடந்து 

தமிழகத்தில் ஏறத்தாழ 222 கி.மீ என தூரம் கடந்து தடம்பதித்த பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் கடலில் வங்காள விரிகுடாவில்  கலக்கிறது. வயலூரை பாலாற்றின் முகத்துவாரம் என்பர். பாலாற்றின் உபநதிகளாகச் செய்யாறு, வேகவதி என இரு ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகள் காஞ்சிபுரத்திற்குக் கிழக்கே உள்ள திருமுக்கூடல் (மூன்று நதிகள் கூடுமிடம்) என்னும் கிராமத்துக்கு அருகில் பாலாற்றுடன் கலக்கின்றன. 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள மடம் என்னும் கிராமத்தில் அருள்மிகு தடாகபுரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் விக்கிரமசோழன், மூன்றாம் இராஜராஜன், இரண்டாம் இராஜாதிராஜன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், இராஜநாராயண சம்புவராயன்,  வீரபுக்கண்ண உடையார், இரண்டாம் அரிகரன், வீரபிரதாப தேவராயர் ஆகியோர் காலங்களில் வெட்டப்பட்ட நாற்பது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் திருக்கோயில் வழிபாட்டிற்காகக் கொடை வழங்கியதையும், விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. 

தடாகபுரீசுவரர் கோயில் அம்மன் சந்நிதி கிழக்குச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அகத்துறை வகைப் பாடல் கல்வெட்டாகும். இப்பாடல் கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளது.

கொங்கைப் புறஞ்சன்னிதி முத்திரை யாகக் குறிக்கு மெங்கள்
சங்கைப் பிடிக்க பவனி வந்தான் தமிழ்ப் பாலி வல்லை
வங்கிப் புறங்கச்சி மாற்பேறு காவை வயற்ப ழுவூர்
செங்கைப் புயல்சித்த நாத னெங்கோன் சைவ சேகரனே.

எம் தலைவனாகிய சித்தநாதன் என்கிற சைவசேகரன் கொங்கைப்புறஞ் சந்நிதி முத்திரையாகக் குறிக்கும் எங்கள் சங்கைப்பிடிக்க உலா வந்தான். இவன் தமிழ்ப்பாலி, வல்லை, வங்கிப்புறம், கச்சி, திருமால்பேறு  காவைவயல், பழுவூர் ஆகிய ஊர்களுக்குத் தலைவன் ஆவான். "தமிழ்ப்பாலி' என்பது பாலாற்றைக் குறிக்கும்.

ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே கவிஞர் ஒருவர் பாலாற்றை "தமிழ்ப்பாலி' என்று போற்றிச் சிறப்பித்துள்ளார். ஆனால், அக்கவிஞரின் பெயர், ஊர் முதலிய செய்திகளை அறிய முடியவில்லை. தமிழ்வைகை, ஒண்தமிழ் பொருநை என்பதுபோல தொண்டைநாட்டு பாலாறும் "தமிழ்ப்பாலி' என்று குறிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com