முதலமைச்சராக்கிய மூன்று குறள்கள்!

தொண்டை நாட்டில் குன்றத்தூரில் வேளாண் குலத்திலே "சேக்கிழார்' மரபில் ஒருவர் தோன்றினார். அவருக்கு இரண்டு குமாரமணிகள்.
முதலமைச்சராக்கிய மூன்று குறள்கள்!

தொண்டை நாட்டில் குன்றத்தூரில் வேளாண் குலத்திலே "சேக்கிழார்' மரபில் ஒருவர் தோன்றினார். அவருக்கு இரண்டு குமாரமணிகள். மூத்தவர் அருண்மொழித் தேவர், இளையவர் பாலறாவாயர். மூத்தவராகிய அருண்மொழித்தேவர் அதிநுட்பமான மதிநுட்பம் உடையவராகத் திகழ்ந்தார். அவருடைய தந்தையார் சோழ மன்னர் அரண்மனையில் பணிபுரிந்து வந்தார்.

ஒரு நாள் சோழன் அவரை நோக்கி, "உலகினும் பெரியது எது?', "மலையினும் பெரியது எது?', "கடலினும் பெரியது எது?' என்று மூன்று வினாக்களை வினவி, மறுநாள் விடை கூறுமாறும் பணித்தான்.

அருண்மொழித் தேவரின் தந்தை வீட்டுக்கு வந்தார். இரவெல்லாம் பல நூல்களைப் புரட்டினார், ஆராய்ந்தார்; சுற்றும் முற்றும் பார்த்தார்.

கண்சு ழன்றது கருத்துஞ் சுழன்றது
மண்சு ழன்றது மனமும் சுழன்றது
எண்சு ழன்றது இதயஞ் சுழன்றது
விண்சு ழன்றது விடைவிளங் காமையால்

பாவம் என் செய்வார்? திகைத்தார். அரசனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தார். பொழுது விடிந்தது. வழக்கம்போல் உரிய காலத்தில் நீராடவில்லை; வழிபாடு செய்யவில்லை. உச்சிப் பொழுதாயிற்று. எழுந்தார், திருநீறு பூசினார். வாடிய உள்ளத்துடன் வெளியே புறப்பட்டார்.

தந்தையின் வாட்டத்தைக் கண்ட அருண்மொழித் தேவர் அவரைத் தொழுது, ""தந்தையே ஏன் தங்கள் முகம் வாடியுள்ளது? ஆடிய பாதத்தை நினைப்பவர் வாடி வருந்தலாமா? ஏன் வழிபாடும் செவ்வையாகப் புரியவில்லை, உணவும் உட்கொள்ளவில்லையே. தங்கள் வருத்தத்திற்குக் காரணம் யாது?'' என்று வினவினார்.

""என் கண்ணே, நீயோ சிறு பிள்ளை. இதுவோ பெரிய விஷயம். உனக்கேன் இந்தக் கவலை? உன்னிடம் சொல்வதனால் என்ன பயன்? அரசர் கோபம் கொள்வார், நான் போக வேண்டும்'' என்றார்.

""தந்தையே! அது என்ன விஷயம்? கருணைகூர்ந்து சொல்லுங்கள். பொன்னம்பலநாதர் தங்கள் கவலைகளைத் தீர்ப்பார்''

""மகனே! மன்னர் என்னிடம், உலகினும் பெரியது எது, மலையினும் பெரியது எது, கடலினும் பெரியது எது?' எனும் மூன்று கேள்விகள் வினவினார். அதற்கு நான் விடை கூறவேண்டும். இதைப் பற்றித்தான் இரவெல்லாம் சிந்தித்தேன், விளங்கவில்லை. தக்க விடை கூறவில்லை என்றால் அரசர் தண்டிப்பார்'' என்றார்.
""ஐயனே! இதற்கா இவ்வளவு பெரிய ஆலோசனையும், வாட்டமும். நீங்கள் சாப்பிடுங்கள். அதற்குள் இந்த மூன்று வினாக்களுக்கும் அடியேன் விடை எழுதித் தருகிறேன். விடையவன் இருக்க விடைக்கு என்ன பஞ்சம்?' என்றார்.
இதைக் கேட்டு தந்தை அதிசயித்தார். சிறிது உணவு உட்கொண்டார். அதற்குள் அருண்மொழித் தேவர் ஓர் ஓலையைக் கொண்டுவந்து தந்தையிடம் கொடுத்தார். அதில் பின்வரும் திருக்குறள்கள் எழுதப்பட்டிருந்தன.

உலகத்தினும் பெரியது,

"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது' (102)

மலையினும் பெரியது,

"நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது' (124)

கடலினும் பெரியது,

"பயன்துக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது'' (103)

இதைப் படித்த தந்தை மகனின் மெய்யறிவு கண்டு வியந்து, பெருமிதம் கொண்டார். எல்லையற்ற மகிழ்ச்சியும் அடைந்தார். அந்த ஓலையைக் கொண்டு சென்று மன்னர் அநபாய சோழனிடம் கொடுத்தார். மன்னர் அதை உற்று நோக்கினார். கையெழுத்து அவருடையது அன்று என்பதை உணர்ந்து, "இது யாருடைய எழுத்து?' என்றார்.

""வேந்தர் பெருமானே! வினாக்களுக்கு விடை கிடைக்காது விழித்தேன்; இரவுப்பொழுதையும் என் சிந்தனையில் கழித்தேன்; என் மதியையும் பழித்தேன். என் செல்வப் பிள்ளை இவ்விடையை எழுதிக் கொடுத்தான்'' என்றார்.

மன்னர் கேட்டு வியப்படைந்தார். உடனே பல்லக்கு அனுப்பி அருண்மொழித் தேவரை அழைத்துவரச் செய்து அன்போடு வரவேற்று உபசரித்தார். அப்பிள்ளையின் திருமுகமண்டலத்தின் பொலிவையும் அருட்பொலிவையும் கண்டார். அவரது பெருமையை நன்குணர்ந்து அவரை முதலமைச்சராக ஆக்கிக் கொண்டார். குடும்பப் பெயராகிய "சேக்கிழார்' என்ற திருப்பெயரே அருண்மொழித் தேவரின் திருப்பெயராக வழங்கலாயிற்று. சேக்கிழாருக்கு "உத்தமசோழ பல்லவர்' என்ற பட்டத்தையும் அநபாய சோழ மன்னர் வழங்கினார்.

அருண்மொழித் தேவர் எத்தனை எத்தனையோ இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும், திருக்குறளே அவரை முதலமைச்சராக்கியது. பெரியபுராணத்தில் அவர் 50-க்கும் மேற்பட்ட திருக்குறள் கருத்துகளை எடுத்தாண்டு திருக்குறளுக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com