கணித வடிவங்களில் ஐம்பூதங்கள்

உலகில் வாழும் உயிரினங்களின் இயக்கம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் அடிப்படையில் அமைகின்றன. 
கணித வடிவங்களில் ஐம்பூதங்கள்


உலகில் வாழும் உயிரினங்களின் இயக்கம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் அடிப்படையில் அமைகின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் ஐம்பூதங்களின் செயல்பாட்டிற்குக் கட்டுப்பட்டவை. 

சிவபெருமான் பஞ்ச பூதங்களின் அம்சமாய் (பஞ்சலிங்கமாய்) விளங்கி வருவதை சைவ சமயம் குறிப்பிடுகின்றது. ஐம்பூதங்களின் வடிவங்களும் கணித வடிவங்களுடன் ஒத்திருப்பதை சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றான "உண்மை விளக்கம்' எனும் நூலில் திருவதிகை மனவாசகம் கடந்தார் அருளிச் செய்துள்ளார்.

நாற்கோணம் பூமி; புனல் நண்ணு மதியின் பாதி; 
ஏற்கும் அனல் முக்கோணம்; எப்போதும்  ஆர்க்கும்
அறுகோணம் கால்; வட்டம் ஆகாயம்; ஆன்மா
உறுகாயம் ஆம் இவற்றால் உற்று

ஐம்பூதங்களுள் நிலமானது நாற்கோண வடிவம் கொண்டது; நீர், பாதி நிலவுபோல அரைவட்ட வடிவமாய் விளங்குகிறது; நெருப்பு முக்கோண வடிவம் பெற்றது; காற்று அறுகோண வடிவமாய்த் திகழ்கிறது; வானம் வட்ட வடிவமாய்க் காணப்படுகிறது. உயிர் பெறுகின்ற உடம்பு இப்பூதங்களின் சேர்க்கையால் ஆனது.

மனிதனுக்குக் கிடைத்துள்ள உடல் பஞ்சபூதங்களால் உருவானது. உடம்பிலுள்ள எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு போன்றவை பிருதிவியின் கூறுகள். 

சிறுநீர், குருதி, வியர்வை அப்புவின் கூறுகள். பசித்தீ, உடம்பில் ஏற்படும் வெப்பம் தேயுவின் கூறுகள். பிராணவாயு முதலியவை வாயுவின் கூறுகள்.

பத்து வகையான நாடிகள் ஆகாயத்தின் கூறுகள் என உரையாசிரியர் பெருமக்கள் கருத்துரைக்கின்றனர். அவ்வகையில், மனித உடல் உறுப்புகளும் கணித வடிவங்களோடு தொடர்புடையதாகக் கருதலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com