இந்த வாரம் கலாரசிகன்(24/10/2021)

கல்லூரியில் என்னுடைய தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஆழ்வானின் மகள் கீதா, ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று மதுரையில் இருக்கிறார்.
இந்த வாரம் கலாரசிகன்(24/10/2021)

 கல்லூரியில் என்னுடைய தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஆழ்வானின் மகள் கீதா, ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று மதுரையில் இருக்கிறார். அவரையும், மதுரைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து பணி ஓய்வுபெற்ற அவருடைய கணவர் கோபாலனையும் சந்திக்கச் சென்றிருந்தேன். மதுரைக்கு நான் போகும்போது, இப்படி ஏதாவது பழைய நட்பையும், உறவையும் புதுப்பிப்பதென்பது எனக்குப் புதிதொன்றுமில்லை.
 சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்த என்னைப் போன்ற மாணவர்கள் உள்ளத்தில் மகாகவி பாரதியாரை வேரூன்றச் செய்தவர் என்று, பரிதிமாற்கலைஞரின் மகன் வயிற்றுப் பெயரனும், எங்கள் ஆசிரியருமான வி.ஜி.சீனிவாசன் குறித்து நான் நிறையவே எழுதியிருக்கிறேன். பல மேடைகளில் பேசியிருக்கிறேன். அவர் குறித்த பேச்சு எழுந்தபோது, பேராசிரியர் கோபாலன் தனக்கும் வி.ஜி.சீனிவாசன் ஆசிரியராக இருந்தார் என்று சொன்னபோது, எனது மகிழ்ச்சி மேலும் அதிகரித்தது.
 அவரது புகைப்படம் என்னிடம் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறையாகவே இருந்து வந்தது. சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றபோது, அங்கே கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை.

 ஆசிரியர் வி.ஜி.சீனிவாசனின் மகன் வி.ஜி.எஸ். சுந்தரும் ஒரு பள்ளி ஆசிரியர்தான் என்றும், அவர் தங்களுக்கு நல்ல நண்பரும்கூட என்றும் கோபாலன் தம்பதியினர் தெரிவித்தனர். அவரிடம் கேட்டு, அவருடைய தந்தை வி.ஜி.சீனிவாசனின் புகைப்படம் ஒன்றைப் பெற்றுத் தருவதாகவும் எனக்கு வாக்களித்தனர். சொன்னது போலவே, கோபாலன் சாரும், சுந்தரும் அவரது புகைப்படத்தை அனுப்பித் தந்திருக்கிறார்கள்.
 வி.ஜி.எஸ்.ஸின் மகன் சுந்தருடன் கைப்பேசியில் தொடர்புகொண்டு, அவர் புகைப்படம் அனுப்பித்தந்ததற்கு நன்றி கூறினேன். எங்கள் ஆசிரியர் குறித்த பல நிகழ்வுகளையும், தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். பள்ளிச் சிறுவனாக இருக்கும்போது தன் தந்தையார் சொன்ன ஓர் அறிவுரை குறித்து சுந்தர் கூறினார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
 "அடுத்த சில நொடிகளில் உன்னை மரணம் எதிர்கொள்ள இருக்கிறது என்று நினைத்துக் கொள். அந்த நொடியில், "இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை பயனுள்ளதாக இருந்திருக்கிறதா' என்று உன்னை நீயே கேட்டுக்கொள். உனது மனசாட்சி "ஆமாம்' என்று சொன்னால் மட்டும்தான், நீ பிறவி எடுத்ததற்கு அர்த்தம் இருக்கிறது'' என்பதுதான் ஆசிரியர் வி.ஜி.எஸ். பள்ளிச் சிறுவனான தன் மகன் சுந்தருக்குச் சொன்ன அறிவுரை.
 தனது பேச்சும் மூச்சும் "பாரதி... பாரதி...' என்று உழைத்த அந்த ஆசிரியப் பெருந்தகை வி.ஜி.சீனிவாசனின் அறிவுரை அவருடைய மகனுக்கு மட்டுமானதல்ல. நம் அனைவருக்குமேயானது!
 
 நான் சிறுவயதில் "அவ்வை' தி.க.சண்முகம் அண்ணாச்சியின் நாடகங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன். திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்கிற தி.க.சண்முகம் அண்ணாச்சி தமிழ் நாடக முன்னோடி சங்கரதாஸ் சுவாமிகள், கிருஷ்ணசாமிப் பாவலர், கந்தசாமி முதலியார் ஆகியோரின் நாடகக் குழுக்களில் பயிற்சி பெற்றுத் தேர்ந்த நடிகர். "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யின் மனசாட்சிக் காவலராக இருந்தவர்.
 "அண்ணாச்சி' குறித்த எந்தத் தகவல், புத்தகம் என்று வந்தாலும் அவை என்னை ஈர்த்துவிடுவது இயல்பு. விமர்சனத்துக்கு வந்திருந்தது அவர் எழுதிய "நடிப்புக் கலை' என்கிற சிறு நூல்.
 சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் "நாடகக் கலை', "நாடக சிந்தனைகள்', சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறான "தமிழ் நாடகத் தலைமையாசிரியர்', "எனது நாடக வாழ்க்கை', "நாடக உலகில் அண்ணா' ஆகிய சண்முகம் அண்ணாச்சியின் ஐந்து நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டிருக்கின்றன. அதில் "நடிப்புக் கலை' என்கிற புத்தகம் இல்லையே என்கிற யோசனையுடன், அதை வெளியிட்டிருக்கும் ஜோலார்பேட்டை தேநீர் பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் பேசினார் "தினமணி'க்கு நன்கு அறிமுகமான சிறுகதை எழுத்தாளர் நா.கோகிலன்.

"நாடகக் கலை' புத்தகத்தின் ஒரு பகுதியான "நடிப்புக் கலை' குறித்த கட்டுரையை மட்டும் எடுத்துப் பதிப்பித்திருப்பதாகவும், நடிப்புக் கலை குறித்து ஏனைய பலர் எழுதியிருக்கும் கட்டுரைகளையும் தேடிப்பிடித்து ஒரு புத்தகமாகத் தொகுக்கும் பணியிலும் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார் கோகிலன், வாழ்த்துகள்.
 நடிப்புக் கலையின் அத்தனை நுணுக்கங்களையும் சாமானியர்களுக்கும் புரியும் விதத்தில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார் "அவ்வை' தி.க.சண்முகம். அண்ணாச்சியின் மேடை நாடக, திரையுலக அனுபவத்தின் முத்திரை பக்கத்துக்குப் பக்கம் இருப்பதில் வியப்பில்லைதான். தனது நாடகக் குழுவில் இணையும் நடிகர்களுக்கு, நடிப்பு குறித்துப் பாடம் எடுப்பதுபோல அமைந்திருக்கிறது "நடிப்புக் கலை' குறித்த அவரது விளக்கங்கள்.
 பல்வேறு பிரிவுகளைக் கொண்ட நாடகத்தில், நடிப்பு ஒரு சிறப்பும், முதன்மையுமான பகுதி என்பதில் இருந்து தொடங்குகிறது அவரது கட்டுரை. பசி மனிதனுக்கு இயற்கையாக உண்டாவதைப் போல ஒருவரைப் போல் மற்றொருவர் நடித்துக் காட்டுவதும் இயல்பாகவே மனிதனுக்கு இருக்கும் உணர்வு என்பது அவரது கருத்து. அதனால்தான் நடைமுறை வாழ்க்கையில் மனிதர்கள் நடிக்கிறார்கள் என்கிறார். அதேபோல, மொழிக்கு முன்னால் தோன்றியது நடிப்பு என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
 சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரையில் நாடகப் பாங்குகள் குறித்த குறிப்புகள் இருப்பதையும், பரிதிமாற்கலைஞரின் "நாடக இயல்', விபுலானந்த அடிகளாரின் "மதங்க சூளாமணி', பம்மல் சம்பந்த முதலியாரின் "நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி' வரிசையில் சேர்கிறது அண்ணாச்சியின் "நடிப்புக் கலை'.
 நடிப்புக்குரிய தகுதியான உடற்கட்டு, குரல் வளம், பேச்சுத் தெளிவு, நினைவாற்றல், தோற்றப் பொலிவு போன்றவை மட்டுமல்லாமல், நடிகர்களுக்கு இன்றியமையாத கண்களின் பாவம், அழகுணர்வு, குரல் பயிற்சி, உச்சரிப்பு போன்றவை குறித்தும் விவரிக்கிறது "நடிப்புக் கலை'. நடிப்பின் அத்தனை நுணுக்கங்களையும் 45 பக்கங்களில் கற்றுக்கொடுத்து விடுகிறார் அண்ணாச்சி.
 நடிக்க வேண்டும் என்று வேட்கை கொண்டோரும், நடிகர்களை இயக்க வேண்டும் என்று ஆசைப்படுவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. நடிப்புக் கலையைப் பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் பாடப் புத்தகமாக்கப்பட வேண்டிய நூல். தி. க. சண்முகம் அண்ணாச்சியிடம் நேரிடையாக நடிப்புப் பயிற்சி பெற்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது "நடிப்புக் கலை'.


 இதில் என்ன இருக்கிறது, இது என்ன சிறந்த கவிதை என்று தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்று சிலர் கேட்கக்கூடும். அது அவரவர் பார்வையைப் பொறுத்தது. எனது பார்வையில் இது ஒரு கவிதை அல்ல, சிறுகதை. அந்தக் காட்சியை சற்று மனதில் உருவகப்படுத்திப் பாருங்கள். அப்போது, அந்த மூன்று வரிக்குள் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகளின் உண்மை புரியும். இரா. சிவானந்தத்தின் "முத்துக்கு முத்தாக' தொகுப்பிலுள்ள துளிப்பா இது -
 மகள் திருமணம் மொய் எழுதுமிடத்தில் கடன் கொடுத்தவர்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com