பரணரும், பெயர் அறியாப் புலவரும்!

 அகநானூறு (பா.186;326), நற்றிணை (பா.10) ஆகிய இரண்டு நூல்களிலும் "போர்' என்னும் ஊருக்கு உரியவனாகப் பழையன் என்னும் வீரன் (குறுநில மன்னன்?) ஒருவன் குறிக்கப்படுகிறான்.
பரணரும், பெயர் அறியாப் புலவரும்!

 அகநானூறு (பா.186;326), நற்றிணை (பா.10) ஆகிய இரண்டு நூல்களிலும் "போர்' என்னும் ஊருக்கு உரியவனாகப் பழையன் என்னும் வீரன் (குறுநில மன்னன்?) ஒருவன் குறிக்கப்படுகிறான். மேற்குறித்த அகநானூற்றுப் பாடல் இரண்டினையும் பாடியவர் பரணர். நற்றிணைப் பாடலுக்குரிய (10) புலவர் பெயர் தெரியவில்லை. எனவே அது, "ஆசிரியர் பெயர் காணாப் பாடல்'களுள் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
 அகநானூறு 186 ஆம் பாடலில்,
 "... வென்வேல் மாரி அம்பின் மழைத்தோற் பழையன் காவிரி வைப்பிற் போஒர்' என்னும் அடிகளில், பழையன் என்பான் போர்க்களத்தில் வெற்றி பொருந்திய வேலும், அம்பும், கேடகமும் ஏந்திப் போர் செய்யும் திறன் பேசப்பட்டுள்ளது. மேலும், காவிரி நாட்டிலுள்ள அவனது "போர்' என்னும் ஊர் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. இவ்வூர்ப் பெயர் செய்யுளில் சீர்நோக்கி அளபெடுத்துப் "போஒர்' என வந்தது.
 பரணரே "பழையன்' குறித்துப் பாடிய 326-ஆவது பாடலில் அவனைப் "போஒர் கிழவன்' என்றும், அவ்வூர் "காவிரிப்படப்பை' சார்ந்தது என்றும் குறிப்பிடக் காணலாம். இப் பழையன் சோழனுக்குப் படைத் துணையாகவும் இருந்திருக்கக்கூடும். எனவே, "... வென்வேல் இழையணி யானைச் சோழர் மறவன்' என்று பரணர் அவனைச் சிறப்பித்துள்ளார்.
 இவ்வாறே, புலவர் பெயர் அறியப்பெறாத நற்றிணை 10-ஆவது பாடலிலும் "போர்' என்னும் பழையனது ஊரும், சோழர்க்காகப் போரில் கொங்கர்களைப் பணியச் செய்த அவனது வீரச்சிறப்பும் குறிக்கப்பட்டுள்ளன.
 "இன்கடுங்கள்ளின் இழையணி நெடுந்தேர்க்
 கொற்றச் சோழர் கொங்கர்ப் பணிஇயர்
 வெண்கோட் டியானைப் போஒர் கிழவோன்
 பழையன்'
 என்னும் அடிகளில் காணலாகும் செய்தி இது. மேலும், பழையன் போர்க்களத்தில் இலக்குத் தப்பாது பகைவர் மீது வேல் வீசும் திறன் படைத்தவனாகவும் விளங்கியிருக்கிறான். அவனது இச்செயல் பலரறிந்த ஒன்றாக அந்நாளில் பரவியிருக்கக்கூடும். எனவேதான், "பழையன் ஓக்கிய வேல் பிழையல' என்று அகநானூற்றில் (326) பரணரும்; "பழையன் வேல்வாய்த்து அன்ன' என்று நற்றிணையில் (10:8) அந்தப் "பெயர் தெரியாப் புலவரும்' குறிப்பிட்டுப் பாடியுள்ளனர்.
 இந்த ஒரு வரலாற்றுக் குறிப்பினையே இப்புலவர் இருவரும் அவரவர் கருத்துக்கு ஏற்ப உவமையாக்கிப் பாடியிருப்பது சுவைமிக்கதாகும். முதலில் பரணர் பாடலைக் காண்போம்.
 தலைவியைப் பிரிந்து வேறொருத்தியுடன் வாழ்ந்த தலைவன் மீண்டும் தலைமகளை நாடி வந்தபோது, உடன்பட மறுத்துப் பேசுகிறாள் தோழி.
 "உன்னால் விரும்பப்பட்டவள் அழகு பொருந்திய தேமலை உடையவள். ஒன்றோடொன்று அமர் செய்வது போன்ற குளிர்ந்த கண்களைக் கொண்டவள். பருத்த தோள்களையும் சிறுத்த நெற்றியினையுமுடைய இளைய பரத்தை அவள். சோழ நாட்டில் - மட்டவாயில் என்னும் ஊரில் உள்ள செந்நெற்கழனிபோல் செழித்த எழில் படைத்தவள். அவளின் வசப்பட்டு நலம் பாராட்டிப் புனல் விழாவில் அவளுடன் நீ கலந்து கொண்டது சரியே. இனியும் அவளையே சென்றடைவாயாக. ஏன் தெரியுமா? அவளது கண்வட்டத்துக்கு இலக்கானவர்கள் - அவள் கண்கள் தம்மீது தைத்தலினின்றும் தப்பியதில்லை. ஆதலின், அவளது கண்களுக்கு இலக்கான நீயும் அவளைவிட்டு நீங்குதல் அரிது; நீ அவளிடம் சென்றுவிடுவதே தக்கதாகும்' என்றாள் தோழி.
 ... ... போஒர் கிழவன்
 பழையன் ஓக்கிய வேல் போல்
 பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தே!
 (அகநா.326)
 என முடிகிறது இந்த மருதத்திணை பாடல். இங்கு, பார்வையால் ஆடவரைத் தாக்கும் அவளின் கண்களுக்குப் பழையனது வேல் உவமையாகிறது. இனி நற்றிணைப் புலவர், "பழையனது வேல் பற்றிய' இச்செய்தியை எதற்கு உவமையாக்குகிறார் என்று பார்க்கலாம்.
 ஓம்படைக் கிளவி (தலைவியைக் கைவிடாது காப்பாயாக என்னும் மொழி)யில் அமைந்த பாலைத் திணைப்பாடல் இது. தலைவியைத் தலைவனிடத்தே ஒப்படைக்கும் தோழி, "இன்று இளையளாய் உள்ள இவள் கால ஓட்டத்தில் முதுமை எய்தினும் என்றும் பிரியாது இருந்து இவளைப் பேணுவாயாக' என்கிறாள். அப்போது அவள் கூறியதாகவுள்ள அருமைப் பாடல் இதோ!
 அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
 பொன்னேர் மேனி மணியில் தாழ்ந்த
 நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
 நீத்தல் ஓம்புமதி - பூக்கேழ் ஊர!
 இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க்
 கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
 வெண்கோட் டியானைப் போஒர் கிழவோன்
 பழையன் வேல்வாய்த் தன்னநின்
 பிழையா நன்மொழி தேறிய இவட்கே!
 (நற்.10)
 "பழையன் என்னும் பெருவீரனது வேல் தப்பாதவாறு போல - நின்ற சொல்லனாய் என்றும் தப்பாது நிற்கும் நின் சொல்லை நம்பியே இவளை உடன்போக்கில் உன்னோடு அனுப்புகிறேன். பிழைபடாத நினது நல்ல மொழியை உண்மையெனத் தெளிந்தவள் இவள். எனவே, இளமை மாறி முதுமை எய்தினும் இவளைப் பிரியாது காப்பது உன் கடமை' என்கிறாள் தோழி.
 ஓம்படை கூறிய தோழியும், ஒப்படைக்கப்பட்ட தலைவியும், கையடையாகப் பெற்ற தலைவனும் ஈராயிரமாண்டுகட்குப் பின்னரும் நம் கண்முன் உயிர்ப்புடன் உலவுகிறார்கள். காலத்தை வென்று அமர காதலராய் வாழ்கிறார்கள்.
 ஆயின், இவர்களைப் படைத்தளித்த அந்தப் புலவனின் பெயரைக்கூட நம்மால் அறிய முடியவில்லை. காலமெல்லாம் பேர் சொல்லும் பாடலைத் தந்தவரின் பேரும் அறிய இயலாமற் போனது ஓர் அவலமே. எனினும், சாகாவரம் பெற்ற இச்சங்கச் செய்யுளில் மாற்றுக்குறையாத பசும் பொன்னாக ஒளிர்கிறார் அந்தப் புலவர்!
 - முனைவர் ம.பெ.சீனிவாசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com