ஆர்யவர்த்தம்

நாள்தோறும் மிகவும் புதிய பொருளுடன் புத்தம் புதியனவாகப் பிறக்கின்றன மகாகவி பாரதியார் கவிதைகள். எனினும், அவற்றின் எண்ணிக்கை கூடவில்லை; பொருளே கூடுகின்றது!
ஆர்யவர்த்தம்


நாள்தோறும் மிகவும் புதிய பொருளுடன் புத்தம் புதியனவாகப் பிறக்கின்றன மகாகவி பாரதியார் கவிதைகள். எனினும், அவற்றின் எண்ணிக்கை கூடவில்லை; பொருளே கூடுகின்றது! இந்த மகாகவிஞரை சுப்பு என்பவர் "வைகறைக் கவிஞன்' என்று குறிப்பிட்டுள்ளார். 
காலமும் ஞாலமும் (தேசம்) கடந்தவை அவரது கவிதைகள் என்பது ஏகதேசமன்று; பரிபூரணமே. இதற்கு ஒரு மாபெரும் சான்று அந்த மகாகவியின் திருவாக்கிலேயே பின்வருமாறு அமைந்தது விந்தையன்று. மிகவும் இயல்பான உண்மையே.
""வியப்பும் இயல்பும் இரு வேறு துருவங்கள். இந்த மகாகவியின் கவிதைகளை நாம் வியந்தால் அவற்றின் இயல்பு நமக்குப் பிடிபடாமல் நாம் அவருடைய கவிதைகளுக்கு அந்நியமாகி விடலாம். எனவே, வானச்சுவடாகவே வியந்து இந்த மகாகவி பாடிய "விடுதலை' என்னும் கவிதையின் (30) சிகரமான பின்வரும் செய்தியோடு ஒன்றுவோம்.
"இழிவு கொண்ட மனிதர் என்பதிந்தியாவில் இல்லையே! "இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லாத' பெருமிதம் இமயமலைக்கு உள்ள பெருமிதமும் அதிலிருந்து பெருகும் கங்கையாற்றுக்கும் குமரிக்கடலுக்குமே யுள்ள பெருமிதமுமாகும். இங்ஙனம் தமது பெருமிதத்தையே இந்தியா முழுமைக்குமான "தேசிய உடைமை' யாக்கிவிட்டார் மகாகவி பாரதியார்! 
"இழிவு கொண்ட மனிதர் என்போர் இந்தியாவில் இல்லையே' என்று பாடாமல், "இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே' என்று பாடியதன் நோக்கம் "இழிவு... என்பது' என்று அஃறிணையில் முடிகின்றமையால்தான் "இழிவு கொண்ட மனிதர் என்பது' என்றார் மகாகவி பாரதியார். எனவே, இந்திய மாந்தர் சிறப்பை - உயர்வை அஃறிணையாக்கிவிடக் கூடாது என்ற செய்தியை எதிர்மறையாகப் புலப்படுத்தும் பொருட்டே உயர்திணைக்கு மாறுபட்ட அஃறிணைப் பொருளில் இங்ஙனம் பாடியுள்ளார்.
சுவாமி விவேகானந்தர் 1897 நவம்பர் மாதத்தில் லாகூரில் "இந்து மதத்தின் பொது அடிப்படைகள்' என்னும் தலைப்பில் ஒரு பேருரை நிகழ்த்தியுள்ளார். அதன் தொடக்கம் பின்வருமாறு:
""புனிதமான ஆர்யவர்த்தத்தில் மிகப் புனிதமான இடமாகக் கருதப்படுவது இந்த இடம். இவ்வுரையின் அடிக்குறிப்பில் உள்ள செய்தி: "இந்தியாவின் பண்டைய பெயர். 
"மேலார் மீண்டும் மீண்டும் பிறக்கின்ற இடம்' என்பது ஆர்யவர்த்தம் என்ற சொல்லின் பொருளாகும் (சகோதர சகோதரிகளே... விவேகானந்த இலக்கியம் ஞானதீபம், 11 சுடர்களின் திரட்டு ப.288; சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு முதற்பதிப்பு 2002). 
எனவே, "இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே' என்பதும் 
"ஆர்யவர்த்தம்' என்பதும் மிகவும் இயல்பாக இசைந்ததில் வியப்பேதும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com