கவலை தந்த "கவலை'!

பழந்தமிழகத்தில், தம் நாட்டிலிருந்து அடுத்த நாட்டிற்குச் செல்லும் மக்கள் அனைவரும் இரு நாடுகளுக்கு இடையே நீண்டு பரந்திருந்த பெரும் காடுகளைக் கடக்க வேண்டியிருந்தது (புறம்.31:9-11). பழந்தமிழகத்தில்
கவலை தந்த "கவலை'!

பழந்தமிழகத்தில், தம் நாட்டிலிருந்து அடுத்த நாட்டிற்குச் செல்லும் மக்கள் அனைவரும் இரு நாடுகளுக்கு இடையே நீண்டு பரந்திருந்த பெரும் காடுகளைக் கடக்க வேண்டியிருந்தது (புறம்.31:9-11). பழந்தமிழகத்தில் மட்டுமின்றிப் பழங்காலத்தில் உலகெங்கும், மக்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளின் இடையே பெருங்காடுகளே மிகுதியாக இருந்தன. இதனை எங்கெல்சு, "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்' எனும் தம் நூலில், ""பழங்காலங்களில் மக்கள்தொகை நெருக்கமில்லாதிருந்தது. இனக்குழுக்கள் வசித்த இடங்களில் மட்டும்தான் மக்கள் அடர்த்தியாக இருந்தார்கள். அந்த இடம் பரந்த வேட்டைக்காடுகளால் சூழப்பெற்றிருந்தது. இவற்றிற்கப்பால் மற்ற இனக்குழுக்களிலிருந்து அதைப் பிரித்துப் பாதுகாப்பு அளிக்கின்ற நடுநிலைக்காடுகள் இருந்தன''

எனத் தெரிவித்துள்ளார் (பக்.97). நீளிடை, ஆரிடை, அருஞ்சுரம், நெறி எனப் பலபெயர்களால் குறிப்பிடப்பெறும் இந்நெடுவழிகளின் வழியே செல்லும்போது, இடையே பிற நாடுகளின், ஊர்களின் எல்லைப்புறங்களைக் கடந்துசெல்ல நேரிடும். இந்த எல்லைப்புறங்களில் மிளை எனப்பெற்ற மரங்கள் அடர்ந்த காட்டரண் அமைக்கப்பெற்றிருக்கும். இம்மிளையைத் தாண்டி வேற்று நாட்டார் எவரும் எளிதில் நாட்டுக்குள் நுழைய இயலாது. நீளிடை, ஆரிடை எனப்படும் பொதுவழிகளிலிருந்து, நாடுகளின் உள்ளே செல்வதற்குரிய வழி பிரியும் இடத்தைக் "கவலை' என இலக்கியங்கள் குறிப்பிடும். 

வேற்றுநாட்டாரோ பகைவரோ, ஒற்றரோ நாட்டினுள் அனுமதியின்றிப் புகுந்துவிடாமலிருக்கும் வகையில், "கவலை' என வழங்கப்பெற்ற அவ்விடங்களில் அந்நாட்டு மறவர் வில்லுடன் காவல் காத்தமையைச் "சிலையுடைக் கையர் கவலை காப்ப' என மதுரைக்காஞ்சி (312) தெரிவிக்கிறது. அக்காவல் மறவர், பிறரால் அடையாளங்காண இயலாதவாறு பசுந்தழைகளாலான உவலைக் கூரைகளை அமைத்துத் தங்கியிருப்பர்.

உவலைக் கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படுங் கவுள சிறுகண் யானை  

(முல்லை.29 - 31)

அக்காவல் மறவர், தம் தலைகளிலும் பசுந்தழைகளைச் சூடியிருப்பர். இதனை "உவலை சூடிய தலையர் கவலை ஆர்த்து' என அகநானூறு காட்டியுள்ளது (291:13). இவ்வாறு எவராலும் அடையாளங்காண இயலாத அளவிற்குக் காணப்பெற்ற இக்கவலைப் பகுதிகள் அடங்கிய எல்லைகளைக் 
"கவலை கரக்குங் காடகல் அத்தம்' எனப் பாலைப் பாடல் குறிப்பிட்டுள்ளது(அகநா.299:9). இத்தகைய பல கவலைப் பகுதிகளைத் தாண்டினால்தான் நாடுகளுக்கிடையே விளங்கிய 
நெடுவழியைக் கடக்க முடியும் (அகநா.247:10).
நாடுகளுக்கு இடையே நெடுங்காட்டு வழிகளில் அமைக்கப்பெற்றிருந்த இக்கவலை  எனும் பகுதியைக் கடந்து செல்வோர், உல்கு எனப்பெற்ற வரியைச் செலுத்த 
வேண்டும். "உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்' மறவர்கள் (பெரும்.81), வன்நெஞ்சினராய் வழிப்போக்கரைக் கொன்று குவிப்பர் என்ற செய்தியைப் பாலைப்பாக்கள் பரக்கக்  காட்டியுள்ளன. 
பொதுவழிகளிலிருந்து பிரிந்துசென்ற கவலை எனப்பெற்ற நாட்டின் அந்நுழைவு வழிகளில், உயரமான "பார்வல் இருக்கை' (புறநா.3:19) அமைக்கப்பெற்றிருக்கும். அவ்விருக்கையில் காவற்பணி மேற்கொள்ளும் எயினர், வில், அம்புகளுடன் பொதுவழியில் செல்லும் வழிப்போக்கரை விழிப்புடன்
கவனித்தபடி இருப்பர். வழிச்செல்வோர்களுள் எவரேனும் ஐயத்திற்கு உரியவராகத் தென்பட்டால், வல்வில் எயினர் அம்பெய்திக் கொல்வர். 
"வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை'யில் (அக.127:15) அவ்வாறு கொல்லப்பெற்ற மக்களின் உயிரற்ற உடல்களைக் குவியலாகக் குவித்து வைத்திருப்பர்.
"கவலை' எனும் இவ்விடங்களுக்கு அருகே, "பதுக்கை' எனப்பெற்ற அப்பிணக்குவியல்கள் காணப்பெற்றமையைப்
"பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலை' என ஐங்குறுநூறு(362:1) உட்படப் பல செய்யுள்கள் காட்சிப்படுத்துகின்றன. 
நாடுகளுக்கிடையே இருந்த பெருவழிகளில், "கவலை' எனப்பெறும் இவ்விடங்கள் வழிநெடுக இருந்தமையை, மலைபடுகடாம், "கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே'(389) எனத் தெரிவித்துள்ளது. அத்தகைய கவலைப் பகுதி, தன் தலைவன் செல்லும் வழியில் இருப்பதை அறிந்த தலைவி ஒருத்தி, 

கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் தேர்சென்ற ஆறே

(குறுந்.12:1-2)

எனக்கூறி, கவலையுற்றிருந்தமையைக் குறுந்தொகை காட்டியுள்ளது. இவ்வாறு பெருவழிகளான பொதுவழிகளில் அமைந்திருந்த நாடுகளின் காட்டு வாயில்களான "கவலைகள்' வழிப்போக்கருக்குக் கவலையைத் தருவனவாக அமைந்திருந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com