அலரெழச் சென்றது அன்றோ...

அலரெழச் சென்றது அன்றோ...

தலைவன், தலைவி களவொழுக்கம் ஊரறியத் தொடங்கிற்று. களவொழுக்க மரபில் இதனை "அம்பல் அலராயிற்று' என்பர்.

தலைவன், தலைவி களவொழுக்கம் ஊரறியத் தொடங்கிற்று. களவொழுக்க மரபில் இதனை "அம்பல் அலராயிற்று' என்பர். ஊரார்க்குத் தெரிந்ததால் தலைவன், தலைவியைத் தனிமையில் சந்திக்க இயலாது போயிற்று. தலைவியை சந்திக்க திருமணமே வழியென எண்ணிய தலைவன் பொருள்தேட தலைவியைப் பிரிகிறான். தலைவன் திரும்பி வருவதாகச் சொன்ன காலமும் வந்தது. ஆனால் அவன் வரவில்லை. ஊரார் பழிக்கஞ்சி வாராதிருப்பானோ, அவன் வரும் வழியில் ஏதேனும் ஊறு நிகழ்ந்திருக்குமோ எனப் பலவாறு எண்ணிக் கலங்கும் தலைவி ஒருத்தியை உலோச்சனார் எனும் புலவர் அருமையாகக் காட்சிப்படுத்துகிறார்.
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகந்தொறும்
வெள்ளி அன்ன விளங்கிணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிரப்
புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல்
வரிவண்டு ஊதலிற் புலிசெத்து வெரீஇப்
பரியுடை வயங்குதாள் பந்தின் தாவத்
தாங்கவுந் தகைவரை நில்லா ஆங்கண்
மல்லலஞ் சேரி கல்லெனத் தோன்றி
அம்பல் மூதுர் அலரெழச்
சென்றது அன்றோ கொண்கன் தேரூர்!
(நற்.249)
இப்பாடல் "வரைவிடை மெலிந்தது' எனும் துறையின் கீழ் அமைந்துள்ளது. பாடலின் தொடக்கம், நெய்தல் நில கருப்பொருளான புன்னைமரத்தின் தோற்றத்தை மிக அருமையாகக் காட்சிப்படுத்துவதாக அமைகிறது. புன்னைமரம் இரும்பை ஒத்த வலிமையோடு கறுமை நிறத்ததாய் உள்ளது; அதன் அடர்த்தியான இலைகள் நீல நிறத்தனவாய் உள்ளன; அதன் பூக்கள் வெள்ளியை ஒத்த வெண்மை நிறத்தனவாய் உள்ளன; அப்பூக்களின் மகரந்தம் பொன் போன்று மஞ்சள் நிறத்தனவாய் தோற்றமளிக்கின்றன. செழித்து வளர்ந்த அம்மரத்தின் பூக்களில் உள்ள மகரந்தங்கள் பூமியெங்கும் பரவி மஞ்சளாய் தோற்றமளிக்கின்றன. இவ்வருணனையைப் புலவர் சிறப்பாக அமைத்துச் செல்கிறார்.
புன்னை மரத்தின் செழுமை தலைவியின் மல்லலஞ்சேரி (மல்லல் - செழிப்பு, வளம்) யின் செழிப்பை உணர்த்துவதாகக் கொள்ளலாம். கறுமை, நீலம், வெண்மை, மஞ்சள் என்ற முரண்பட்ட நிறங்களைக் கூறுவதன் மூலம் தலைவன்- தலைவியின் உணர்வைப் புரியாமல் முரண்பட்டு பழி தூற்றும் மக்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். "இதன்கண் இரும்பு, வெள்ளி, பொன் என்னும் இவை முரணணியைத் தோற்றுவித்துச் செய்யுளின்பம் மிகுதல் உணர்க' என்ற உரையாசிரியர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் கருத்தும் இங்கு எண்ணத்தக்கது.
புன்னை மரத்தை வருணித்த புலவர் அடுத்து ஒரு காட்சியைக் காட்டி, தலைவியின் உள்ளத்தைப் புலப்படுத்தும் திறன் பாராட்டுக்குரியது. புன்னை மரத்தின் பூக்களில், தேனுண்ண வண்டுகள் வருகின்றன. அவற்றின் மேல்புறத் தோற்றம் மஞ்சளும் கறுப்பும் கலந்த வரிகளோடு புலியின் மேல்தோற்றம் போன்றும் அவற்றின் பலத்த ரீங்காரம் புலியின் உறுமல் போன்றும் கேட்போர்க்கு அச்சம் தருவனவாய் உள்ளதாகப் புலவர் காட்டுவது அருமை.
நெய்தல்நிலத் தலைவன் (கொண்கன்) தலைவியைத் தேடி வருகிறான். வண்டுகளின் ரீங்காரமும் அவற்றின் தோற்றமும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளுக்குப் புலியின் வெளித்தோற்றமாகக் காட்சியளிக்கின்றன. இதனால் அஞ்சிய குதிரைகள் தலைவியின் ஊர் செல்லும் வழியை விட்டு விலகி பந்து போல் பாய்ந்து வேறுவழி நோக்கிச் செல்கின்றன.
இதை அறிந்த தலைவி வருந்துகிறாள். தலைவன், ஊரில் எழும் அலருக்கு அஞ்சி தன்னைச் சந்திக்காமல் சென்றுவிட்டானோ? குதிரைகள், வண்டுகளின் ஓசையை புலியின் உறுமலாகக் கருதி அஞ்சி வேறுவழி நோக்கிச் சென்றதோ என எதையும் தீர்மானிக்க முடியாமல் தலைவி கலங்கி நிற்பதாகக் காட்டுகிறார் புலவர். மேலும், தலைவன் கொடிய விலங்குகள் திரியும் காட்டுவழி வருவதை நினைத்து அவன் உயிருக்கு ஏதேனும் ஊறு விளையுமோ எனத் தலைவி அஞ்சும் குறிப்பும் இங்கே உணர்த்தப்படுவதாகக் கொள்ளலாம். புலவர் உலோச்சனாரின் கற்பனைத் திறத்தையும் நுண்மாண் நுழைபுலத்தையும் இப்பாடலின் வழி அறியமுடிகிறது.
- முனைவர் கா. ஆபத்துக்காத்த பிள்ளை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com