கலை உணர்வுக் கவலை!

""பாய் நீருமின்றிப் பருவ மழையுமின்றிக் காய்கின்ற வயற் பயிர்போல் வாடுகிறாய். பிரிந்து சென்றவரையே பெண்ணே நீ எண்ணி எண்ணிப் பெரும் துன்பத்தைப் பெறுகின்றாய்; நினைவை அவர்மேல் வைப்பதைக்
கலை உணர்வுக் கவலை!

""பாய் நீருமின்றிப் பருவ மழையுமின்றிக் காய்கின்ற வயற் பயிர்போல் வாடுகிறாய். பிரிந்து சென்றவரையே பெண்ணே நீ எண்ணி எண்ணிப் பெரும் துன்பத்தைப் பெறுகின்றாய்; நினைவை அவர்மேல் வைப்பதைக் கொஞ்சமேனும் நீக்கி வை என்கிறாய். என் அன்புத் தோழியே! எப்படியடி இயலும்?

கூத்தர்கள் வாழ்க்கை கொண்டாட்டமானது. ஆனால்,  சில நேரங்களில் இல்லாமையினாலே திண்டாட்டமானதும்கூட. வள்ளல்கள், ஊர் மக்கள் வழங்குவதை வைத்துக்கொண்டு சாப்பிடும் வழக்கம் அவர்களிடம் இல்லை. இடையீடு இல்லாமல் எல்லாவற்றையும் உண்டொழித்துவிடுவார்கள், ஊர் ஊராய்ச் செல்வார்கள்.

நீரின்கண் வசிக்கும் நெடுமுதலையின் வாய் பிளந்தது போல,  கூண்டுள்ள வண்டிகளைக் கொண்டவர்கள்; அவ்வண்டிகளில் தங்கள் பொருள்களை ஏற்றிக்கொண்டு எல்லோரும் நடந்து செல்வார்கள். உருள்கின்ற சக்கரங்கள் ஓசையிட, தட்டுகின்ற கிணைப்பறைத் தாளத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். உயரமற்ற வாழ்க்கையிலே ஊரூராய்ச் சென்றாலும் கலையுணர்வு மிகுந்த கூத்தர்கள் துயரமற்ற வாழ்வைத் துய்த்து வருபவர்கள். களிறென்னும் ஆண் யானையும், "பிடி' என்னும் பெண் யானையும் கலந்து நடப்பதுபோல ஆண்களும் பெண்களும் அகமகிழ்ந்து நடப்பார்கள். சுரநெறியாகிய பாலை வழி நடந்து பட்ட களைப்பை, மரநிழலில் தங்கி இளைப்பாறி மறுபடியும் நடப்பார்கள்.

நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட எருக்கம்பூ மாலை ஆண்கள் தலைகளில் அழகு செய்து கொண்டிருக்கும். ஒலியுடனே ஒளிபரப்பும் எரிதழல் போன்ற காட்டு "ஆவிரை' என்னும் ஆவாரம் பூக்கள். அப்பூக்களாலே அமைந்த மாலைகளைப் பெண்கள் அணிந்திருப்பார்கள். அம்மாலை விறலியரின் விம்மிய தனங்களில் விளையாடிக் கொண்டிருக்கும். அப்போது புல்லாங்குழல் ஓசை புறப்பட்டுக் கொண்டிருக்கும். அவ்வோசைதனை முழவின் தாளம் முத்தமிட்டுச் சேர்ந்திருக்கும். மேக முழக்கமொத்த பேரொலியைத் தண்ணீர்த் தேரைகள் எழுப்பிக் கொண்டிருப்பனவாகும். அதுபோல, "சில்லரி' என்னும் காற்சிலம்பின் பரல் ஒலிகள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

இந்த வகையில் செல்லும் கூத்தர்கள் ஒவ்வோர் ஊரிலும் கீற்றுக் கொட்டகையில் மூன்று நாள், நான்கு நாள் நாடகம் நடத்திவிட்டு வேறோர் ஊருக்கு வெளியேறிப் போய்விடுவார்கள்.

கூத்து நடந்த அந்தக் கொட்டகையைப் பார்க்கும் ஊர் மக்கள் ஏக்கம் படைத்துக் கவலையுறுவார்கள். அந்தநிலை உணர்வை நான் அடைந்திருக்கிறேன். கூத்து நடக்கும்போது மக்கள் குதூகலித்துக் கொண்டாடுவார்கள். அதுபோல அவர் அருகிலுள்ளபோது நான் அவரால் அடைந்த இன்பமும் மகிழ்வும் அளவற்றதாகும். 

நாடக நிகழ்ச்சி முடிவுற்றதும் கூத்தர்கள் அடுத்த ஊருக்கு அகன்று போய்விடுவார்கள். கூத்து நடந்த இடத்தைப் பார்த்துப் பார்த்து ஊர்மக்கள் இனம் புரியா ஏக்கத்தில் மனம் வாடுவார்கள். அத்தகைய நிலையிலே அகம்வாடும் நான், அவரை எண்ணாமல் இருந்திட இயலுமோ?'' 

இவ்வாறு தலைவி, தன் தோழிக்குக் கூறுவதாக அமைந்த இந்தப் பாடல் அகநானூறு, நித்திலக்கோவை-301-ஆவது பாடலாக அமைந்துள்ளது. ஒவ்வொருவர் உள்ளத்தையும் உணர்ந்தாய்ந்து எழுதிய புலவர் அதியன் 
விண்ணத்தனார் ஆவார்.

வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப்
படர்மிகப் பிரிந்தோர் உள்ளபு நினைதல்
சிறுநனி ஆன்றிகம் என்றி- தோழி! 
நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு
நீர்வாழ் முதலை ஆவித் தன்ன 
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து
ஊர் இஃது என்னாஅர் ஊறில் வாழ்க்கை 
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப்
பாடுஇன் தெண்கிணை கறங்கக் காண்வரக்
குவிஇணர் எருக்கின் ததர்பூங் கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
களரி யாவிரைக் கிளர்பூங் கோதை 
வண்ணம் மார்பின் வனமுலைத் துயல்வரச்
செறிநடைப் பிடியோடு களிறு புணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து
 இசைப்பச் கார்வான் முழக்கின் நீர்மிகைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மாணச்சீர் அமைத்து
சில்லரி கறங்கும் சிறுபல் வியத்தொடு
பல்லூர் பெயர்வனர் ஆடி ஒல்லென
தலைப்புணர்ந்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்
இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன்றலை மன்றம் காணின் வழிநாள் 
அழுங்கல் மூதூர்க்கு இன்னா தாகும் 
அதுவே மறுவினம் மாலை யதனால்
காதலர் செய்த காதல்
நீடின்று மறத்தல் கூடுமோ மற்றே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com