நற்றிணையாவது நல்லில்ல ஒழுக்கமே!

உலகத்தில் உள்ள உயிர்த்தொகுதிகளில் பறப்பன, ஊர்வன, நீந்துவன, தாவரங்கள், விலங்குகள், தேவர்கள், மனிதர்கள் என எழுவகை உண்டு.
நற்றிணையாவது நல்லில்ல ஒழுக்கமே!

உலகத்தில் உள்ள உயிர்த்தொகுதிகளில் பறப்பன, ஊர்வன, நீந்துவன, தாவரங்கள், விலங்குகள், தேவர்கள், மனிதர்கள் என எழுவகை உண்டு. இவற்றில் மனிதப் பிறப்பே மனத்தால் நடக்கும் மாண்புடையதாகும். "மனுஷ்' என வடமொழியும், "மேன்' என ஆங்கிலமும் வழங்கும் மனிதர் குறித்த பெயர்கள் மனத்தை அடியாகப் பிறந்தனவே. நல்லது இது, தீயது இது எனக் கண்டு நல்லவற்றின்பால் செலுத்துவதே அறிவு. அறிவு படைத்த மாந்தரிடத்திலேதான் அன்பின் அடிப்படையில் எழும் ஒழுக்க வரையறையுண்டு.  இவ்வண்ணம் ஒழுக்க வரையறையுள்ள தலைவன், தலைவியரின் வாழ்வைப் பற்றிய நூலே நற்றிணை. எட்டுத்தொகை நூல்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுவது நன்றிணை.  நல்லொழுக்க நெறிகளைப் பாடும் பாட்டுகள் நானூற்றைத் தொகுத்தவன் மன்னன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி என்பவனே.

கற்பெனப்படுவது சொல்திறம்பாமை

கற்பு என்னும் சொல் கல்+பு என விரியும். கல் போல உறுதியாய் நிற்கும்-திண்மையே கற்பு ஆகும்.  இரும்பு என்று நம் முன்னோர் திண்மைக்குப் பெயர் சூட்டாமல், கற்பு எனப் பெயர் சூட்டியதன் சிறப்பு எண்ணினால் நிமிர்வே தரும். இரும்பு வளையக் கூடிய மாழை (பொன்) - ஆனால், கல்லோ எத்தனை இடுக்கண்கள் வரினும் முடிந்தவரை தாங்கும்; தாங்க முடியாதபோது உடையுமேயன்றி, வளைந்து கொடுக்காத திண்மையுடையது. இதனையே திருவள்ளுவர், "கற்பென்னும் திண்மை' எனப் பெண்மைக்குத் தகுதி காட்டுவார். இத்தகைய கற்பொழுக்கம் "ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது' என்பார் பாரதியார். 

"கற்பெனப்படுவது சொல்திறம்பாமை'என்றாரே ஒளவையார் என மயங்குவோரும் உண்டு. மயக்கத்தை வேரறுப்பதுதானே உரையாசிரியர் கடமை. அதனைச் சிறப்புற மேற்கொண்ட நச்சினார்க்கினியர், "கற்பாவது இருமுதுகுரவர் (தாய்-தந்தையர்) கற்பித்த ஒழுக்கம்' என்பார். 

கம்பர் காட்டும் மக்கள், விலங்கு, தேவர்!

"கற்பின் நின்றன கால மாரியே' என்று கற்பின் மாண்பினைத் தெளிவுறுத்தும் கம்பரைக் கல்வியிற் பெரியன் என்பர், அக்கல்வியின் அடி கல் என்பதே எனஎண்ணிப் பார்த்து, எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன என்ற ஓல்காப்புகழ் தொல்காப்பியனார் தம் பீடெண்ணி மலைக்கிறோம். கம்பர் படைத்த காவியம் ஒரு நாடகமே. வாலியை  மறைந்து  நின்று கொன்றான் இராமன். ஏன் கொன்றான்?

வாலி தன் தம்பி சுக்ரீவனின் மனைவி தாரையை வவ்வி, தன் மனையில் வைத்தான். தன் எதிர்வரும் வீரரின் பலத்தினில் பாதியைப் பெறும் வல்லமை தவத்தால் பெற்றவன் வாலி. அதனால், வாலிமேல் மறைந்து நின்று அம்பைப் பாய்ச்சினான் இராமன். பாய்ந்த அம்பைக் கைகளில் பிடித்துக்கொண்ட வாலி, "ஐய! குரங்குக் குலத்தைப் படைத்த அயன், உணர்வு சென்றவழி செல்லும் ஒழுக்கமே குரங்குகளுக்குப் படைத்தான். ஆதலால் எமக்கு, உம்போன்ற கற்பு ஏதும் இல்லை' என்று எதிர்மறுத்தான்.

நன்று எது, தீது எது என்று தெரியாமல் வாழ்வதுதானே விலங்கின் இயற்கை? தக்கது இன்னது, தகாதது இன்னது என்று அறியாதவர் ஆயின் உயர்நிலைப்பட்ட மக்களும் விலங்கே. "நெறி புக்க ஒழுக்கம் உடையரேல் விலங்கும் தேவரே' என்று உயர்திணை அஃறிணைக்குள்ள வேற்றுமையையும், வேற்றுமையை மாற்றும் வழியையும் எளிதில் விளக்கினான் தருமத்துக்கு ஆணி என்று நின்ற இராமன்.

அஃறிணையும்  உயர்திணை ஆயிற்றே!

வீட்டின் கூரையில் கூடுகட்டி வாழும் புன்தலைச் சிறு குருவிதான் அது.  தன் சேவலோடு வாழ்ந்து, அதன் பயனாய்க் குஞ்சுகளை ஈன்று வளர்த்து வந்தது. அப்பெடையின் சேவல் குருவியோ, ஒருநாள் வெளியே பறந்து சென்று வேறு புலம் நோக்கிச் சென்றது. பிற பெட்டைக் குருவிகளோடு கூடியிருந்த பின்னர், தன் கூடுநோக்கித் திரும்பியது. திரும்பிவந்த அந்தக் குருவிச் சேவலின் உடல் மாறுபாட்டைக் கண்ட அதன் பெட்டைக் குருவி, கூட்டின் வாயிலை அடைத்துத் தடுத்தது தன் பிள்ளைக் குஞ்சுகளோடு. வெளியிலோ மழை, அதனால் குருவிச் சேவல் நனைந்து நடுங்கியது. அது அந்தி சாயும் நேரம். இருட்டும் ஒளியும் உரசும் மாலைப்பொழுது. குருவிச் சேவலின் வருத்தம் கண்ட பெட்டைக்குருவி இரங்கி, தன்னோடு உள்ளே வருமாறு அழைத்தது. அப்போது குதிரைபூட்டிய தேரும் தலைவியின் இல்லம் நோக்கி வந்தது. அதனால், தலைவியின் நெற்றியில் படர்ந்த பசலை நோய் படராமல் போயொழிந்தது என்றாள் தோழி. தலைவன் வினைமுற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து கூறியதை நற்றிணை 181-ஆவது பாடலில் புலவர் புலப்படுத்தியுள்ளார்.

குரங்கினத்துப் பிறந்து, பிறன்மனை நடந்த வாலி எங்கே? பறவை இனத்துப் பிறந்த சின்னஞ்சிறு குருவியின் கற்புத்திறம் எங்கே?

குரங்கினத்துக் கொற்றவனாயினும் வாலி தவம் மேற்கொண்டு மக்களினத்தைக் காட்டிலும் மேம்பட்டவனாக இருந்தான். எத்தவமும் மேற்கொள்ளாது கூரைக் கூட்டில் வாழும் பெட்டைக் குருவியோ, தன் குருவிச் சேவலின் உடல் மாறுபாடு கண்டு, அதனைத் தன் கூட்டுக்குள் விடவில்லை. குருவியினத்துக்கு ஒழுக்கம் என்ற ஒன்று இல்லையே.  

ஆயினும், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று மனிதர்க்கு விதித்த மேல்வரிச் சட்டத்தைப் பின்பற்றிய பெட்டைக் குருவியின் செயலைக் கண்ட மனிதரினம், கற்பினைக் காக்கத் தவறலாகாது என்பதைத்தானே தோழியின் கூற்று உறுதி செய்கிறது?  ஒழுக்க நெறிப்பட்ட வாழ்க்கையே விழுமியது; எல்லோரும் ஏற்றுப் போற்றும் பெருமையது. 

நான் விலங்கே  என்று  ஒப்புக் கொடுத்தும்,  தம்பியின் தாரத்தை - தாரையைத் தன் அரண்மையில் வைத்திருந்த வாலி எங்கே?  வாலியைப் போலத் தனக்கும் வால் இருந்தாலும், திண்மையால் ஊடி,  தன் குருவிச் சேவலைக் கூட்டுக்குள் விடாத கற்பு எங்கே. அஃறிணையாயினும் குருவி உயர்திணையாய் உயர்ந்துவிட்டதே.

நற்றிணை முல்லைப் பாட்டான (உள்இறைக் குரீஇக் கார்அணல் சேவல்) 181-ஆவது பாடலை யாத்த புலவர் பெயர் தெரியவில்லை. என்றாலும், கற்புத் திண்மை உலகில் உள்ளவரை இப்பாட்டை ஆக்கிய புலவர்தம் ஒழுக்க விழுப்பத்தை எண்ணிப் போற்றுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com