இமயமலையும் புலவர்களும்! 

சங்கப் புலவர்கள் இன்பத் தென்றல் போல் எங்கும் சென்றனர்; பழம் தேடும் பறவை போல் திசைகளில் பறந்தனர். அவர்கள் பொருள் பெறவும் போயினர்; அறிவு நாடியும் நடந்தனர். எனவேதான் திருவள்ளுவர்,
இமயமலையும் புலவர்களும்! 

சங்கப் புலவர்கள் இன்பத் தென்றல் போல் எங்கும் சென்றனர்; பழம் தேடும் பறவை போல் திசைகளில் பறந்தனர். அவர்கள் பொருள் பெறவும் போயினர்; அறிவு நாடியும் நடந்தனர். எனவேதான் திருவள்ளுவர்,

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துனையும் கல்லாத வாறு. 

என்று அறிவுறுத்தியுள்ளார் (குறள்- 397). வளமுயர் முதிய புலவர் மட்டுமின்றி, இளம் புலவர்களும் அருங்காட்டில் நடந்தனர்; பெருமலைகள் கடந்தனர், தங்கு புகழ் வள்ளலைக் கண்டனர்; அறிவு பொங்கும் பாடல் பாடினர்; பரிசு பெற்றனர், பின்பு இல்லம் திரும்பினர். பரிசைப் பிறருக்குப் பங்கிட்டு அளித்தனர். இதனைப் புறநானூற்றுப் புலவர் கோவூர் கிழார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளார். இந்தக் கருத்தை உணர்த்தும் பாடல் இது:

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி (புறநா-47)

பயணம் செய்வது இன்று மிகவும் எளிமையான செயல். வசதியான நெடுஞ்சாலைகள், மலையைக் குடைந்து செல்லும் சுருங்கைகள், மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி, வானூர்தி முதலியவை உள்ளன. இவை பயணத்தை எளிமையாக்கிவிட்டன.

ஆனால், எந்த வசதியுமே இல்லாத அக்காலத் தமிழர்கள் நெடுந்தூரப் பயணத்தை மேற்கொண்டனர்; பல்வேறு இடையூறுகளைக் கடந்தும் சென்றுள்ளனர்; பட்டினி கிடக்க வேண்டிய நிலையையும் ஏற்றுக்கொண்டு நடந்திருக்கின்றனர்.

இமயமலைக்குத் தமிழகத்திலிருந்து செல்வதற்கு அன்று பல ஆண்டுகள் ஆகியிருக்கும். இருந்தாலும் மனத்துணிவு மிகவும் கொண்ட தமிழர், அந்த இமயமலை மீதும் ஏறியுள்ளனர் எனத் தெரிகிறது. கொள்ளை அழகுடைய வெள்ளிப் பனிபடர்ந்த மலை முடிகளையும் கண்டனர்; வியந்தனர்; மகிழ்ந்தனர்; பாட்டில் பொதித்தனர். 

புலவர் காரிக்கிழார்,  "வடாஅது பனிபடர் நெடுவரை வடக்கும் (புறம்-6) என்கிறார். இவர் பனிபடர் நெடுவரை என்று சொன்னது கவனிக்கத்தக்கது. காரிகிழார் மட்டுமின்றி, புலவர்கள் பலரும் இமயமலைக்குச் சென்றிருப்பார்களோ எனக் கருதத் தோன்றுகிறது. அதற்கான இலக்கியச் சான்றுகள் பல உள்ளன. 

இறைவன் வாழும் உறைவிடமாகப் போற்றப்பட்ட மலை இமயமலை; அங்கு "யாக்' என்ற விலங்கு வாழ்கிறது. இதைக் கவரி என்று நம்மவர் அழைத்தனர். இந்தக் கவரியைப் பற்றிய செய்தி, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே விரிவாகப் பேசப்பட்டது போலும்! (தொல்.மரபியல் 17, 37). 

இமய மலையில் உலவிய கவரியை புலவர் முடமோசியார் (புறம்-132) பாடியுள்ளார். மேலும், புலவர் குமட்டூர்க் கண்ணனார்  (பதிற்றுப்பத்து பா-11), திருவள்ளுவர் (குறள்-969) எனப் பலரும் பாடியுள்ளனர். 

இவர்கள் அனைவரும் இமயமலைக்குச் சென்றார்களா, அங்கு உலவும்  அரிய விலங்கான கவரியைப் பார்த்தார்களா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனால், எல்லையில்லாத் தொல்லைகளைத் தாண்டி, நீண்ட நெடுவழி கடந்து, எண்ணற்ற துன்பங்களிலிருந்து தப்பிப் பிழைத்து நம் சங்கச் சான்றோர் வாழ்ந்திருக்கின்றனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com