கடைமொழி மாற்று

கொன்றை மலர் தரித்தான் கோபாலன், கோலெடுத்து நின்று குழலூதினான் நீள்சடையோன்-பொன்திகழும் அக்கணிந்தான் மாயன், அரவணையில் கண் வளர்ந்தான் சிக்கலிலே வாழும் சிவன்.
கடைமொழி மாற்று

"கடைமொழி மாற்று' என்பது, பாடலின் 
இறுதியில் வரும் சொற்றொடர்களைப் 
பாடலின் முன்னே சேர்த்துப் பொருள் கொள்ளுதல். 
இந்த உத்தியைப் பயன்படுத்தி காளமேகப் புலவர்
சில பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் 
இரு பாடல்களைக் காண்போம்.

கொன்றை மலர் தரித்தான் கோபாலன், கோலெடுத்து நின்று குழலூதினான் நீள்சடையோன்-பொன்திகழும் அக்கணிந்தான் மாயன், அரவணையில் கண் வளர்ந்தான் சிக்கலிலே வாழும் சிவன்.

இந்தப் பாடலுக்கு அப்படியே பொருள் கொண்டால் முரண்பாடான கருத்தே கிடைக்கும். அதாவது, கோபாலன் கொன்றை சூடியதாகவும், சிவபெருமான் மாடு மேய்க்கக் கோலெடுத்ததாகவும், கண்ணன் ருத்திராட்சம் (அக்கணி) அணிந்ததாகவும், சிக்கலில் வாழும் சிவன் பாம்பணையில் பள்ளிகொண்டதாகவும் பொருள் கிடைக்கும்.

"சிங்கலிலே வாழும் சிவன் கொன்றை மலர் தரித்தான். கோபாலன் கோலெடுத்து நின்று குழலூதினான். நீள் சடையோன் பொன் திகழும் அக்கணிந்தான். மாயன் அரவணையில் கண் வளர்ந்தான்' என்பதே இப்பாடலின் நேரான- உண்மையான பொருள். மற்றொரு பாடல்:

ஆயனுக்குக் கண் மூன்றாம் ஆதிசிவனுக்கு இருகண்
மாயனுக்குச் செங்கையிலே மான் மழுவாம்-நேயமுடன்
சங்கரர்க்குச் சங்க ஆழிதான் மாலுக்கு ஆலமாம்
நங்கையிடத் தாற்கு ஆகும் மண்.

கண்ணனுக்கு மூன்று கண்கள், சிவனுக்கு இரண்டு கண்கள், திருமாலின் கையில் மான், மழு உள்ளன. சங்கரனிடம் சங்கு சக்கரம் உள்ளன. திருமாலின் உணவு விஷம். சிவன் உண்டது மண் என்று முரண்பாடான கருத்தைத் தருகிறது இப்பாடல்.

உண்மையில் உரிய பொருளை உணர்ந்துகொள்ள இந்தப் பாடலைப் பின்வருமாறு மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

"நங்கையிடத்தாற்கு ஆகும் ஆலம், மண் ஆயனுக்கு, கண் மூன்றாம் ஆதி சிவனுக்கு, இருகண் மாயனுக்கு, நேயமுடன் சங்கரர்க்குச் செங்கையிலே மான் மழுவாம், சங்க ஆழிதான் மாலுக்கு'.

இப்பாடலில் கடைமொழி மாற்று உத்தியைப் பயன்படுத்தி சிவனுக்கும் திருமாலுக்கும் உரிய உணவு, ஆயுதம், கண்கள் ஆகிய செய்திகளைக் கூறியுள்ளார் காளமேகப் புலவர். முரண்பாடான கருத்தைத் தரும் பாடலாகக் "கடைமொழி மாற்று' அமைந்தாலும், கருத்தைக் கவரும் பாடல்களாக அல்லவா திகழ்கின்றன! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com