இந்த வாரம் கலாரசிகன் - (16-01-2022)

சென்னை கோட்டூர்புரம் வழியாகப் பயணிக்கும்போது,  நந்தனத்திலுள்ள கே.ஜீவபாரதி வீட்டில் ஒரு முறை எட்டிப்பார்த்து,  பழைய பாணியில் கூறுவதாக இருந்தால் "வந்தனோபசாரம்' செய்துவிட்டுச் செல்வது எனது வழக்கம்.
இந்த வாரம் கலாரசிகன் - (16-01-2022)

சென்னை கோட்டூர்புரம் வழியாகப் பயணிக்கும்போது,  நந்தனத்திலுள்ள கே.ஜீவபாரதி வீட்டில் ஒரு முறை எட்டிப்பார்த்து,  பழைய பாணியில் கூறுவதாக இருந்தால் "வந்தனோபசாரம்' செய்துவிட்டுச் செல்வது எனது வழக்கம். வாசலில் நின்று பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு அகல்வதும் உண்டு; அவரது வீட்டுக்கு வெளியே உள்ள முற்றத்தில் நாற்காலியைப் போட்டுச் சற்றே அளவளாவிவிட்டுச் செல்வதும் உண்டு.

அப்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் தேதி அவரை சந்தித்தபோது, தனது அறையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து தந்தார்.  "குமாரமங்கலம் தியாக தீபங்கள்' என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். ""அட, இந்தப் புத்தகத்தை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேனே...'' என்று சொன்னேன்.

""நீங்கள் படித்திருக்கலாம். ஆனால், "தினமணி' நாளிதழில் இந்தப் புத்தகத்தின் மதிப்புரை இதுவரையில் வரவில்லை. தமிழகத்தின் முதல்வரான முதல் தமிழரின் வரலாறு எல்லோருக்கும் தெரிய வேண்டும்'' என்கிற வேண்டுகோளுடன் அந்தப் புத்தகத்தில் தேதியுடன் கையொப்பமிட்டுத் தந்தார்.
அந்தப் புத்தகத்தை மீண்டும் ஒருமுறை படித்தபோது  நான் பெற்ற அனுபவம், எதையும் இரண்டு முறை படிக்கும்போதும், யோசிக்கும்போதும்தான் மறைந்து கிடக்கும் பல புதிய செய்திகள் நமது கண்களுக்குப் புலப்படும் என்பதுதான்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியவர்; இந்து அறநிலையச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்;  திருவள்ளுவருக்கு அஞ்சல்தலை வெளியிட வழிகோலியவர்; நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் திருவுருவப்படம் திறந்து வைக்கப்படக் காரணமானவர் என்று டாக்டர் சுப்பராயனின் பங்களிப்புகள் ஏராளம்.

ஒன்றுபட்ட சென்னை ராஜதானியின் பிரதமராக (முதல்வரை அப்போது அப்படித்தான் அழைப்பார்கள்) இருந்தவர். 1947 மார்ச் 24-ஆம் தேதி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில் அமைந்த சென்னை மாகாண அமைச்சரவையில், சற்றும் தயங்காமல்  உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார் என்பதை நாம் வியப்புடன் பார்க்கிறோம். அதற்கு முன்னால் ராஜாஜி அமைச்சரவையிலும், (1937-39) சென்னை மாகாண சட்ட அமைச்சராக இருந்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் தந்தை டாக்டர் சுப்பராயன் காங்கிரஸ் உறுப்பினராகவும், அவருடைய மகள் பார்வதி கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராவும் இருந்தது அப்போது  பரபரப்பாகப் பத்திரிகைகளில் பேசப்பட்டது. 1959-இல் ஜவாஹர்லால் நேருவின் அமைச்சரவையில் டாக்டர் சுப்பராயனும், 1971 இந்திரா காந்தி அமைச்சரவையில் அவருடைய மகன் மோகன் குமாரமங்கலமும், 1991 நரசிம்ம ராவ், 1998-இல் வாஜ்பாயி அமைச்சரவைகளில் அவருடைய பெயரன் ரங்கராஜன் குமாரமங்கலமும் பங்குபெற்றது அந்தக் குடும்பத்தின் தலைமுறைகள் கடந்த ஆளுமையின் வெளிப்பாடு.

ஏறத்தாழ அரை நூற்றாண்டுத் தமிழக, இந்திய அரசியல் வரலாற்றை "குமாரமங்கலம் தியாக தீபங்கள்' புத்தகம் பதிவு செய்கிறது. தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள், உட்கட்சிப் போட்டிகள், கருத்து வேறுபாடுகள் அனைத்துமே விரிவாக அலசப்பட்டிருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. தமிழக காங்கிரஸ் கட்சியின் வரலாறும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறும் ஒருசேர பதிவு செய்யப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.

------------------------------------

கீழடி அகழாய்வுகள் ஒட்டுமொத்த உலகத்தையே தமிழகம் நோக்கிப்  பார்க்க வைத்திருக்கும் தருணத்தில், அதற்கு எள்ளளவும் குறைவில்லாதது ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் என்பதை தனது புத்தகத்தின் மூலம் நிறுவ முற்பட்டிருக்கிறார் முனைவர்  பெ.ராஜேந்திரன். அவரது புத்தகத்தின் பெயர் - "ஆதிச்சநல்லூர் அகழாய்வும் மக்கள் வாழ்வியலும்'.

முதுமக்கள் தாழி, ஆயுதங்கள், அணிகலன்கள், உலோகப் பயன்பாடு போன்றவைதான் எந்தவொரு பண்பாட்டின் மரபுகளையும் பறைசாற்றும் தொல்கலன்கள். மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் சின்னங்கள், பொன், இரும்பு, வெண்கலம் ஆகிய மூன்று உலோகங்களின் பயன்பாடுகள் குறித்த அரிய தரவுகள் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன.

ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்டிருக்கும் நான்கு ஆய்வுகளைப் பட்டியலிட்டு, உரிய ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறார் முனைவர் பெ. ராஜேந்திரன். அணிந்துரை வழங்கியிருக்கும் பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. இருதயராஜ் குறிப்பிடுவதுபோல, பாண்டிய மன்னர்தம் வாழ்வியல் தரவுகள், அதுகுறித்த தொல்பொருள் ஆதாரங்கள், மெய்க்கீர்த்திகள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், செப்பேடுகள், காசுகள், நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவை குறித்து, தனித்தனி நூலாக ஆதிச்சநல்லூரிலுள்ள  ஆதாரங்களுடன் வெளியிட வேண்டும்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் குறித்த தரவுகள் திருடப்பட்டிருக்கின்றன என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அது குறித்த அறிக்கைகள் மத்திய-மாநில அரசுகளிடம் இருக்கின்றன. அவை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். இந்த ஆய்வுகள் ஓரளவுக்கு அந்தக் குறையைத் தீர்க்கிறது என்கிற அளவில் ஆறுதல்.

இந்தப் புத்தகத்துக்கு எழுத்தாளர் சோ.தர்மன் எழுதியிருக்கும் வாழ்த்துரையை எத்துணை பாராட்டினாலும் தகும். அந்த வாழ்த்துரை சொல்லும்  செய்திகளும் ஏராளம்.

------------------------------------

எனக்குத் தெரிந்த கவிஞர்களின் நல்ல கவிதை வரிகளைப் படித்தால் உடனடியாக அவர்களை அழைத்து, அதை அவர்களிடம் படித்துக் காட்டி மகிழ்வதில் எனக்கு அலாதி ஆனந்தம். அப்படித்தான் சமீபத்தில்  தங்கம் மூர்த்தி எழுதிய கவிதை வரிகளைப் படித்தபோது உடனடியாக அவரை அழைக்க வேண்டும், எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று 
விரும்பினேன். 

எங்களது புதுக்கோட்டை நிருபர் ஜெயப்பிரகாஷிடம் அவரது தொடர்பு எண்ணை வாங்கி, அழைத்து, கவிதையை அவரிடமே படித்துக் காட்டி ரசித்த பிறகுதான் எனது மனம் திருப்தி அடைந்தது. அப்படி நான் கவிஞர் தங்கம் மூர்த்தியை விரும்பி அழைத்து, ரசித்த கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கால்மேல் கால் போட்டு 
பேப்பர் படித்தபடி
அருந்திய தேநீரின் 
கடன் அடைக்காதவன்,
ஓட்டைக் குடை பிடித்து
கூனிக் குறுகி
மது வாங்கிச் செல்கிறான்
ரொக்கம் கொடுத்து!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com