இந்த வாரம் கலாரசிகன் - (30-1-2022)

கவிஞர் சிற்பிக்கு "பத்மஸ்ரீ' விருது வழங்கி கெளரவித்திருக்கிறது மத்திய அரசு. விருது வழங்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகும்போது, நான் அவர் எழுதிய "இதுவும் ஒரு கேள்விகளின் புத்தகம்' நூலைப் புரட்டிப் படித
இந்த வாரம் கலாரசிகன் - (30-1-2022)


கவிஞர் சிற்பிக்கு "பத்மஸ்ரீ' விருது வழங்கி கெளரவித்திருக்கிறது மத்திய அரசு. விருது வழங்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகும்போது, நான் அவர் எழுதிய "இதுவும் ஒரு கேள்விகளின் புத்தகம்' நூலைப் புரட்டிப் படித்துக் கொண்டிருந்தது தற்செயலான நிகழ்வு.

சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெருடா வினாக்களின் வடிவத்தில் படைத்த ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு "த புக் ஆஃப் கொஸ்டின்ஸ்' (கேள்விகளின் புத்தகம்). அந்தப் பாணியில் பல கவிஞர்கள் பல கவிதைக் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். கேள்விகளின் அடிப்படையில் கவிஞர் கண்ணதாசன் திரைப்பாடல்களை அமைத்ததற்குக்கூட இதுதான் பின்னணியோ என்னவோ, நமக்குத் தெரியாது.

அந்தப் பாணியில் கவிஞர் "சிற்பி' பாலசுப்பிரமணியம் கவிதைக் கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கிறார். 200 கேள்விகள் அவரால் எழுப்பப்படுகின்றன. ஒவ்வொன்றும் சுவாரசியமானவை மட்டுமல்ல, அவற்றில் பல நம்மில் பலரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மின்னல் வெட்டாய் சிந்தித்து மறந்தவையும்கூட.

தென்னாப்பிரிக்காவில் தங்கம் கொட்டிக் கிடப்பது, இயற்கை கருப்புக்குச் செய்த கனத்த மரியாதையா?; தாயைப்போல் பிள்ளை என்பது உண்மையானால், கடலின் உப்பு மழையில் இல்லையே ஏன்?; முகக்கவசம் கொண்டு கொள்ளை நோய் எதிர்ப்பவர்கள் எக்கவசம் கொண்டு ஊழல் நோய் எதிர்ப்பார்கள்?; சேர சோழ பாண்டியர் கையில் நெல்லிக்கனி இருந்திருந்தால், ஒளவைக்கு அது கிடைத்திருக்குமா?; எந்த தேசத்துக் கடற்கரையோரம், அழகிய கடற்கன்னிகள் விரும்பி வலம் வருகிறார்கள்?; கடல் உப்பாக இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் மிச்சமாக இருந்திருக்குமா?; நடுக்கடலில் புயலில் சிக்கிய கப்பல் பயணிகளுக்குக் கரை பக்கமா, கடலின் அடியிலுள்ள தரை பக்கமா?; ரோபோ மனிதர்கள் ஆளும் நாளைய உலகில், நிஜ மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்குமா? இதுபோல 200கேள்விகள்.

கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி தனது அகவை 86இல் அடியெடுத்து வைத்தார் கவிஞர் சிற்பி. சிற்பி அறக்கட்டளையின் வெள்ளிவிழா ஆண்டாகவும் அமைந்தது 2021. கவிஞர் சிற்பியின் வாசகர்களுக்கான பிறந்த நாள் பரிசு "இதுவும் ஒரு கேள்விகளின் புத்தகம்'.

-----------------------------------------------------

இந்தப் புத்தகத்தை இத்தனை நாளும் நாம் ஏன், எப்படிப் படிக்காமல் இருந்து விட்டோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் தருணங்கள் உண்டு. அந்தப் பட்டியலில் இணையும் புத்தகங்களில் ஒன்றுதான் "ஜெயில்... மதில்... திகில்!'.

சிறைச்சாலைக்குச் சென்று வந்தவர்கள் தங்களது சிறைச்சாலை அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சிறைச்சாலையில் பணியாற்றிய அதிகாரிகளில் பலர் தங்களது கசப்பான, மகிழ்ச்சியான, சுவாரசியமான சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. பணி ஓய்வு பெறும்போது, அநேகமாக அவர்கள் சோர்ந்து போய், வெறுப்பு மனநிலைக்கு வந்துவிடுவார்கள் போலும். சில விதிவிலக்குகள் இல்லாமலா இருக்கும்?

தனது 39 ஆண்டுகால சிறைத்துறைப் பணி அனுபவங்களை பருவ இதழ் ஒன்றில், அதிகாரி ஜி.ராமச்சந்திரன் தொடராகப் பதிவு செய்தபோது, அதை நான் படிக்கவில்லை. விடுபட்டுவிட்டது. அதுவே புத்தக வடிவம் பெற்று விமர்சனத்துக்கு அனுப்பப்பட்டு ஓராண்டு ஆகப்போகிறது. இப்போதுதான் படிக்க முடிந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இருவரும் இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை மட்டும் வழங்கவில்லை, அவர்களது சிறை அனுபவத்தின்போது அதிகாரியாக இருந்த ஜி.ராமச்சந்திரனுடனான அனுபவங்களையும் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர்கள் இருவர் அவரது கண்காணிப்பில் சிறையில் இருந்திருக்கிறார்கள். அதுகுறித்த சுவையான செய்திகளும் இதன் மூலம்தான் சிறைச்சாலை சுவர் கடந்து வெளியே கசிகிறது.

ஜி.ராமச்சந்திரனின் தந்தை கோபாலன் நாயர் கோவை மத்திய சிறைச்சாலையில் காவலராக ஏறத்தாழ 35 ஆண்டுகள் பணிபுரிந்தவர். அதனால் ஜி.ராமச்சந்திரனின் வாழ்க்கை, பிள்ளைப் பருவத்திலிருந்தே சிறைச்சாலையுடன் பின்னிப் பிணைந்துவிட்டது. காவலரின் மகன் இன்ஸ்பெக்டர் ஆவதை திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம். இங்கே காவலரின் மகன் சிறைத்துறை ஐ.ஜி.ஆக உயர்ந்து, தந்தைக்குப் பெருமை சேர்த்த வரலாறு பதிவாகியிருக்கிறது.

சிறைச்சாலை அனுபவத்தில் ஜி.ராமச்சந்திரன் எதிர்கொண்ட சவால்கள், பிரச்னைகள், கைதிகளின் விசித்திரப் போக்குகள் போன்றவை மர்ம நாவல் படிப்பதைப் போல விறுவிறுப்பாக இருக்கின்றன. காவலர்கள் என்று சொல்கிறோம், கைதிகள் அவர்களுக்குப் பயப்படுவதைவிட, அந்தக் கைதிகளைப் பாதுகாப்பதற்குச் சிறைச்சாலைக் காவலர்கள் அதிகமாக பயப்படுகிறார்கள் என்பதை இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிந்தது.

தி.மு. க. தலைவர் கருணாநிதி சிறையில் இருந்த நேரம். பிரதமராக இருந்த வாஜ்பாய் அவரிடம் பேச விரும்பினார். பிரதமராகவே இருந்தாலும் சிறையில் கைதியாக இருக்கும் ஒருவரிடம் பேச அவருக்கு அனுமதி இல்லை என்கின்றன சிறைச்சாலை விதிகள். விதிகளை மீற தி.மு.க. தலைவர் விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஜி.ராமச்சந்திரன். அதேபோல ஜெயலலிதா, சசிகலா இருவரும் சிறையில் இருந்தபோது நடந்தவையும் சுவாரசியமான பதிவுகள்.

காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறைச்சாலை அதிகாரியாக இருந்தவர் ராமச்சந்திரன். அது தொடர்பான 49, 50 அத்தியாயங்கள் நெகிழவைப்பவை.

"ஜெயேந்திரரின் பாதுகாப்பு குறித்து எந்த ஓர் அறிவுறுத்தலும் அரசுத் தரப்பில் இருந்து வரவில்லை. ஆனால், அவரை பத்திரமாகப் பாதுகாக்கச் சொல்லி என்னிடம் வெளியில் இருந்து பலரும் தொலைபேசியில் பேசினார்கள். அதில் நான் எதிர்பாராத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது' என்று கூறி நிறுத்துகிறார் ராமச்சந்திரன். அடுத்த அத்தியாயத்தில் அந்தப் புதிரை அவிழ்க்கிறார்.

ஜெயேந்திரரை பத்திரமாக பாதுகாக்கச் சொன்னவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. "எங்களுக்குள் கொள்கை முரண்கள் இருந்தாலும், அவர் ஏராளமான மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர். அதனால், அவரை காக்க வேண்டியது அவசியம்' என்று தி.மு.க. தலைவர் விடுத்த வேண்டுகோளையும் பதிவு செய்கிறார்.

"சிறை வாசிகளும் மனிதர்கள்தான்' என்று தனது புத்தகத்தை முடித்திருக்கிறார் ஜி.ராமச்சந்திரன். மதிலுக்குள் இருக்கும் ஜெயில் குறித்த புரிதலை ஏற்படுத்துகிறது ஜெயில்... மதில்... திகில்!

-----------------------------------------------------

கடந்த அக்டோபர் மாதம் "இனிய உதயம்' இலக்கியத் திங்களிதழில் வெளிவந்த கவிஞர் பத்மா வெற்றியின் கவிதை வரிகள்தான் இந்த வாரத் தேர்வு.
கூண்டுக்கிளியும்
தொட்டி மீனும்
பேசிக்கொண்டன
"அனார்கலியை
உயிரோடு
புதைத்து விட்டார்களாமே?'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com