சீருடைச் சிந்தனை

சங்க காலத்தில் கல்வி கற்கத் தனியே பள்ளிகள் எதுவுமில்லை. ஆதலால், மாணாக்கருக்கான சீருடை என்ற கருத்து அப்பொழுது எழவில்லை என்றாலும், "சீருடைச் சிந்தனை' இருந்தது. 


சங்க காலத்தில் கல்வி கற்கத் தனியே பள்ளிகள் எதுவுமில்லை. ஆதலால், மாணாக்கருக்கான சீருடை என்ற கருத்து அப்பொழுது எழவில்லை என்றாலும், "சீருடைச் சிந்தனை' இருந்தது. 

இரவலர்கள் தமது வறுமை நிலையைப் போக்கிக் கொள்ள வேண்டிப்   புரவலர்களாகிய அரசர்களையும், வள்ளல்களையும் அவ்வப்பொழுது நாடிச்சென்றனர். 

அவ்வாறு செல்கையில், சீரையுடன் (கந்தலாடை) செல்வர்.  வறுமைமிக்க இந்த இரவலர்களைக் கண்டதும் புரவலன் செய்யும் முதல் வேலையே, அவர்களின் கந்தல் துணியை அகற்றச் செய்து, புத்தாடை அளிப்பதுதான். 

இதுகுறித்துக் கூறும் சிறுபாணாற்றுப்படை,
நீசில மொழியா அளவை மாசில்
காம்பு சொலித் தன்ன அறுவை உடீஇ 
(அடி: 235, 236) 

என்கிறது. அதாவது, மாசு இல்லாததும், மூங்கிலின் மெல்லிய உட்பட்டையை உரித்தாற் போன்றதுமான உடையினைக் கொடுத்து உடுக்கச் செய்வான் எனப் பாடுகிறது. 

பெரும்பாணாற்றுப்படை இலக்கியமோ, வள்ளல் தொண்டைமான் இளந்திரையன் பாலாவி போன்று மெல்லிய நூலால் நெய்த துகில்களைத் தந்து உடலுக்குப் பொருந்துமாறு உடுக்கச் செய்வான் என்கிறது (அடி: 467-470).

வள்ளல்கள் தரும் ஆடை புகை போன்று நுண்மையானதாக இருக்கும் என்று புறநானூறும் (பா.388), பாம்பு உரித்த சட்டையைப் போன்ற மெல்லிய ஆடையை, வள்ளலாகிய கரிகாற் பெருவளத்தான் பொருநன் அணியத் தந்தான் எனப் பொருநராற்றுப்படையும் (அடி - 83) கூறுகின்றன. 

சீருடை என்பதற்குச் சிறந்த உடை என்றும், அணிந்தவர்களிடையேயுள்ள வேறுபாட்டினை வெளிக்காட்டாத உடை என்றும் பொருள் கொள்ளலாம். 

பொருநராற்றுப்படைக்கு உரை எழுதியவர்களுள் ஒருவரான பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார், சீருடை குறித்துப் பின்வருமாறு விளக்கவுரை (அடி: 79 - 83) தருகிறார். 

இரவலனின் நல்கூர் நிலையினைப் பிறர் அறியத்தூற்றுவனவும், செல்வமுடையாரில் தன்னைப் பெரிதும் வேறுபடுத்திக் காட்டுவனவும் கந்தல் ஆடைகளே ஆதலின், அவற்றைப் போக்கிச் சிறந்த ஆடைகளை உடுக்கச் செய்தவழி, இரவலன் தன் கேளிரோடு கேளிராய் நாணமின்றிப் பழக ஏதுவாதலான், இரவலனின் ஏழ்மையுணர்ச்சியை மாற்ற, பண்புடைய வள்ளல்கள் முதன்முதலாக இச்செயலைச் செய்தலைப் பல இலக்கியங்களிலும் காணலாம். 

முற்கால வள்ளல்கள் ஏழைகளுக்குப் புதிய உடைகளைத் தந்து, அவர்களுக்கிடையே வேறுபாடில்லாத நிலையை ஏற்படுத்த முயன்றனர். இதுவே, பிற்காலத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பிற கல்வி நிறுவன மாணாக்கரிடையே உள்ள வேறுபாட்டைக் களைய உதவும் சீருடை என்ற கல்வியாளர்களின் சிந்தனையாக மாறியது எனக் கூறமுடிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com