இந்த வாரம் கலாரசிகன் - (19-11-2023)

திருவண்ணாமலை ஓர் ஆன்மிகத் திருத்தலம் மட்டுமல்ல, இலக்கியவாதிகள் பலர் வாழும் திருத்தலமும்கூட.
இந்த வாரம் கலாரசிகன் - (19-11-2023)


திருவண்ணாமலை ஓர் ஆன்மிகத் திருத்தலம் மட்டுமல்ல, இலக்கியவாதிகள் பலர் வாழும் திருத்தலமும்கூட. அதிலும் குறிப்பாக, திருக்குறள் பரப்பும் திருக்கூட்டம் ஒன்று திருவண்ணாமலையில் ஆற்றிவரும் தொண்டு குறித்துப் புத்தகமே எழுதலாம்.
கடந்த 18 ஆண்டுகளாக, "தமிழ்ச் செம்மல்' ப. குப்பன் தலைமையில் திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் திருக்குறள் தொண்டு மையத்தின் பணிகளைப் பார்த்து வியக்காத தமிழறிஞர்களே இல்லை எனலாம். தொண்டு மையத்தில் நாள்தோறும் ஒரு திருக்குறளும் அதற்குரிய பொருளும் எழுதப்பட்டு வரு
கிறது என்பது மட்டுமல்ல அதன் சிறப்பு.
ஆங்கில மாத முதல் வெள்ளிக்கிழமை மதில் வீதி, சனிக்கிழமை மாட வீதி, ஞாயிற்றுக்கிழமை மலை வலம் என்று தொடர்ந்து குறள் ஓதல் நடைபெறுகிறது. இதுவரையில் 183 மாதங்கள் எந்தவிதத் தொய்வுமில்லாமல் இந்தக் குறள் பணி நடந்து வருகிறது. 163 முழு
நிலவு நாள்கள் திருக்குறள் முற்றோதலும் நடக்கிறது. தொண்டு மையத்தின் சார்பில் அனுமதி பெற்று வீட்டுச் சுவர்கள், அலுவலக மதில் சுவர்கள், பள்ளிக்கூடச் சுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பார்வைபடும் இடங்களில் திருக்குறள் எழுதப்படுகிறது.
திருவண்ணாமலையில் மட்டுமல்ல, தமிழகத்தில், ஏன் தலைநகர் தில்லியில் நடந்தாலும்கூட, இலக்கிய நிகழ்ச்சிகளில் திருவள்ளுவர் வேடமிட்டு "தமிழ்ச்செம்மல்' ப. குப்பன் காட்சியளிப்பதை நாம் பார்க்கலாம். அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு, முழு நேரமாகத் திருக்குறள் பரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுவிட்டவர் குப்பன்.
அவரது "இன்று ஓர் இன்னுரை' என்கிற புத்தகம் எனக்கு அனுப்புவிக்கப்பட்டிருந்தது. கொவைட் 19 தீநுண்மி பரவியிருந்த கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில், அவர் யூ-டியூபில் தொடர்ந்து 100 நாள்கள் ஆற்றிய உரையிலிருந்து 50 உரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது. வள்ளுவப் பேராசான் வள்ளற்பெருமான் இருவர் குறித்து மட்டுமல்லாமல், இலக்கிய, இதிகாச மேற்கோள்களும் நல்லபல தகவல்களும் அவரது சிற்றுரையின் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது.  
ஒளவைப் பிராட்டியின் "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிது' என்பதற்கு, அனுமனைக் காகுத்தன் "பொருத்துறப் புல்லுக' என்று கூறித் தழுவிக் கொண்டதைச் சுட்டிக் காட்டுகிறார் என்றால், அவரது உரையின் எளிமையும் ஆழமும் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
""ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான "குண்டலகேசி' முழுவதும் கிடைக்காமல், ஒருசில பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கும் காப்பியம். அவற்றுள் "மறுப மதியும்' என்னும் பாட்டினை எடுத்து விளக்கம் தந்திருக்கிறார்'' என்று குப்பன் குறித்து அணிந்துரை வழங்கியிருக்கும் தெ.ஞானசுந்தரம் குறிப்பிடுவதிலிருந்து "இன்று ஓர் இன்னுரை' எத்தகையது என்பதை நாம் சொல்லி விளக்கத் தேவையில்லை.
"தமிழ்ச்செம்மல்' குப்பனையும், திருவண்ணாமலை நண்பர்கள் இந்திரா ராஜன், சண்முகம், தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன் உள்ளிட்ட குறள் பரப்பும் தொண்டர்களையும் சந்தித்துப் பல வருடங்களாகிவிட்டன. அவர்களையெல்லாம் சந்திப்பதற்காகவே, அண்ணாமலையார் தரிசனத்துக்குத் திட்டமிடத் தோன்றுகிறது!

------------------------------------------

தனது 17-ஆவது வயதில் "நான் என்னவாக வேண்டும்' என்று எழுதி வைத்தவர் எர்னெஸ்ட் ஹெமிங்வே - "நான் பயணம் செய்ய விரும்புகிறேன், எழுத விரும்பு
கிறேன்!' என்பது அவரது இளம் வயதுக் குறிக்கோள்.
கோவை விஜயா பதிப்பகத்துக்கு நான் முன்பொருமுறை சென்றிருந்தபோது, வேலாயுதம் அண்ணாச்சியின் அறையில் ஆயிரம். நடராஜனை சந்தித்தேன். "தி ஓல்ட் மேன் அண்ட் தி ஸீ' நாவலை அவர் மொழியாக்கம் செய்திருந்தார். 
அப்போது அவர் என்னிடம், அடுத்ததாக ஹெமிங்வேயின் "ஏ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்' நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்வதாகத் தெரிவித்தார். அந்த மொழியாக்கம் "போர்கொண்ட காதல்' என்கிற தலைப்பில் புத்தக வடிவம் பெற்று எனக்கு விமர்சனத்துக்கு வந்திருக்கிறது.
மொழியாக்கம் செய்பவர்கள் பெரும்பாலும் நேரடியாக மொழியாக்கம் செய்வதுதான் வழக்கம். "ஏ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்' என்பதை "ஆயுதங்களுக்கு விடை!' என்று மொழிபெயர்க்காமல், "போர்கொண்ட காதல்' என்று தலைப்பு கொடுத்ததில் இருந்தே, ஆயிரம்.நடராஜனின் மொழிபெயர்ப்புத் தரம் எத்தகையது என்று தெரிந்துகொள்ளலாம். கதையின் மீதும், கதை சொன்ன மூல எழுத்தாளர் மீதும் கொண்ட காதலின் விளைவுதான்,  ரசனைக்குரிய தலைப்பாகி இருக்கிறது. 
என் கல்லூரிப் பருவத்தில் தொடங்கி, கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் குறைந்தது ஐந்து முறையாவது ஆங்கிலத்தில் படித்திருக்கும் நாவல் "ஏ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்'. அதுமட்டுமல்ல, பலதடவை மீண்டும் மீண்டும் படிக்கும் "தி ஓல்ட் மேன் அண்ட் தி ஸீ' (கடலும் கிழவனும்), "ஃபார் ஹும் தி பெல் டோல்ஸ்' உள்ளிட்ட ஹெமிங்வேயின் படைப்புகள்  பல மறக்க முடியாதவை. 
சாதாரணமாக நாம் மூலத்தைப் படித்துவிட்டு, மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது, அதே அளவிலான சுவையும் ஈர்ப்பும் இருப்பதில்லை. ஆனால், ஆயிரம். நடராஜனின் மொழியாக்கம், சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் நம்மை இழுத்துச் செல்கிறது. முதலாம் உலகப் போரைக் கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல், நாடகமாக, திரைப்படமாக, தொலைக்காட்சித் தொடராகப் பல வடிவங்களை எடுத்திருக்கிறது. அதற்குத் தமிழ் வடிவம் தந்திருக்கிறார் நடராஜன்!

----------------------------------------------

கவிஞர் கோவை புதியவனின் கவிதைத் தொகுப்பு "ஐயனார் அரிவாளும் சில சருகுகளும்!'. அதில் இடம்பெற்றிருக்கும் ஹைக்கூ இது. வீட்டு முற்றத்தில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலையில் என்னை இந்தக் கவிதை ஈர்த்ததில் வியப்பில்லை.
திடீர் மழை
அவசரமாய் தேடுகிறது
நீர்வழிப் பாதையை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com