கற்றறிந்த மாந்தர் கடன்

இன்று கடன் என்பது ஒருவரிடம் திருப்பித்தருவதாக மற்றொருவர் பெற்ற பணம் அல்லது பொருளைக் குறிப்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.

இன்று கடன் என்பது ஒருவரிடம் திருப்பித்தருவதாக மற்றொருவர் பெற்ற பணம் அல்லது பொருளைக் குறிப்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இலக்கண இலக்கியங்களில் இதன் பொருள் இடத்திற்கேற்ப வெவ்வேறு பொருள்களில் எடுத்தாளப் பட்டுள்ளதைக் காணலாம். 
தொல்காப்பியத்தில், மடனொடு நிற்றல் கடன்என மொழிப (1151) என்றும், வழக்கு வழிப்படுத்தல் செய்யுட்குக் கடனே (1163) என்றும் வருமிடங்களில் 'கட்டாயமாகச் செய்யத்தக்க கடமை' என்ற பொருளிலும், 'கடனறிந்து, இருவேம் ஆகிய உலகத்து' என்னும் குறுந்தொகையுள்(57:4-5) 'செய்யக்கடவனவாகிய முறைமை' என்னும் பொருளிலும் இச்சொல்லாட்சி அமையக் காணலாம்.
இவ்வாறே பொது மறையான திருக்குறளில், 'கடமை' என்னும் பொருளோடு 'முறைமை' என்னும் பொருளமைந்த குறட்பாக்களும் (218; 638; 687; 687; 802; 981; 1053) உள்ளன.
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்  (218)
கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி யுரைப்பான் தலை (687)    
எனவரும் குறள்களைக் காண்க
இவையேயன்றித் 'தெய்வத்துக்குச் செய்யும் நேர்ச்சி' (குறுந்.218:1-2), 'பிதிரர்க்குச் செய்யும் கடன்' (புறம்.9:3-4),  'மானம்' (குறள்.1063), 'காடு' (கலித்.2:20) என வெவ்வேறு பொருள்களிலும் இச்சொல்லாட்சி தமிழ்நூல்களில் பரவலாக இடம் பெற்றுள்ளது. 
எனினும், 'கட்டாயமாகச் செய்யத்தக்க கடமை' என்னும் ஒரு பொருளையே வலியுறுத்தும் நோக்கில் கடன் என்னும் சொல்லை முன்னோர் மிகுதியும் கையாண்டிருப்பதாகத் தெரிகிறது.
ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்த்தல் காளைக்குக் கடனே        (312)
என்னும் பொன்முடியாரின் புறநானூற்றுப்பாடல் இதற்குச் சான்று. 
இத்துடன் 'இரவலர்க்கு ஈதலே புரவலர்க்குரிய கடனாம்' என்னும் கருத்தையும் காண்கிறோம்.
கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளம்  
(பெரும்பாண்.446)
கொடைக்கடன் இறுத்த செம்மல்..'  
(மலைபடு. 543)
புரவுக்கடன் பூண்ட வண்மை  (புறநா.149:5)
என வருவன காண்க.
அரசராகிய புரவலர்க்கு மட்டுமன்றி 'ஊதியம் கருதாத கருணையுள்ளம் கொண்டோர்க்கெல்லாம் இது கடமை' என்பதை, 'கருணையோர் கடன்மை ஈதால்' (8272) என்னும் கம்பரின் பாடலடி ஒன்றும் உணர்த்துகிறது.
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என் கடன் பணிசெய்து கிடப்பதே  (5420)
என்று திருநாவுக்கரசரும், 
பிழைப்ப ராகிலும் தம்அடி யார்சொல்
பொறுப்பதும் பெரியோர் கடன் அன்றே (434)
என்று பெரியாழ்வாரும் 'கடன்' இன்றியமையாக்கடமை எனும் பொருளில் பாடியுள்ளனர்.
இனிக் கற்றறிந்தார் கடன் இன்னது என்பதை வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ஒரு சிறு பாடற்பகுதி மூலம் சுட்டிக்காட்டுவதைக் காணலாம். 
அவர் உரை எழுதிய கம்பராமாயணம் பாலகாண்டம், நூன்முகத்தில் (1973), 'தம் உரையில் உள்ள குற்றங்களை அறிஞருலகம் பொறுத்துக் கொள்ள வேண்டும்' என்று அடக்கத்துடன் குறிப்பிடுகிறார். 
அதற்கு ஆதரவாகக்,
குற்றம் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்
என்னும் செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டுகிறார். 
டாக்டர் உ.வே. சாமிநாதையரும் தம்முடைய பத்துப்பாட்டு மூன்றாம் பதிப்பின் முகவுரையில் (1931) இதனை மேற்கோள் காட்டியுள்ளார். அங்ஙனமாயின் இதற்கான மூலம் எது?
சிவஞான சித்தியாருக்கு உரையெழுதிய மறைஞானதேசிகர் என்னும் பெரியார் தம் உரைப்பாயிர முடிவில் அவையடக்கமாக இப்படி எழுதுகிறார்:
 ஓரா தெழுதினேன் ஆயினும் ஒண்பொருளை
ஆராய்ந்து கொள்க அறிவுடையார் சீராய்ந்து
குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்
என்பது அவர் பாடிய முழுவெண்பாவாகும்.
'தமிழ்ப் புலவர்கள் வரலாறு' என்னும் நூலில் சோமசுந்தர தேசிகர் இதனை எடுத்துக்காட்டியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com