அருந்துயர் தருமிவள் கண்ணே

சங்ககால வாக்கெடுப்பு முறையும் போர் காட்சியும்: புலவர் மருதனிள நாகனாரின் உவமை

சங்க காலத்தில், "ஓலை'யை வாக்குச்சீட்டாகப் பயன்படுத்தினர். பெரிய குடத்தினை, மூடி முத்திரை இட்டிருப்பர். அதனுள், தேர்ந்தெடுக்கத் தகுதியானவர் எவர் என்பதை எழுதிய ஓலைகளை இடுவர்.

பின்னர், அக்குடத்தின் மேலுள்ள இலச்சினை (முத்திரை)யை அகற்றிவிட்டு, அக்குடத்திலுள்ள ஓலைகளை வெளியில் ஈர்த்தெடுத்து, எண்ணி, தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் என அறிவிப்பர். இது குடவோலை முறை எனப்படும்.

போரில் இறந்துபட்டுச் சரிந்த வீரன் ஒருவனின் குடலினைப் பருந்தொன்று பறித்துச் செல்லும் நிகழ்விற்கு, குடத்தில் இருந்து வாக்குச் சீட்டுகளாகிய ஓலைகளை வெளியே ஈர்த்தெடுக்கும் செயலை உவமையாகக் கூறியுள்ளார் புலவர் மருதனிள நாகனார்.

பாலைத் திணையில், "செலவு அழுங்குவித்தல்' என்ற துறையிலான தலைவனின் கூற்றான அகநானூற்றுப் பாடல் இது.

தலைவியைப் பிரிந்து பொருளீட்டச் செல்லுமாறு தலைவனின் நெஞ்சம் அவனைத் தூண்டுகிறது. ஆனால், தலைவியை விட்டுப் பிரிந்தால், அவள் நெற்றியானது பசலை பாய்ந்து, அவள் கண்ணீர் வடிப்பாளே என்று நினைத்துத் தனது பயணத்தைத் தவிர்க்க முயல்கின்றான் தலைவன்.

அப்பொழுது கூறுகிறான்: நெஞ்சே நீ வாழ்க! ... கயிற்றால் கட்டுண்ட குடத்திலுள்ள ஓலையை, அதன் மேலிடப்பட்ட இலச்சினை (முத்திரை)யை நீக்கி, ஈர்த்தெடுத்தல் போல, போரில் பகைவர்களே அஞ்சுமாறு போரிட்டு வென்று இறந்துபட்ட வீரன் ஒருவனின் குடலைச் சிவந்த செவியை உடைய பருந்து ஒன்று, கண்டார் அஞ்சுமாறு கவர்ந்து செல்லும், கூரிய கற்கள் நிறைந்த கொடிய வழியில் சென்றால், புள்ளி போன்ற நிழலை மட்டுமே, தரக்கூடிய இத்திமரத்தின் பகுதியில் பெருங்காற்று வீசும்.

அத்தகைய மாலைப் பொழுதில், சேரர் படைத்தலவனாகிய பிட்டன் என்பவன், பகை மன்னருடனான போரில் எடுத்த, வேலைப்பாடுமிக்க வேல் போன்ற என் தலைவியின் கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகும்.

அக்காட்சி என் மனத்தில் தோன்றி, எனக்கு அரிய துன்பத்தைத் தரும். அதனால்தான் என் நெஞ்சே! நான் தலைவியைப் பிரிதல் என்னும் கொடிய செயலையே நீ தேர்ந்தெடுத்துள்ளாய் என்கிறேன் என்று கூறும் அப்பாடல் இதுதான்.

வாழிய நெஞ்சே...

இடியுமிழ் வானம் நீங்கி யாங்கணும்

குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்க்

கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்

பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின்

உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த

தறுகணாளர் குடர் தரீஇத் தெறுவரச்

செஞ்செவி எருவை யஞ்சுவர இகுக்கும்

கல்லதர்க் கவலை போகின் சீறூர்ப்

புல்லரை யித்திப் புகர்படு நீழல்

எல்வளி யலைக்கும் இருள்கூர் மாலை

வானவன் மறவன் வணங்குவிற் றடக்கை

ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன்

பொருந்தா மன்னர் அருஞ்சமத் துயர்ந்த

திருந்திலை யெஃகம் போல

அருந்துயர் தருமிவள் பனிவார் கண்ணே

(அக.களிற்.77)

குடவோலைத் தேர்தல் முறையில் குடத்திலிருந்து ஓலைகள் போரின் பொழுது மாண்ட வீரன் ஒருவனின் குடலைக் கவர்ந்து செல்லும் பருந்தின் செயலையும் ஒப்பிட்டுக் காட்டும் அக்காலப் பாடல், இக்காலத்திலும் எண்ணி இன்புறத்தக்கதாய் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com