இந்த வாரம் கலாரசிகன் - 14-04-2024

இந்த வாரம் கலாரசிகன் - 14-04-2024

தினமணியின் ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழா, நாகூர் தர்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. நாகையின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்ஜிகே நிஜாமுதீன் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். நாகப்பட்டினம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சி.கார்த்திகா மலரை வெளியிட, நாகூர் தர்காவின் நிர்வாக அறங்காவலர் சையது முகமது ஹாஜி ஹுசைன் சாஹிப் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

இதற்கு முன்பும் ஈகைப் பெருநாள் மலர் நாகூரில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முறை வழக்கத்திற்கு அதிகமாக வாசகர்களும் பார்வையாளர்களும் திரண்டிருந்தனர். அந்த பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருந்த முன்னாள் தமிழக அமைச்சரும், தினமணியின் நடுப்பக்க கட்டுரையாளருமான முனைவர் வைகைச்செல்வனும், நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமிர்தராஜாவும் கலந்து கொண்டதில் எனக்கு மட்டுமல்ல, வந்திருந்த அனைவருக்குமே பெருமகிழ்ச்சி.

நான் பலமுறை நாகூர் தர்காவுக்கு சென்றிருக்கிறேன். இந்தமுறை என்னை ஹாஜி ஹுசைன் சாஹிப் நாகூர் ஆண்டவரின் தரிசனத்திற்கு, திரை விலகும் வேளையில் அழைத்து சென்றது வித்தியாசமான அனுபவம். இதே போன்ற உணர்வை நான் வேறுபல சித்தர்களின் ஜீவசமாதிகளிலும், அஜ்மீர் தர்காவிலும் கூட எதிர்கொண்டிருக்கிறேன்.

தர்கா வழிபாட்டையும், சூஃபி தத்துவத்தையும் இஸ்லாமியர்கள் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. அவரவர் கருத்து அவரவருக்கு. சித்தர்களின் ஜீவசமாதியில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கிறது என்று ஏற்றுக்கொள்பவன் நான். நாகூர் ஆண்டவரின் சந்நிதி அதை உறுதிப்படுத்தியது.

--------------------------------------------------------------------------------------------


நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, விக்கிரமசிங்கபுரத்தில் பச்சை அங்கியும், பச்சை நிற தலைப்பாகையும், நீண்ட தாடியும், கையில் பிரம்புமாக ஓர் இஸ்லாமிய துறவியை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். அவர்தான் குணங்குடி மஸ்தான் என்று யாரோ சொன்னது எனது மனதில் பதிந்துவிட்டது. 19}ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த குணங்குடி மஸ்தான் அவராக இருக்க முடியாது என்று புரிந்து கொள்ளும் வயது எனக்கு இருக்கவில்லை. அதற்கு பிறகும் கூட அந்த இஸ்லாமியப் பெரியவர் மதுரையில் நான் படிக்கும்போதும், பிறகு சென்னைக்கு வந்துவிட்ட பிறகும் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை அவ்வப்போது என் கண்ணில் தென்பட்டிருக்கிறார்.

நாகூர் தர்காவிற்கு சென்றபோது, குணங்குடி மஸ்தான் என்று எனது மனதில் பதிந்த அந்த இஸ்லாமியப் பெரியவர் எனது மனதில் தோன்றி மறைந்தார். அங்கே என்னை சந்தித்த சிலர் எனக்கு அன்பளிப்பாகப் புத்தகங்கள் தந்தனர். நான் அறையில் வந்து அந்த புத்தகங்களைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் ஒரு புத்தகம் நாகூர் ரூமி எழுதிய "குணங்குடி மஸ்தான் சாஹிப்' என்கிற புத்தகம். அப்படியே வியப்பில் சமைந்தேன்.

இரவோடு இரவாக அந்த புத்தகத்தைப் படித்த முடித்த பிறகுதான் என்னால் தூங்க முடிந்தது. என் மனதில் பதிந்துவிட்ட குணங்குடி மஸ்தான் என்கிற அந்த சூஃபி ஞானி குறித்த செய்திகள் பிரமிப்பை ஏற்படுத்தின. நம்மிடையே தமிழகத்தில் வள்ளலாருக்கு சற்று முந்தைய காலத்தில் இஸ்லாமிய சித்தர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்பதையும், அவர் சொல்லிச் சென்ற செய்திகளையும் நாகூர் ரூமி எடுத்தியம்பி இருக்கும் விதம் சிறப்பிலும் சிறப்பு.

குணங்குடி மஸ்தான், மதுரை மீனாட்சி அம்மன் மீது பாடியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு விக்கிரகத்தை தெய்வமாக ஏற்றுக்கொண்ட பாடல்கள் அல்ல. கடவுள் இல்லாத இடமே இல்லை, எங்கும் எதிலும் நிறைந்திருப்பது கடவுள்தான் என்பதை உணர்த்தும் பாடல்கள் அவை.

"பன்னீர் ஒழுகும் உந்தன் பாதமலரை எந்தன் சென்னிமீது என்றும் அருள் செய்வாய் ' என்று மீனாட்சி அம்மனை வேண்டுகிறார். தனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்து, புனித ரமலான் மாதத்தோடு விடைபெற்றதோடு மட்டுமல்லாமல், எங்கே, எந்த இடத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதுவரை உத்தரவிட்ட சித்தர் அவர்.

தொண்டி என்ற ஊரிலிருந்து சென்னை வந்து காவாந்தோப்பு என்ற பகுதியில் குணங்குடியார் தங்கியதால், அந்த பகுதி தொண்டியார்பேட்டை என்று அழைக்கப்பட்டு, பின்னர் தண்டையார்பேட்டையாகி விட்டது என்கிற செய்தியை நாகூர் ரூமி மூலம்தான் தெரிந்து கொண்டேன். அங்கே குணங்குடி மஸ்தானின் தர்கா இருப்பதையும் தெரிந்து கொண்டேன்.

நாகூர் ரூமிக்கு நன்றி...

--------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினத்திலிருந்து கிளம்பி இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை என்று தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள பயணம் மேற்கொண்டேன். காரில் பயணிக்கும் எனக்கே தாங்கமுடியாத வெயில். எப்படித்தான் வேட்பாளர்கள் பிரசாரம் செய்கிறார்களோ தெரியவில்லை. இது அரசியல்வாதிகளுக்குக் கடவுள் வழங்கும் தண்டனை போலிருக்கிறது.

பயணத்தின்போது தூத்துக்குடியில் நண்பர் மாறனை சந்தித்தேன். அவர் எனக்கு முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தூத்துக்குடி மாவட்ட வரலாறு புத்தகத்தைப் பரிசளித்தார். மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியன் விரைவு ரயிலில் பயணிக்கும்போது அதைப் படித்தேன்.

தூத்துக்குடி மாவட்டம் குறித்த அத்தனை தகவல்களும் சுவாரசியமாக அவரால் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தகவல்கள் மட்டுமல்ல, தூத்துக்குடியுடன் தொடர்புடைய ஆளுமைகள் குறித்தும் பதிவு செய்திருக்கிறார். தென்தமிழகத்தின் முதல் ரயில் நிலையம் தூத்துக்குடியில்தான் அமைந்தது என்பது எனக்கு புதிய செய்தி.

இதேபோல, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டம் குறித்தும் தொகுக்கப்பட்டால் வருங்காலத்துக்கு அற்புதமான ஆவணப்பதிவாக அவை அமையும்.

ஏதாவது விடுபட்டு இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். கோவில்பட்டி விளாத்திகுளம் சுவாமிகள் பற்றிய தகவல் இல்லாமல் இருப்பதையும், கரிசல் மண் குறித்து தொடர்ந்து பல புத்தகங்கள் எழுதிவரும் வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் பெயர் விடுபட்டிருப்பதையும் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

விமர்சனத்திற்கு வந்திருந்தது ரகுநாத் வஎன்பவர் எழுதிய "அகவற்பா' என்கிற கவிதைத் தொகுப்பு. அந்தத் தொகுப்பில் இருந்தது இந்தக் கவிதை

அரிசி மூட்டைகளை

சுமந்துவிட்டு

குடிசைக்குள் நுழைந்ததும்

கிடைத்தது

அரைவயிற்று கஞ்சி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com