மானும் நீயே மயிலும் நீயே

தலைவியின் ஊடல் காரணம் அறிந்த தலைவன்

தலைவியைப் பிரிந்த தலைவன் நீண்ட காலமாய் வரவில்லை. தலைவனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலைவி தவித்துக் கொண்டிருந்தாள்.

தலைவன் ஒருநாள் வந்து சேர்ந்தான். தலைவனின் வரவு தலைவிக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மனத்துயரை அவள் முகக்குறிப்புக் காட்டியது.

தலைவி தன் மீது ஊடல் கொண்டிருக்கிறாள் என்பதைத் தலைவன் நன்குணர்ந்து

பின்வருமாறு அவளிடம் பேசினான்:

நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்

நன்னுதல் நாறும் முல்லை மலர

நின்னே போல மாமருண்டு நோக்க

நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே

(ஐங்குறு: 492)

தலைவன், "நான் வந்த வழியில் பார்த்தவையெல்லாம் உன்னையே நினைப்பூட்டின. அழகான நல்ல நெற்றியை உடையவளே. உன்னைப் போலவே சாயல் அழகு காட்டி மயில்கள் ஆடின. உன்னுடைய நல்ல நெற்றியின் நறுமணம் போல் முல்லைப்பூ மலர்ந்து மணம் வீசியது. நீ பார்ப்பது போல மான்களும் மருண்டு நோக்கின. நான் பார்த்த அனைத்தும் நீயின்றி எனக்கு வேறு நினைவைத் தரவில்லை என்கிறான். அதனால் மேகத்தைக் காட்டிலும் விரைவாக வந்தேன்' என்கிறான்.

தலைவியின் ஊடலைப் போக்கும் வகையில் தலைவன் கூற்று அமைந்துள்ளது.

- முனைவர் கி. இராம்கணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com