யாரோ பிரிகிற்பவரே?

நம்மாழ்வாரின் திருவிருத்தம் - அகத்திணை மரபின் புதிய பார்வை
யாரோ பிரிகிற்பவரே?

நற்றிணைச் செய்யுள் ஒன்றன் கருத்து அகத்திணை மரபு தழுவிப் பாடிய நம்மாழ்வாரின் திருவிருத்தம் என்னும் நூலில் ஒரு பாடலில் பெரிதும் ஒன்றி நிற்பதைக் காண்போம்.

ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே-

புலிப்பொறி அன்ன புள்ளியம் பொதும்பின்

பனிப்பவர் மேய்ந்த மாஇரு மருப்பின்

மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை

ஒண்டொடி மகளிர் இழை அணிக் கூட்டும்

பொன்படு கொண்கான நன்னன் நல்நாட்டு

ஏழிற் குன்றம் பெறினும், பொருள்வயின்

யாரோ பிரிகிற் பவரே குவளை

நீர்வார் நிகர்மலர் அன்ன, நின்

பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே?

(நற்றிணை: 391)

இதனைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

"புலியினது புள்ளிகளைப் போன்ற நிழலையுடைய மரங்கள் ஏழில் மலையின்கண் செறிந்து வளர்ந்துள்ளன. அங்குப் படர்ந்த கொடியை எருமைகள் மேய்கின்றன.

அவை தின்றொழிந்த மலைப்பச்சையின் இலைகளை ஒளிபொருந்திய கொடியணிந்த மகளிர் - கலன்களை அணிதற்குப் பயன்படுமாறு அமைத்துக் கொள்வர். இத்தகைய அழகு பொருந்திய நன்னன் என்னும் மன்னனுக்குரிய ஏழில் மலையையே பெறுவதாயினும் தலைவர் உன்னைப் பிரிந்து செல்வார் அல்லர்.

குவளையின் நீர்வடிகின்ற பெரிய அமர்த்தலையுடைய குளிர்ந்த கண்களை உடையவள் நீ. அவற்றைக் காணுந்தோறும் உன்னைப் பிரியும் ஆற்றல் உடையவர் ஆவாரோ அவர்? அவர் பிரிந்து செல்வார் அல்லர்' என்கிறாள் தோழி.

இனி நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரத்தைக் காணலாம். தலைவியின் நீங்கலருமை பற்றித் தலைவன் பேசுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.

திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்விண் ணாடனைய

வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர்? தாம் இவையோ

கண்பூங் கமலம் கருஞ்சுடராடி வெண்முத்தரும்பி

வண்பூங் குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே

(திருவிருத்தம்: 9)

முன்பு நாம்பார்த்த நற்றிணைச் செய்யுள் தோழி கூற்றாகவிருக்க, இது தலைவன் கூற்றாக இருப்பது ஒன்றே குறிக்கத்தக்க வேற்றுமையாகும். மற்றபடி உள்ளடக்கம் ஒன்றேதான்.

"எம்பெருமானுடைய பரமபதத்தைப் போல் விளங்குகின்றாள் இந்தப் பூங்கொடி. இவளது கண்கள் கண்களாக மட்டும் இல்லையே! தாமரை மலராய், செங்கழுநீர்ப் பூவாய், பெரிய இதழ்களை உடையவாய் மையை அணிந்து, பிரிவாற்றாமையால் கண்ணீராகிய வெண்முத்துகள் தோன்ற மடப்பத்தையுடைய மான்போல் நோக்குகின்றனவே! இந்த மணிவல்லிக் கொடியை எப்படிப் பிரிய முடியும்?

வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் என்னும் பாசுரத் தொடரையும்பொருள்வயின் யாரோ பிரிகிற்பவர் என்னும் நற்றிணை அடியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டிலும் உள்ள பாவ ஒற்றுமை இனிது விளங்கி நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

முனைவர் ம.பெ. சீனிவாசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com