பக்திக்குரிய முகப்பு 'நிலை'கள்

மரபுசார் கதவுகள்: காலம் கடந்து வாழும் கைவினை நெறிகள்
பக்திக்குரிய முகப்பு 'நிலை'கள்

வீடு கட்டுவதிலும், அதன் அமைப்பிலும் காலத்திற்கேற்றவாறு பல புதுமைகள் புகுத்தப்பட்டாலும், சிலவற்றில் பழைய மரபு போற்றப்பட்டே வருகிறது. அவற்றுள் ஒன்று தான், நமது வீட்டின் முகப்பு "நிலை'யும் கதவுகளும்.

புலவர் நக்கீரர், அவரது காலத்துச் சிறந்து விளங்கிய புரவலனாகிய தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்மனையின் முகப்பில் அமைந்த, மரத்தால் ஆன, "நிலை' மற்றும் கதவுகளின் கலை நயத்தை "நெடுநெல் வாடை'யில்,

பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து

ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்

பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇத்

துணைமாண் கதவம் பொருந்தி இணைமாண்டு

நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்

போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்

தாளொடு குயின்ற போராமை புணர்ப்பிற்

கைவல் கம்மியன் முடுக்கலின்....

(அடி: 78-85)

என்றவாறு அழகாகப் பாடுகின்றார்.

ஆணிகளும், பட்டங்களுமாகிய பரிய இரும்பினால் ஒருசேரத் தைத்து உருவாக்கப் பட்ட மரத்திலான "நிலை'யில், நன்கு பொருந்துமாறு இரு கதவுகளைச் செய்து சேர்த்து, "செவ்வரக்கு வழித்தல்' என்ற செய்கையால் அவற்றின் மேல் செவ்வரக்குப் பூசி, அவற்றிற்குப் "பளபள'வென்று செந்நிறம் ஊட்டப்படுகின்றது. தேரிலுள்ள பலகைகளுக்கும் செவ்வரக்குப் பூசிப் பளபளப்பூட்டும் முற்காலத் தச்சர்களின் செயலைச் "சிறுபாணாற்றுப் படை' (அடிகள் : 251 253) கூறுகிறது.

மேலும், அத்தகைய "நிலை'யின்கண் தெய்வம் உறையும் என்ற நம்பிக்கையில், அதற்கு

"ஐயவி' என்னும் வெண்சிறுகடுகுடன் நெய்யும் பூசப்பட்ட நேர்த்தியினையும்,

ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை

(அடி:86)

என்ற தொடரில் "நெடுநல்வாடை' கூறுகின்றது.

நிலையின் மீது நெய்யும், வெண்சிறுகடுகாகிய "ஐயவி'யும் பூசும் மரபினை "மதுரைக் காஞ்சி',

தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை

நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்

மழையாடு மலையி னிவந்த மாடமொடு

(அடி : 353-355)

என்றும், "நற்றிணை' இலக்கியம்,

நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்

விளங்கு நகர் விளங்க ....... (பா.370)

என்றும் பாடிச் சிறப்பிக்கின்றன.

ஆதலால், ஒவ்வோர் இல்லத்தின் "நிலை'யும், அதனுடன் பொருத்தப்படும் கதவுகளும் தெய்வத்தன்மை பொருந்தியதாகக் கருதப்பட்டு வந்ததை இலக்கியங்களின் வழி அறிந்து கொள்ள முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com