சோறு மணக்கும் மடங்களெல்லாம்...

பிள்ளைத்தமிழ் என்பது தமிழில் வழங்கும் 96 வகை பிரபந்த வகை நூல்களுள் ஒன்று. பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்,
சோறு மணக்கும் மடங்களெல்லாம்...

பிள்ளைத்தமிழ் என்பது தமிழில் வழங்கும் 96 வகை பிரபந்த வகை நூல்களுள் ஒன்று. பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். மூன்று மாதம் தொடங்கி இருபத்தொரு மாதம் வரையான குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்து பாடுவர்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழில், காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என பத்துப் பிரிவுகள் இடம்பெறும். பெண்பாற் பிள்ளைத்தமிழில், கடைசி மூன்று பிரிவுகள் நீராடல், அம்மானை, ஊசல் என மாறுபடும்.
ஒட்டக்கூத்தரின் குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மாதவ சிவஞான முனிவரின் கலைசை செங்கழுநீர் விநாயகர் 
பிள்ளைத்தமிழ், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் ஆகிய பிள்ளைத்தமிழ் நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
குறிப்பாக, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சேக்கிழார் பிள்ளைத்தமிழில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் தமிழ்ச்சுவையும் பக்திச்சுவையும் மிகுந்திருப்பதைக் காணலாம்.
தெய்வச் சேக்கிழாரைக் குழந்தையாகக் கற்பனை செய்து மகாவித்துவான் பாடியுள்ள இந்நூலில் உள்ள தாலப் பருவத்தில் சேக்கிழார் அவதரித்த தொண்டைமண்டலக் குன்றத்தூரின் சிறப்பை அருமையாக விவரித்துள்ளார்.
"குன்றத்தூரில் உள்ள மடங்களிலெல்லாம் எப்போதும் சோற்று மணமே வீசும்; அவ்வூரில் உள்ள மாந்தர்தன் சிந்தையில் எல்லாம் தூய்மையே நிரம்பியிருக்கும்; அவர்கள் அணிந்துள்ள ஆடைகளில் பொன்னே மிகுந்திருக்கும்; அவர்கள் தோள்களிலெல்லாம் மலர் மாலைகளின் நறுமணமே மிகுந்திருக்கும்; 
அவ்வூரில் உள்ள வயல்களிலெல்லாம் சேற்று மணமே வீசும்; அவ்வூர் மாளிகைகளிலெல்லாம் செல்வமே நிரம்பியிருக்கும்; அவ்வூர் நந்தவனங்களில் உள்ள மேடைகளிலெல்லாம் தென்றல் வீசிக்கொண்டே இருக்கும்; அவ்வூர் புலவர்கள் பாடும் செய்யுட்களிலெல்லாம் தெய்வமணமே வீசும்;
அவ்வூர் மனிதர்களின் நெற்றியெல்லாம் திருநீற்றின் மணமே வீசும்; அவர்கள் உண்ணும் கறிகளிலெல்லாம் நெய்யின் மணமே வீசும்; அங்கு நிகழ்த்தப்படும் வேள்விக் குண்டங்களிலெல்லாம் எஞ்ஞான்றும் நெருப்பு கனன்றுகொண்டே இருக்கும்; அவ்வூர் வீதிகளிலெல்லாம் அன்பே மணக்கும்.
அப்படிப்பட்ட குன்றத்தூரின் தலைவனே தாலோ தாலேலோ! ஆகமங்கள் அனைத்தையும் கசடறக் கற்றுத் துறைபோகிய தெய்வத்தன்மை பொருந்திய சைவப்பெருமகனே! தாலோ தாலேலோ' - இவ்வாறு பாடுகிறார் மகாவித்துவான். 
இதோ அப்பாடல்: 
சோறு மணக்கு மடங்களெலாந்
         தூய்மை மணக்குஞ் சிந்தையெல்லாம்
    சுவண மணக்கு மாடையெலாந்
          தொங்கல் மணக்குந் தோள்களெல்லாஞ்
சேறு மணக்குங் கழனியெலாஞ்
         செல்வ மணக்கு மாடமெலாந்
    தென்றல் மணக்கு மேடையெலாந்
         தெய்வ மணக்குஞ் செய்யுளெலாம்
நீறு மணக்கு நெற்றியெலாம்
         நெய்யே மணக்கும் கறிகளெலாம்
    நெருப்பு மணக்கும் குண்டமெலாம்
         நேய மணக்கும் வீதியெலாம்
சாறு மணக்குங் குன்றத்தூர்த்
         தலைவா தாலோ தாலேலோ
    சகலாகம பண்டித தெய்வச்
         சைவா தாலோ தாலேலோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com