புறநானூற்றில் கூற்றுவன்

மண்ணுலக உயிர்களை எல்லாம் அவற்றின் இறுதிக் காலத்தில் எடுத்துச் செல்பவன் எமன் என்பது ஒரு தொன்மையான நம்பிக்கையாகும்.
புறநானூற்றில் கூற்றுவன்

மண்ணுலக உயிர்களை எல்லாம் அவற்றின் இறுதிக் காலத்தில் எடுத்துச் செல்பவன் எமன் என்பது ஒரு தொன்மையான நம்பிக்கையாகும். எமனைக் கூற்றுவன் என்றும் வழங்குவதுண்டு. இக்கூற்றுவன் பற்றிப் புராணங்களில் பல செய்திகள் உள்ளன. அதுபோலவே தமிழ் இலக்கியங்களிலும் கூற்றுவன் பற்றிச் சில செய்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. 

புறநானூற்றில் கிள்ளிவளவன் இறந்தபின்னர் புலவர் மாறோக்கத்து நப்பசலையார் அவன் புகழைப் பாடும்போது கூற்றுவன் பற்றிக் குறிப்பிடுகிறார். கிள்ளிவளவன் போர்க்களத்தில் தேரின் மீது அமர்ந்து போர் செய்வதில் வல்லவன். அதனாலேயே அவன் திண்தேர் வளவன் என்று புகழப்படுகிறான்.

அவனைப் போரில் யாரும் வெல்ல முடியாதாம். பின் அவன் எப்படி இறந்தான்? புலவர் இந்த வினாவிற்கு விடையை இவ்வாறு கூறுகிறார். கிள்ளிவளவன் மிகச்
சிறந்த வீரன். கூற்றுவன் அவனுக்கு எதிரில் வந்து அவன் உயிரைப் பறித்திருக்க முடியாது. அம்மன்னன் கேட்பவர்க்கெல்லாம் இல்லை எனாது வாரிவழங்கும் தன்மை கொண்டவன் அன்றோ? அதனால் கூற்றுவன் கிள்ளிவளவன் முன்னே கைகூப்பித் தொழுது நின்று "உன் உயிரைத் தா' என்று பிச்சை எடுத்திருப்பான். கிள்ளிவளவன் மனமிரங்கித் தன் உயிரை வழங்கியிருப்பான்.  கூற்றுவன் வாங்கியிருப்பான் என்று புலவர் மன்னனைப் போற்றி நயம்பட எழுதியுள்ளார். 

இதோ அப்பாடல்:

செற்றன்று  ஆயினும்,  செயிர்த்தன்று  ஆயினும்,
உற்றன்று  ஆயினும்,  உய்வு  இன்று  மாதோ;
பாடுநர்  போலக்  கைதொழுது  ஏத்தி,
இரந்தன்று ஆகல்  வேண்டும்  பொலந்  தார்
மண்டு  அமர்  கடக்கும்  தானைத்     
திண்  தேர்  வளவற்  கொண்ட  கூற்றே.   (226) 

கிள்ளிவளவன் மறைந்தபின்னர் அவனைப் பற்றிப் பாடும் ஆடுதுறை மாசாத்தனார் என்னும் புலவரும் தன் பாடலில் கூற்றுவன் பற்றிக் கூறுகிறார். இப்பாடலில் அம்மன்னனைக் கையில் பொன்னாலான பூணை அணிந்திருப்பவன் என்றும், தலையில் வண்டுகள் மொய்க்கும் பூமாலையைச் சூடியிருப்பவன் என்றும்  புலவர் வருணிக்கிறார்.

இப்பாடலில் அவர் கூற்றுவன் என்பவன் போர்க்களத்தில் உயிரை விடும் வீரர்களையும்,  யானைகள், குதிரைகள் போன்றவற்றையும் உண்டு பசியாறுபவன் என்கிறார். கிள்ளிவளவன் மறைந்தபின்னர் இவை போன்ற உணவுகள் உனக்கு இனி எப்படிக் கிடக்கும் என்று புலவர் கேட்கிறார். மேலும் ஒரு சிறப்பான உவமையையும் இப்பாடலில் அவர் காட்டியிருக்கிறார்.

உயிர்களை உண்டுப் பசியாறும் கூற்றுவனே! நீ அறிவில்லாதவன். விதையைத் தின்றுவிட்டால் விளைச்சல் எப்படிக் கிடைக்கும். இவன் விதை போன்றவன். போர்க்களத்தில் உனக்கு வீரர்கள், யானைகள், குதிரைகள் எல்லாம் உனக்கு விளைச்சலாக உணவாகத் தந்து வந்தான். நீ இப்போது விதையான இவனையே கொன்றுவிட்டாயே! இனி உன் பசியை ஆற்ற வல்லார் யாரிருக்கிறார்? என்று அவர் கேட்கிறார். 

இதுதான் அப்பாடல்:

நனி  பேதையே,  நயன்  இல்  கூற்றம்!
விரகு  இன்மையின்  வித்து  அட்டு,  உண்டனை;
இன்னும்  காண்குவை,  நன்  வாய்  ஆகுதல்;
ஒளிறு  வாள்  மறவரும்,  களிறும்,  மாவும்,
குருதி  அம்  குரூஉப்  புனல்  பொரு  களத்து  ஒழிய,
நாளும்  ஆனான்  கடந்து  அட்டு,  என்றும்  நின்
வாடு  பசி  அருத்திய  வசை  தீர்  ஆற்றல்
நின்  ஓர்  அன்ன  பொன்  இயல்  பெரும்  பூண்
வளவன்  என்னும்  வண்டு  மூசு  கண்ணி
இனையோற்  கொண்டனைஆயின்,           
இனி  யார்,  மற்று  நின்  பசி  தீர்ப்போரே?     227
இவ்வாறு புறநானூற்றில் கூற்றுவன் பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com