இந்த வாரம் கலாரசிகன் - 11-02-2024

சென்ற வாரமல்ல, அதற்கு முந்தைய வாரம் நான் கோவையிலேயே தங்கி விட்டேன். ஒரு வேலையாகக் கோயம்புத்தூர் சென்றிருந்தபோது இடைவிடாத வறட்டு இருமல் என்னைப் பற்றிக்கொண்டுவிட்டது.
இந்த வாரம் கலாரசிகன் - 11-02-2024

சென்ற வாரமல்ல, அதற்கு முந்தைய வாரம் நான் கோவையிலேயே தங்கி விட்டேன். ஒரு வேலையாகக் கோயம்புத்தூர் சென்றிருந்தபோது இடைவிடாத வறட்டு இருமல் என்னைப் பற்றிக்கொண்டுவிட்டது. அதோடு ரயிலிலோ, விமானத்திலோ சென்னை திரும்ப இயலாது என்பதால் கோவையிலேயே தங்கிவிட்டேன். நண்பர் டாக்டர் எல்.பி. தங்கவேலின் கண்காணிப்பில் அஸ்வின் மருத்துவமனையில் சிகிச்சை என்பதும்கூட ஒரு காரணம்.

சாதாரணமாகப் புதிய எண்களிலிருந்து செல்பேசி அழைப்புகள் வந்தால் நான் எடுப்பதில்லை. பெரும்பாலும் எனது செல்பேசிகள் மெளனிகளாகத்தான் இருக்கும் - எழுதும்போதும், படிக்கும்போதும் தொந்தரவு கூடாது என்பதால். அப்படி ஓர் அழைப்பு வந்தது, "யார் இது தெரிந்து கொள்ளலாமா? குறுஞ்செய்தி அனுப்பவும்...' என்று தகவல் அனுப்பினேன். என்ன ஆச்சரியம், அழைத்திருந்தவர் நண்பர் பழ. கருப்பையா!

பழ. கருப்பையாவுடன் பேசி ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். நண்பர் பழ. கருப்பையாவின் எழுத்தின் மீது எனக்கு அப்படியொரு காதலே உண்டு. பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி அதில் இருக்கும் ஆழமும் நையாண்டியும் நான் அறிந்து தமிழகத்தில் வேறு எவருக்குமே இறைவன் அளிக்காத வரம். அவரது சிரிப்பில்கூட ஒரு ரசனைக்குரிய செய்தி இருக்கும்.

நானும் பழ. கருப்பையாவும் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லாவிட்டாலும், இருவரும் நினைவில் தொடர்புடன்தான் இருந்தோம். நானும் நண்பர் மைபா. நாராயணனும் பேசினால் அதில் பழ. கருப்பையா குறித்த ஏதாவது செய்தியைப் பகிர்ந்து கொள்ளாமல் எங்கள் சம்பாஷணை நடந்ததில்லை எனலாம்.

பழ. கருப்பையா கட்சி மாறி இருக்கிறாரே தவிர, அடிப்படைக் கொள்கையில் இருந்து தடம்புரண்டதே இல்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. தனது அரசியல் பயணத்தை காந்தியடிகளின் அடியொற்றித் தொடங்கியவர் இன்றுவரை அதிலிருந்து விலகினார் இல்லை. அப்பழுக்கற்ற காந்தியவாதியாகவும், தேசியவாதியாகவும் தொடரும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில தலைவர்களில் பழ. கருப்பையாவும் ஒருவர் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். அவரது குறுஞ்செய்தியைப் பார்த்தபோது, உடனடியாகத் திரும்ப அழைத்தேன். தனது அரை நூற்றாண்டு அரசியல், இலக்கியம், சமயம், சமூகம், திரைத்துறை சார்ந்த பயணத்தை "இப்படித்தான் உருவானேன்' என்று தன் வரலாறு படைத்திருப்பதாகச் சொன்னார். அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார்.

நான் "தினமணி' நாளிதழுடன் தொடர்பு இல்லாத புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வதில்லை. தினசரி நாளிதழ் ஆசிரியரால் அது இயலாது. நாள்தோறும் ஆசிரியர் உரை எழுதும் நான் புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வதாக இருந்தால் எனக்கு அதற்குத்தான் 365 நாளும் நேரமிருக்கும். அவரிடம் அதைப் பக்குவமாக எடுத்துச்சொல்லி விலக்கும் பெற்றுவிட்டேன்.

அதற்காக புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட முடியுமா என்ன? இன்று மாலையில் சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற இருக்கும் நூல் வெளியீட்டு விழாவில் கட்டாயம் பார்வையாளனாகக் கலந்துகொள்ள நினைக்கிறேன். புத்தகம் குறித்துப் படித்துவிட்டு எழுதுகிறேன்.

--------------------------------------------------------------------------


உடல்நலம் சரியில்லாமல் கோவையில் இருந்தபோது ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கும் ஏபிடி நிறுவனத்தின் சக்தி நிலையத்தில்தான் தங்கி இருந்தேன். காப்பாளர் ராதாகிருஷ்ணனும் சரி, அங்கிருந்த ஊழியர்களும் சரி குடும்பத்தில் ஒருவர்போல என்னை கவனித்துக் கொண்டதை நான் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இடைவிடாத இருமல் என்னை அறையில் முடக்கிப் போட்டிருந்தது. ஆனால் அதிலும்கூட ஒரு நல்லது நடந்தது. நிறையப் படிக்க முடிந்தது. அப்போது நான் படித்த புத்தகங்களில் ஒன்று, "அருட்செல்வர்' நா. மகாலிங்கத்துடனான தனது பெரும்பயணத்தைப் பதிவு செய்திருந்த கவிஞர் பெ. சிதம்பரநாதனின் "சுவடுகள் மறையாத பயணம்'. நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன், எழுதி இருக்கிறேன் என்றாலும், இந்த முறை படித்தபோது புதிய பல கருத்துகளை நான் உள்வாங்க முடிந்தது.

அருட்செல்வரின் சிந்தனைகள், செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வை என்று எல்லாப் பரிமாணங்களையும் இந்த ஒரு புத்தகத்தைப் படித்தால் நாம் தெரிந்து கொள்ள முடியும். அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சமயம், சமூகக் கோட்பாடு, காந்திய சிந்தனை, சமுதாயப் பார்வை என்று 85 கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார் கவிஞர் சிதம்பரநாதன்.

அருட்செல்வரிடம் கேட்டுத் தெளிவுபெற வேண்டும் என்று நினைத்து, நான் கேட்க இயலாமல்போன இரண்டு கேள்விகளுக்கு "சுவடுகள் மறையாத பயணம்' விடையளித்தது. முதலாவது கேள்வி, "அவசரநிலைச் சட்டம் குறித்த அருட்செல்வரின் கருத்து என்ன?' என்பது. அவர் அதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் எதிர்த்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இன்னொரு கேள்வி, வள்ளல் பெருமானின் சன்மார்க்கம் தொடர்பானது. "திருமந்திரத் தமிழ் மாமணி' புலவர் அடியன் மணிவாசகன் எழுதிய "திருவருட்பா' உரைக்கு அருட்செல்வர் வழங்கிய அணிந்துரை இதற்கு விடை தந்தது. சன்மார்க்கம் என்பது சைவ சமயத்தின் நீட்சியல்ல என்று அணிந்துரையில் அருட்செல்வர் தெளிவுபடுத்துகிறார்.

ஆதிசங்கரர் அருளிய அத்வைத சித்தாந்தம், வள்ளல்பெருமான் ஆழமாகச் சிந்தித்த சுத்த சன்மார்க்கத்தோடு சார்ந்துள்ளது. சன்மார்க்கம் சித்தாந்தம் சார்ந்தது அல்ல, அத்வைதம் சார்ந்தது என்றும், அது அத்வைதத்திற்கு சற்று மேலானதும்கூட என்றும் தனது அணிந்துரையில் அருட்செல்வர் சுட்டிக்காட்டியிருப்பதை மேற்கோள் காட்டுகிறார் பெ. சிதம்பரநாதன்.

இருமலுக்கு மருந்தாக அமையாவிட்டாலும், சிந்தனைக்குத் தெளிவாக அமைந்தது "சுவடுகள் மறையாத பயணம்'!


எங்கே, எப்போது படித்தேன் என்று நினைவில்லை. எனது நாட்குறிப்பில் குறித்து வைத்திருக்கும் கவிதை இது. கவிஞரின் பெயர் காரா. அந்தமான் என்றும் எழுதி வைத்திருக்கிறேன். 

உழவு மாடுகள் மகிழ்ந்தன
உழவனின் கழுத்திலும்
அடையாள அட்டை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com