

ஆட்சி பீடத்தில் இருப்பவர்களாயினும், சாதாரண குடிமகனாயினும் அனைவருமே நவகிரகத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் நவகிரகங்களுக்கு விசேஷ பூஜை, வழிபாடு, பரிகாரம் என்று ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டிய கட்டாயம் அனைவர்க்குமே ஏற்படக் கூடும். இதனால்தான் சிவாலயங்கள் பலவற்றில் நவகிரக சந்நிதி இருக்கின்றது.
அதே சமயத்தில், ஒரே இடத்தில் நவகிரகங்கள் தங்களது தேவியருடன் இணைந்து காட்சி தரும் அபூர்வ கோலத்தைக் கேள்விப்பட்டுள்ளீர்களா? இல்லையென்றால் வாருங்கள் திருவள்ளூர் மாவட்டத்துக்கு! இந்த மாவட்டத்தில் அம்பத்தூர் வட்டம், திருமுல்லைவாயல், சோழம்பேடு கிராமத்தில் உள்ள அனுகூல ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோயிலில்தான் தேவியருடன் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயில் உருவாகக் காரணமானவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகள். இவர் சோழம்பேடு கிராமத்தில் பொங்குளம் என்ற அழகிய தாமரைக்குளத்தின் கரையில் ஆஞ்சநேயருக்கு தனி ஒருவராக 50 ஆண்டுகள் பூஜை செய்து, கால ஓட்டத்தில் சிறிய கோயிலாகக் கட்டி 1982-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தார்.
தன் 105-ம் வயதில் 4.12.1995ல் கபால மோட்சம் அடைந்தார். இந்த சுவாமிகள் சித்தியடைந்ததும், அவர் வழிபட்டு வந்த ஆஞ்சநேயர் கோயில் அருகிலேயே ஒரு சிறிய பிருந்தாவனம் அமைத்தனர். ஒவ்வோர் ஆண்டும் சுக்கில பட்ச பிரதோஷம், திரயோதசி திதியில் சுவாமிகளுக்கு குருபூஜை நடைபெறுகிறது. ஆன்மீக அன்பர்களின் பெரு முயற்சியால் அனுகூல ஸ்ரீ ராமாஞ்சநேயர் கோயிலில் பட்டாபிஷேக ராமர் சந்நிதி கட்டப்பட்டு, 11.12.2005ல் மறுபடியும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீராம நவமி, ஸ்ரீ அனுமன் ஜெயந்தி சுப தினங்களிலும் இக்கோயிலில் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.
கோயில் வளாகத்தில் பால விநாயகர், பால முருகர், அம்பாள், அரச கணபதி, தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ நாராயணர், ஸ்ரீ துர்கை, ஸ்ரீ லிங்கேஸ்வரர் ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளும் அமைந்துள்ளன. பக்தர்களின் விருப்பத்துக்கிணங்க கல்யாண நவகிரக (கிரகங்கள் தங்கள் தேவியருடன்) தனிச் சந்நிதி 2007ல் கட்டப்பட்டது. வாய்ப்புள்ளவர்கள் தரிசித்து, வரம் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.