சிறுவயலில் விளங்கும் பெரியோன்!

தேனாறு பாயும் உய்யக் கொண்டான் என்னும் "சிறுவயல்', நீர்வளமும் நிலவளமும் மிக்க ஒரு ஊராகும். இவ்வூரின் மேற்கே குன்றக்குடி ஆறுமுகப் பெருமான், அருள் மாரி பெய்த வண்ணம் வீற்றிருக்கின்றார். சாக்கோட்டை, திருவா
சிறுவயலில் விளங்கும் பெரியோன்!
Updated on
2 min read

தேனாறு பாயும் உய்யக் கொண்டான் என்னும் "சிறுவயல்', நீர்வளமும் நிலவளமும் மிக்க ஒரு ஊராகும். இவ்வூரின் மேற்கே குன்றக்குடி ஆறுமுகப் பெருமான், அருள் மாரி பெய்த வண்ணம் வீற்றிருக்கின்றார்.

சாக்கோட்டை, திருவாடானை, பட்டமங்கலம், நேமம், திருமெய்யம் போன்ற புண்ணியத் தலங்கள் இவ்வூரைச் சுற்றி அமைந்திருக்கின்றன. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தொன்று தொட்டு வாழ்கின்ற தொண்ணூற்றாறு ஊர்களுள் சிறு வயலும் ஒன்றாகும். பர்மாவுக்கும், செட்டி நாட்டுக்கும் நெருங்கிய வணிகம் தொடர்ந்த அந்தக் காலம் முதலாக சிறு வயல், திருமகள் குடி கொண்ட திருநகராகத் திகழ்கின்றது.

இவ்வூர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு திசை நோக்கி 8 கி.மீ. தொலைவு பயணித்தால் இவ்வூரை அடையலாம். குன்றக்குடியிலிருந்து கிழக்கு திசையில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

சுயம்பு லிங்கம்

"சிறுவயல் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் தானாகத் தோன்றியவர். அதாவது சுயம்புலிங்கம்! இந்த லிங்கத்தை வழிபட்டால் எல்லாவிதமான நோய்களும் குணமாகும்.

"ஐராவதேஸ்வரர்' என்று போற்றப்படும் இவரை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) விரதமிருந்து வழிபட்டால், கல்யாணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு திருமணம் நடக்கும். சிவபெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வந்தால், நினைத்த நல்காரியங்கள் கைகூடும்; செல்வ வளம் பெருகும்! 48 பௌர்ணமிகள் விரதமிருந்து வழிப்பட்டால் எந்த ஒரு காரியமும் தடை இல்லாமல் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த சுயம்புலிங்கத்திற்கு "தான்தோன்றீஸ்வரர்' என்ற தமிழ்ப் பெயரும் உண்டு.

சௌந்தரநாயகி அம்பாள்

சிறுவயலில் கோயில் கொண்டுள்ள அம்பாளை 15 நாட்கள் விரதமிருந்து நெய்தீபம் ஏற்றி வணங்கி வந்தால் திருமணத்தடைகள் நீங்கும். ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன், தெற்கு பார்த்த வண்ணம் நின்ற கோலத்திலுள்ளார். வலக்கையில் குவளை மலர் தாங்கியுள்ளாள். அம்பாள், சாத்வீக குணத்தைக் கொண்டவள். எந்த ஒரு காரியத்தையும் அம்மனை நினைத்து வேண்டிக் கொண்டால் காரியங்கள் கைகூடும்.

பைரவர்

சிறுவயலில் அமைந்துள்ள பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிப்பட்டால் சகல தோஷங்களும் நீங்கி, காரியங்கள் சித்தி அடைகின்றன. ஞாயிறு தோறும் ராகு காலத்திலும், தேய்பிறை அஷ்டமியிலும் இவருக்கு வடைமாலை சாற்றி வழிபடுகின்றனர். பைரவருக்கு மல்லிகைப் பூ சாற்றுதல் கூடாது; வேறு எந்த மலர்களும் சாற்றலாம் என்பது இவ்வூர் ஐதீகம்.

நந்தி

நந்தியெம்பெருமானை 13 பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். மேலும் பால், தயிர், மஞ்சள்பொடி, திரவியப்பொடிகளால் அபிஷேகம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கும். அரிசி மாவில் விளக்கு ஏற்றினால் எல்லாக் காரியங்களும் கைகூடும். பிரதோஷ காலத்தில் அவரது இரு கொம்புகளின் நடுவே சிவலிங்கப் பெருமானை தரிசிப்பது சிறப்பாகும்.

வழிபாடு

ஸ்ரீஐராவதேஸ்வரர் உடனாய சௌந்தரநாயகி அம்மன் திருக்கோயிலில் தினந்தோறும் வழிபாடு நடைபெறுகிறது.

1. திருவனந்தல்- காலை 6.30 மணி, 2. காலசந்தி- காலை 8.00 மணி, 3. உச்சிக்காலம்- காலை 11.30 மணி, 4. சாயரûக்ஷ- மாலை 5.30 மணி, 5. அர்த்தசாமம் -இரவு 7.30 மணி.

மஹா கும்பாபிஷேகம்

இதுவரை இத்திருக்கோயிலில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மஹாகும்பாபிஷேகப் பெருவிழா 10 முறை நடைபெற்றுள்ளது. தற்பொழுது இத்திருக்கோயிலில், உய்யகொண்டான் சிறுவயல் இளையாற்றங்குடி ஒக்கூர் நகரத்தார் 100 குடும்பங்கள் முயற்சியில், மறுபடி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

ரூ.20 லட்சம் செலவில், நிகழும் விரோதி வருஷம், ஆனி மாதம் 4ம் தேதி (18.6.09) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு மேல் 10.50க்குள் ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீஐராவதேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இப்பெருவிழாவில் பக்தகோடிகளும், ஆன்மீகச் சான்றோர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு இறைவனை தரிசித்து, இம்மையிலும் மறுமையிலும் பேரானந்தப் பெருவாழ்வு பெற்று வாழ வேண்டும் என்று அன்புடன் வரவேற்கிறோம். சிறுவயலில் விளங்கும் பெரியோனாகிய ஐராவதேஸ்வரரை வணங்குங்கள்! வளமெல்லாம் பெறுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com