மண்ணுக்குள் புதைத்து மீண்ட மகான்

அகத்தியர், போகர், திருமூலர் போன்ற எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. அப்படிப்பட்ட "புண்ணிய ஆத்மா'க்களில் ஒருவர் நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர். "மானஸ சஞ்சரரே', "சர்வம் ப்ரஹ்ம மயம்', "பிபரே
Updated on
2 min read

அகத்தியர், போகர், திருமூலர் போன்ற எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது. அப்படிப்பட்ட "புண்ணிய ஆத்மா'க்களில் ஒருவர் நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர்.

"மானஸ சஞ்சரரே', "சர்வம் ப்ரஹ்ம மயம்', "பிபரே ராம ரஸம்' போன்ற அற்புதமான கீர்த்தனைகளைப் பாடிய இவரது காலம் 17ம் நூற்றாண்டு.

சோமநாத யோகிக்கும், பார்வதி தேவி என்பாருக்கும் மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் சிவராமகிருஷ்ணன். இளமையிலேயே இல்லறத்தில் நாட்டமில்லாமல் ஆன்மீக வாழ்வில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வேத பாடசாலையில் பயின்ற அவர், சாஸ்திரங்களைக் கேட்கும்போதே அனுபூதி நிலை அடைவதைக் கண்ட அவரின் குரு ஸ்ரீதர ஐயாவாள், இவருக்குக் குருவாக இருக்க பரம சிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளே சரியானவர் என்று முடிவு செய்தார்; உடனே சிவராமனை அப்போது காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியான பரம சிவேந்திரரிடம் மேற்கொண்டு சாஸ்திரங்களைப் பயில அனுப்பி வைத்தார். அனைத்தையும் கற்ற சிவராமனின் ஞானத்தைப் பாராட்டிய பரம சிவேந்திரர், மைசூர் மகாராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இளைஞரை சமஸ்தானத்தின் ஆஸ்தான பண்டிதராகப் பணி செய்ய அனுப்பி வைத்தார்.

மைசூர் சென்ற அறிவுக்கடல் ஆர்ப்பரித்தது. சமஸ்தானத்திற்கு வரும் பண்டிதர்களை எல்லாம் தர்க்கம் செய்து வென்றார் சிவராம கிருஷ்ணன். பெரும் பண்டிதர்கள் எல்லாம் இவரின் ஞானத்தின் முன் தோற்றுப் போயினர். இதைக் கேள்விப்பட்ட பரம சிவேந்திரர், சிவராமனை தன்னைப் பார்க்க வரும்படி செய்தி அனுப்பினார். தன்னைக் குருநாதர் அழைத்த செய்தி கேட்ட சிவராமன், சமஸ்தானப் பதவியை விட்டுவிட்டு பரம சிவேந்திரரைத் தரிசித்து அவர் காலில் விழுந்து வணங்கினார். அப்போது குருநாதர், ""ஊரார் வாயெல்லாம் அடைக்க கற்ற நீ, உன் வாயை அடக்கக் கற்றுக் கொள்ளவில்லையே?'' என்று கூறினார். அதைக்கேட்ட மாத்திரத்தில் "குருவின் கட்டளை இது' என நினைத்து அன்று முதல் மெüன விரதம் மேற்கொண்டார் சிவராம கிருஷ்ணன். "சதாசிவம்' என்ற தீட்சா நாமத்துடன் துறவறம் மேற்கொண்டார்; நெரூர் வந்தடைந்தார். யோக நிலையில் படிப்படியாக உயர்ந்து அவதூதராகி பிரம்மமானார்.

இவர் செய்த ஆன்மீக அற்புதங்கள் பல! ஒரு சமயம் கொடுமுடியில் காவிரி ஆற்றின் நடுவே இருந்த பாறையில் சென்று அமர்ந்து கொண்டார். பல நாட்கள் தவநிலையில் அங்கேயே அமர்ந்திருந்தார். மழைக்காலமாதலால் ஆற்றில் திடீரென வெள்ளம் வந்து அவரை அடித்துச் சென்றுவிட்டது. இதைப் பார்த்த ஊர் மக்கள் ஆற்றினுள் இறங்கித் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பல நாட்கள் கழித்து வெள்ளமும் வற்றியது. அப்போது வீடு கட்டுவதற்காக மணல் எடுக்க வந்தவர்கள் ஆற்றோரம் இறங்கித் தோண்டும் போது மண்ணுக்குள் சதாசிவ பிரம்மேந்திரர் புதைந்திருப்பதைக் கண்டு பதறிப்போய், மண்ணை அகற்றி அவரை வெளியே எடுத்தனர். அவரோ ஏதும் நடைபெறாதது போல எழுந்து அவர் போக்கில் நடந்து செல்லலானார்.

தான் நெரூரில் (கரூருக்கு அருகில் உள்ளது) ஜீவ சமாதி அடையப் போவதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் தனது சீடரான புதுக்கோட்டை மகாராஜாவிடம் கூறினார் சதாசிவ பிரம்மேந்திரர். சமாதி அடைந்த பின் 9ம் நாள் தன் சிரசின் மேல் இருந்து ஒரு வில்வ மரம் தோன்றும் என்றும், காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்று வரும் என்றும், அதை தன் சமாதியின் முன் பிரதிஷ்டை செய்யுமாறும் கூறினார்.

ஒரு சித்திரை மாதம் தசமி அன்று, சமாதி குகையில் சென்று அமர்ந்தார் பிரம்மேந்திரர். அவர் கூறியபடியே 9ம் நாள் சமாதியின் மேல் வில்வ மரம் ஒன்று முளைத்து வளரத் துவங்கியது. சிவலிங்கமும் வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதுக்கோட்டை மகாராஜாவால் கோயில் கட்டப்பட்டது. தற்போதும் நெரூரில் உள்ள அந்த மகானின் சமாதியின் மீது பெரிய வில்வ மரம் காணப்படுகிறது. ஒரு காலத்தில் மனித உருவில் வலம் வந்த மகான், தற்போது மர வடிவமாக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

இவரது பெருமை அறிந்த சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி ஸ்வாமிகள், நெரூர் வந்து பிரம்மேந்திரரின் சந்நிதானத்தில் அமர்ந்து, மூன்று நாட்கள் உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் தொடர்ந்து தவம் செய்தார். இதைக் கேள்விப்பட்ட ஊர் மக்கள் அங்கு கூடிவிட்டனர். உள்ளே செல்ல அனுமதி இல்லாததால் திருமதிலுக்கு வெளியே அமர்ந்து கொண்டனர். மூன்றாம் நாள் இரவு பீடாதிபதியும், பல ஆண்டுகளுக்கு முன் சமாதியான ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரும் உள்ளே பேசுவதைக் கேட்ட ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

மறுநாள் காலை நரசிம்மபாரதி ஸ்வாமிகள், "ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர ஸ்தவம்' என்ற துதியைப் பாடியபடி மலர்ந்த முகத்துடன் வெளியே வந்தார். அந்த ஸ்லோகத்தில், "சதாசிவ பிரம்மேந்திரரை கொஞ்சம் பூஜித்தாலே போதும், மிகவும் சந்தோஷமடையும் மனமுடையவர்' என்று குறிப்பிட்டுள்ளார். அப்பேர்ப்பட்ட மகானை மனதில் நினைத்துத் தியானித்து சகல செüபாக்கியங்களும், தெளிந்த மனமும் பெறுவோமாகுக! இந்த மகானுடைய ஆராதனை, சென்ற மே 4ம் தேதி தசமியன்று கரூர் அருகே உள்ள நெரூரில் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com