இறைவன் தான் படைத்த மனிதர்களுக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் வாழ்வாதாரங்களாக பூமி, கடல், மலை, பேராறுகள், காடுகள் முதலியவற்றைப் படைத்தான். காய், கனி, மீன் முதலிய உணவுப் பொருள்களையும், முத்து, பவளம், தங்கம் ஆகியவற்றால் ஆன அணிகலன்களையும் பயன்படுத்தி வாழ்ந்து வருகிறது மனித இனம். ஆனால் பல நேரங்களில் படைத்து, பேணி வரும் இறைவனை மறந்தவனாக, கண்டதே காட்சி கொண்டதே கோலமென வாழத் தலைப்படுகின்றான் மனிதன்.
""வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உடையது. அன்றியும் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்'' (அல்-குர்ஆன் 57:5) என்று திருக்குர் ஆன் தெளிவாகவே உரைக்கின்றது.
மேலும், மனிதர்களுள் பெரும்பாலோர் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதால், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், அறியாதவைகளைப் பற்றி நினைவுப்படுத்துவதற்காகவும் திருக்குர் ஆன் வசனங்கள் வந்துள்ளன.
சான்றாக, "நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? மேலும், உங்களை இணை இணையாக (ஜோடி ஜோடியாக)ப் படைத்தோம். உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்; அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்; மேலும், பகலை உங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்ளும் காலம் ஆக்கினோம். உங்களுக்கு மேல், பலமான ஏழு வானங்களை உண்டாக்கினோம்; ஒளி வீசும் விளக்கை (சூரியனை)யும் அங்கு வைத்தோம். அன்றியும், கார் மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்; அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் வெளிப்படுத்துவதற்காகவும், கிளைகளுடன் அடர்ந்த சோலைகளை வெளிப்படுத்துவதற்காகவும்!' (அல்-குர்ஆன் 78: 6-16)
மனித இனம் சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தது; பகுத்தறிவு கொண்டு மிக நுணுக்கமாக ஆராயும் திறனும் கொண்டது. பொறுமையும், நிதானமும் கைவரப் பெற்றால் மனிதன் புனிதனாக உயர்கின்றான். காலமாற்றங்களை கவலையுடன் உற்று நோக்கிப் பாடம் பெற்றால் ஞானியாகிவிடுவான். மகிழ்ச்சியும், துன்பமும் அப்போது அவனுக்கு ஒன்றாகவே தெரியும். இறைவன் அருளிய எல்லாக் காலமும், பருவச் சூழலும் சரிசமமானதே என்பதை உணர்ந்துவிட்டால், காலத்தைக் குறைகூற மனித மனம் துணியாது.
காலமாக இருப்பவன் இறைவன்; இறைவனைக் குறை கூறுகின்றவன் தன் பலவீனத்தை மூடி மறைப்பவனே! எண்ணும் எண்ணங்கள் யாவும் எல்லாம் வல்லானை நோக்கிச் சென்று முடிவடையும் அன்றோ? "எண்ணம்போல் வாழ்வு' என்று இதைத்தான் சொல்லி வைத்தனர் முன்னோர்.
மனிதன் எத்தனைக் காலம் வாழ்ந்தான் என்று கணக்கிடுவதைவிட, "எப்படி வாழ்ந்தான்? பிறர் மனம் நோகாமல் வாழ்ந்தானா? பொறுமையைக் கொண்டு அமைதியாக வாழ்ந்தானா?' என்பதுதான் மனிதனைப் பற்றிய சரியான மதிப்பீடாகும்.
காலமும், கடலலையும் எவருக்காகவும் காத்திராதன்றோ? காலம் பொன்னிலும், மணியினும் உயர்வானது என்பதுதானே மனித குலத்தின் அரிச்சுவடிப் பாடம்?
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நீக்கி மனிதன் வாழத் தலைப்படும்போது அவனுக்கு மலையும், மடுவும் ஒன்றே! வெற்றி மேல் வெற்றியும் வந்து சேர்வதும் கண்கூடே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.