
எனது மகளுக்கு கடந்த 10.11.08ல் திருமணம் நடந்தது. ஜாதகப் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்தோம். ஆனால் இரண்டரை மாதத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதன் பிறகு மூன்று ஜோதிடர்களிடம் ஜாதகம் பார்த்தோம். ""முன்னோர் செய்த பாவச் செயல்தான் (தாத்தா செய்த கொலை) இந்தப் பிரிவிற்குக் காரணம். எவ்வளவு பூஜைகள், யாகங்கள் செய்து இருவரையும் சேர்த்து வைத்தாலும், 2011ல் உங்கள் மகள் உயிருக்கு ஆபத்து வரும். எனவே விவாகரத்து செய்யுங்கள்'' என்கிறார்கள்.
வேறு சிலரோ, ""ஜாதகப்படி உங்கள் மகளுக்கும், மருமகனுக்கும் இரு தார யோகம். எனவே பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று "பிதுரார்ஜித தர்ப்பணம்' செய்ய வேண்டும். அதன்பின் மகளின் திருமாங்கல்யத்தை குலதெய்வம் கோயிலில் அம்பாளுக்குப் போட வேண்டும்.
நல்ல நாளில் மாங்கல்யம் செய்து, நல்ல முகூர்த்தம் குறித்து, குலதெய்வம் கோயிலில் உங்கள் மகளுக்கும், மருமகனுக்கும் மறு விவாகம் செய்ய வேண்டும்'' என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது சரியா? தவிர, எனது கணவர்தான் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவர் எங்களை விட்டுப் பிரிந்து, பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அவருக்குப் பதில் எனது மகன் பரிகாரம் செய்யலாமா?
பெயர் வெளியிட விரும்பாத ஈரோடு வாசகி.
உங்கள் மகளின் ஜாதகப்படி களத்ர ஸ்தானாதிபதியை விரோதம் பெற்ற கிரகம் பார்த்தாலும் அவர்களுடன் லக்னாதிபதி இணைந்திருப்பதால் அவர் வாழ்வில் ஏற்பட்டுள்ள குறைகள் இந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு மறைந்துவிடும். தசா நாதனான ராகு பகவான் பாக்யாதிபதியின் சாரத்திலும், பாக்யாதிபதி ராகு பகவானின் சாரத்திலும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் இத்தகைய பிரச்சினைகள் எழுந்தன. இருப்பினும் அவர் ஜாதகப்படி சிறு குழப்பங்களுக்குப் பிறகு நலம் வந்து சூழும்.
உங்கள் மருமகனுடைய ஜாதகத்திலும் இந்தக் காலகட்டத்தில், 2.2.10 வரை பாக்யாதிபதியின் புக்தி நடக்கும். இருவருக்கும் குடும்பம், லக்னம் ஆகிய ராசிகளுக்கு ஏற்ற தோஷ சாம்யம் உள்ளதால் மேற்கூறிய காலகட்டத்திற்குப் பிறகு அவர்கள் ஒற்றுமையுடன் வாழ வாய்ப்பு உண்டாகும்.
மற்றபடி பித்ரு தோஷம் என்பது ஜாதகங்களில் பித்ருகாரகன் சூரிய பகவான் பெற்றிருக்கும் ராசி, பெற்றிருக்கும் சாரம், விரோதம் பெற்ற கிரகச் சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவைகளால் அறியப்படுகிறது. சிலருக்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், சூரிய பகவான், அவரின் அதிதேவதையான சிவபெருமான், சனி பகவான் ஆகியோரை வழிபட்டு வர தோஷங்கள் விலகும் என்று உறுதியாக நம்பலாம்.
மேலும் இதற்கு பிராயச் சித்தமாக ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து வந்தால் தோஷத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதும் உண்மையே. இதை குடும்பத் தலைவர் செய்ய வேண்டும் என்பது வழக்கம்.
நீங்கள் கூறியிருப்பது போல் சில நேரங்களில் குடும்பத் தலைவர் சங்கல்பம் செய்து கொள்ள முடியாமல் போகும். அக்காலகட்டத்தில் அவரின் மகன் தன் பெயரில் சங்கல்பம் செய்துகொண்டு, பிண்டம் போடும்போது தந்தை இருப்பதால் ஒரு பிண்டத்தைக் குறைத்துப் போட்டுச் செய்துவிட்டு வருவது வழக்கத்தில் உள்ளது.
உங்கள் மகனை வைத்து இத்தகைய முறையில் நீங்கள் தாராளமாக திலஹோமம் செய்யலாம். இதனால் பாவம் ஒன்றும் வந்துவிடாது. இந்த திலஹோமத்தை செய்ய முடியாதவர்கள் பிரதி தினமும், இல்லையென்றால் ஞாயிற்றுக்கிழமைகளிலாவது தவறாமல் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வர, பித்ரு தோஷங்கள் நீங்கிவிடும்.
அமாவாசை போன்ற பித்ரு பூஜை நாட்களில் பசு மாட்டிற்கு அகத்திக் கீரை போன்ற உணவுகளைப் படைத்து வருவதாலும், தினமும் காக்கைக்கு அன்னமிட்டு வருவதாலும் பித்ரு தோஷம் நீங்குவது உறுதி. இது நம் பெரியோர் கண்ட உண்மை. அதனால் பெரியோர்களின் உதவியுடன் உங்கள் மகளை உங்கள் மருமகனுடன் இணைத்து வைக்கவும். தம்பதிகளை இணைத்து வைத்தால் எவருக்கும் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.
மற்றபடி நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் மகளின் உயிருக்கு 2011ஆம் ஆண்டு எந்த பாதிப்பும் உண்டாகாது. ஜோதிட ரீதியில் அவர் 2011ல் இறப்பார் என்பதற்குத் துளிகூட ஆதாரமேயில்லை என்பதை உறுதியாகச் சொல்கிறோம்.
* கடைசி வரை தொழில்!
எனக்கு 31 வயது ஆகிறது. எப்பொழுது திருமணம் நடக்கும்? எனது ஜாதகப்படி "5ல் ராகு இருப்பதால் புத்திர தோஷம் உள்ளது' என்று ஜோதிடர் கூறுகிறார். மேலும், "7ஆம் இடம் வலுவாக இல்லை' என்கிறார். இது சரியா? பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா? திருமணத்திற்குப் பிறகு எனது வாழ்க்கை அமைதியாகவும், சந்தோஷமாகவும் அமையுமா? நான் எந்தத் தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும்?
பெயர் வெளியிட விரும்பாத நாமக்கல் மாவட்ட வாசகர்.
உங்களுக்கு சர்ப்ப தோஷம் உள்ளது. அதனால் சர்ப்ப தோஷமுள்ள பெண்ணாகப் பார்க்க வேண்டும். புத்திர ஸ்தானத்தில் பாவக் கிரகம் இருப்பது குறை. அதேநேரம், புத்திர தோஷம் உள்ளது என்றும் கூற முடியாது. புத்திர ஸ்தானாதிபதி, புத்திரகாரகன், லக்னாதிபதி மற்றும் பாக்யாதிபதி ஆகியோரின் பலத்தையும் கொண்டு பார்க்கவேண்டும்.
மற்றபடி உங்களுக்கு மழலைப் பாக்கியத்திற்குக் குறைவு இல்லை. களத்ரஸ்தானாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். தெற்கு திசையிலிருந்து பெண் அமைவார். மணவாழ்க்கை சீராகச் செல்லும்.
தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால், கடைசி வரை நீங்கள் தொழில் செய்வீர்கள். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்டிக் கொண்டிருப்பீர்கள். இரும்பு, ஹார்டுவேர், கணினி, பேப்பர், ஸ்டேஷனரி, பெயிண்ட், சிமெண்ட் போன்ற தொழில்கள் உங்களுக்கு ஏற்றவை.
* அனுகூலமான தசாபுக்திகள்
எனது மகனுக்கு எந்த வேலையும் நிரந்தரமாக அமையவில்லை. எப்போது அவனுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?
ஜே. ஞானசெüந்தரி, சென்னை-91.
உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து தசா புக்திகள் அனுகூலமாக மாறியுள்ளதால் இக்காலகட்டத்தில் நிரந்தர உத்யோகம் அமையும். அவருக்கு தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கிறது. எனவே எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், மஹாலட்சுமியையும் வழிபட்டு வரவும்.
* உடல் உபாதைகள் நீங்கும்!
எனது எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்? அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டா? மேலும் திருமணம் எப்போது நடக்கும்? குழந்தை பாக்கியம் எவ்வாறு அமையும்? எனது ஜாதகப்படி எனது பெற்றோரின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
பெயர் வெளியிட விரும்பாத புதுக்கோட்டை வாசகி.
உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதாலும், பாக்யாதிபதி லாப ஸ்தானத்தில் சுயசாரத்தில் அமர்ந்து பூர்வபுண்ய ஸ்தானாதிபதியைப் பார்ப்பதாலும் வாழ்க்கை சீராக அமையும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. அந்நிய சம்பந்தத்தில், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணம் கை கூடும்.
இரண்டு குழந்தைகள் பிறக்கும் பாக்கியம் உள்ளது. பித்ரு மற்றும் மாத்ருகாரர்கள் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்திருப்பதால் பெற்றோருக்கு உடல் உபாதைகள் வரும் என்றாலும், குரு பகவானின் பார்வையினால் அந்த உபாதைகள் விரைவில் நீங்கி விடும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானையும், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.
* கடமைகளை முடிப்பீர்கள்!
எனக்குத் திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகின்றன. 8 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சிறு வயதில் ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டதால் எனக்கு இடது கண் தெரியாது. குழந்தைகளின் படிப்புக்குக்கூட பணம் சேர்க்க முடியாத நிலையில் இருக்கிறேன். எனக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் எப்போது தீரும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
சுபாஷ் சந்திரபோஸ், சென்னை-21.
உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி, பூர்வபுண்ய ஸ்தானாதிபதி மற்றும் பாக்யாதிபதி ஆகிய மூவரும் இணைந்திருப்பது சிறப்பு. அதே சமயம் அவர்களுடன் பகை பெற்ற கிரகம் இணைந்து, அவர்கள் மறைவு பெற்றிருப்பது பலத்தைக் குறைக்கிறது. ஆனாலும் கவலைப்பட வேண்டாம்.
எப்பாடுபட்டாவது உங்கள் கடமைகளை நன்றாகவே முடித்துவிடுவீர்கள். மேற்கூறிய இணைவு பெற்ற கிரகங்களை குருபகவான் பார்வை செய்வதால், படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்துவிடுவீர்கள். பிரதி வியாழக் கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
* மறுமணம் கைகூடும்!
எனது மகனுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு வருடத்திற்குள்ளே விவாகரத்தும் ஆகிவிட்டது. அவனுக்கு மறுமணம் நடக்குமா? வாரிசு பாக்கியம் எவ்வாறு அமையும்? இது ஒருபுறமிருக்க, எனது மகன் மளிகைத் தொழில் செய்கிறான். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மிகுந்த நஷ்டத்தைச் சந்தித்து வருகிறான். எப்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்? வேறு தொழில் ஏதேனும் செய்யலாமா?
பெயர் வெளியிட விரும்பாத பழனி வாசகர்.
உங்கள் மகனின் ஜாதகத்தில் களத்ர ஸ்தானாதிபதி மறைவு பெற்று, அசுப கிரகங்களுடன் இணைந்திருக்கிறார். இதற்கேற்ற சம தோஷம் பார்த்து மறுமணம் செய்ய வேண்டும். மற்றபடி பாக்யாதிபதி பாக்ய ஸ்தானத்திலேயே ஆட்சி செய்வதாலும், தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதாலும் "தர்ம கர்மாதிபதி யோகம்' உண்டாகிறது.
இதனால் உங்கள் மகன் 12.9.2011க்குப் பிறகு செய்தொழிலில் வளர்ச்சி அடைவார். அவர் செய்து வரும் மளிகை வியாபாரத்துடன் கணினி, ஸ்டேஷனரி, இரும்பு, ஹார்டுவேர், சிமெண்ட், பெயிண்ட் அல்லது கெமிக்கல் போன்ற துறைகளிலும் ஈடுபடச் சொல்லுங்கள். 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, மறுமணம் கைகூடும். புத்திர ஸ்தானாதிபதி மற்றும் புத்திரகாரகர்கள் பலமாக இருப்பதால் புத்திரப்பேறுக்கும் குறை இல்லை.
* சம தோஷ வரன்!
எனது மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? சர்ப்ப தோஷம் உள்ளதா? எப்படிப்பட்ட வரன் பார்க்க வேண்டும்?
குணசேகரன், சேலம்.
உங்கள் மகளின் ஜாதகப்படி சர்ப்ப தோஷம் இல்லை. குடும்ப ஸ்தானாதிபதி, குடும்ப ஸ்தான மற்றும் சுக ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. மேலும் மாங்கல்ய ஸ்தானாதிபதியும் ஆட்சி பெற்றிருக்கிறார். அதே சமயம், களத்ர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கிரகம் திருமணத் தாமதத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கேற்ற சம தோஷமுள்ள வரனாகச் சேர்க்க வேண்டும். தற்சமயம் நடப்பது சுகாதிபதியின் புக்தியாக உள்ளதாலும், அவர் குருபகவானுடன் இணைந்துள்ளதாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.
* வலுவான தொழில் ஸ்தானம்
எனது சகோதரியின் மகனுக்கு விவாகம் நடப்பதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அனைத்துப் பரிகாரங்களும் செய்துவிட்டோம். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும்? இது ஒருபுறமிருக்க, எனது சகோதரியின் மகன் சொந்தமாகத் தொழில் செய்துகொண்டிருக்கிறார். அதில் முன்னேற்றம் ஏற்படுமா?
வத்ஸலா, உடுமலை.
உங்கள் சகோதரியின் மகனுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அனுகூலமான காலகட்டம் தொடங்கியுள்ளது. குறிப்பாக திருமணத்திற்கு இது உகந்த காலம். அவருக்கு அயன ஸ்தானத்திற்கு ஏற்ற தோஷ சாம்யம் பார்த்து திருமணம் செய்யவும். மேலும் சர்ப்ப தோஷமில்லாத பெண்ணாகவும் பார்க்க வேண்டும். மற்றபடி தொழில் ஸ்தானம் வலுவாக உள்ளதால், 2019ஆம் ஆண்டுக்குள் தொழிலில் அவர் நல்ல இடத்தை அடைவார்.
* சிவபெருமானை வழிபடவும்!
எனது மகன் டிப்ளமா படித்திருக்கிறான். தாற்காலிகமாக ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறான். அவனுக்கு அரசு வேலை கிடைக்குமா? மேலும் எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? நன்கு படித்து உத்யோகம் பார்க்கும் பெண், மனைவியாக அமைவாரா?
ந. கண்ணப்பன், செய்யார் தாலுக்கா.
உங்கள் மகனுக்கு அரசு உத்யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்யோகத்தில், படிப்படியாக முன்னேற்றமடைந்துவிடுவார். அதேநேரம் சுக ஸ்தானாதிபதியும், களத்ர ஸ்தானாதிபதியும் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருக்கிறார்கள்.
இதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து திருமணம் செய்யவும். மற்றபடி நன்கு படித்து உத்யோகம் பார்க்கும் பெண், மனைவியாக அமைவார். பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
* தகுதிக்கு ஏற்ற மனைவி!
எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? எப்படிப்பட்ட மனைவி அமைவார்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
கி. பெருமாள், துறையூர்.
உங்கள் மகனின் ஜாதகப்படி லக்ன கேந்திரத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் திருமணத்தில் தாமதத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அந்தக் கிரகங்கள் களத்ர ஸ்தானத்தைப் பார்வையிடுகின்றன.
ஆனால் தற்சமயம் நடப்பது லக்னாதிபதியின் தசையாக உள்ளதாலும், பூர்வபுண்ய புத்திர ஸ்தானாதிபதியை களத்ர ஸ்தானாதிபதி குரு பகவான் பார்வை செய்வதாலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சரியான பொருத்தத்தின் பேரில் திருமணம் கைகூடும். உங்கள் மகனின் தகுதிக்கு ஏற்ற மனைவி அமைவார். பரிகாரம் எதுவும் தேவையில்லை.
* குரு பகவானின் அருட்பார்வை!
எனது மகன் என்ஜினியரிங் படித்துள்ளான். அவனுக்கு எப்போது நல்ல உத்யோகம் கிடைக்கும்? திருமணம் எப்போது நடக்கும்? அவனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா? அவனால் பெற்றோருக்கு நிம்மதி கிடைக்குமா?
ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.
உங்கள் மகனுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பொருத்தம் பார்க்கவும். லக்னாதிபதி சுப கிரகமாகி சர்ப்ப கிரகத்துடன் இணைந்திருப்பதால் கேந்திராதிபத்ய தோஷம் நிவர்த்தியாகிறது என்றாலும், அவர்கள் ஒரு கேந்திரத்திலேயே உள்ளதால் அதற்கும் ஏற்ற சம தோஷம் பார்க்க வேண்டும். மற்றபடி உங்கள் மகனின் ஜாதகப்படி தற்சமயம் குடும்பாதிபதியின் தசை நடக்கிறது.
அவர் குரு பகவானின் அருட்பார்வையைப் பெறுகிறார். அதனால் உங்கள் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைத்துவிடும். சிறப்பான குடும்ப வாழ்க்கையும் அமையும். பெற்றோர்களுக்கு அவரின் ஜாதகத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. மற்றபடி வேறு தோஷம் எதுவும் இல்லை. பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானையும், பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வாருங்கள்.
* அனைத்துப் பாக்கியங்களும் கிடைக்கும்!
எனக்கு 39 வயது ஆகிறது. இதுவரை திருமணம் ஆகவில்லை. எப்போது அது நடக்கும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? இது ஒருபுறமிருக்க.... தற்சமயம் நான் குடியிருக்கும் வீடு, தெற்கு திசை பார்த்து அமைந்துள்ளது. நான் நடத்துகின்ற கடை, மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இவற்றில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா?
குமரேசன், திருப்பூர்.
உங்கள் ஜாதகப்படி லக்னத்தில் லக்னாதிபதியும், பூர்வபுண்ய ஸ்தானாதிபதியும் அமர்ந்திருப்பதால் வாழ்க்கையில் அனைத்துப் பாக்கியங்களையும் பெற்று முன்னேறிவிடுவீர்கள். மேலும் தர்ம கர்மாதிபதிகளுடன் லாபாதிபதியும் சுக ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதும் சிறப்பு. இதனால் திருமண வாழ்க்கையிலும் வசந்தக் காற்று வீசும்.
அதேசமயம் குடும்ப ஸ்தானத்திற்கும், லக்னத்திற்கும் ஏற்றபடி சம தோஷம் பார்க்க வேண்டும். தெரிந்த தொடர்புகளின் மூலம் அந்நிய சம்பந்தம் அமையும். மற்றபடி வீடு, கடை வாசல்கள் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்பவே அமைந்துள்ளன. இந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு திருமண முயற்சிகள் வெற்றிபெறும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியையும், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.
* தூரம் கருதி நிராகரிக்க வேண்டாம்!
எனது திருமண முயற்சி பல ஆண்டுகளாகத் தோல்வியிலேயே முடிகிறது. பல ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்தும் பலனில்லை. என் திருமணம் எப்போது நடக்கும்? வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
சியாமளா, திருச்செங்கோடு.
உங்களுக்கு சர்ப்ப தோஷம் உள்ளது. மேலும் அஷ்டம ஸ்தானத்திற்கும், பாக்ய ஸ்தானத்திற்கும் ஏற்ற தோஷ சாம்யம் பார்த்து வரன் சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி பாக்யாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் உத்யோகத்தில் நீங்கள் உன்னத நிலைகளை அடைந்துவிடுவீர்கள்.
இந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தொடரும் பாக்யாதிபதியின் புக்தியில் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். சற்று தூரத்தில் அன்னிய சம்பந்தம் அமையும். ஆனால் தூரமாக இருக்கிறதே என்று நிராகரிக்க வேண்டாம். பிரதி வெள்ளிக் கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.
* பரிகாரம் போதுமானது!
என் மகனுக்கு சந்திர தசையில் சனி புக்தி நடக்கிறது. குடும்ப களத்ர ஸ்தானாதிபதி சுக்ரன், பாதக ஸ்தானத்தில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். சர்ப்ப தோஷமும் உள்ளது. இந்த நிலையில் எப்படிப்பட்ட ஜாதக அமைப்புள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? கீழ்ப்பெரும்பள்ளம் சென்று, கேது பகவானுக்குப் பரிகாரம் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
எஸ்.ஜி. சேகரன், தஞ்சாவூர்.
உங்கள் மகனுக்கு சர்ப்ப தோஷம் உள்ளது. நீங்கள் கூறியுள்ளபடி, களத்ர ஸ்தானாதிபதி கேது பகவானுடன் இணைந்துள்ளார். இந்தக் குறைகளுக்கு ஏற்றபடி தோஷ சாம்யம் பார்த்துச் சேர்க்க வேண்டும். அதே சமயம் அவர்களை லக்னாதிபதி, சுகாதிபதி மற்றும் பாக்யாதிபதிகள் பார்வை செய்வதால் குறை சற்று நீங்கும்.
களத்ர ஸ்தானாதிபதியும், கேது பகவானும் லக்னாதிபதி மற்றும் பாக்யாதிபதிகளின் சாரம் பெற்றிருப்பதும் குறையைக் குறைக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். நீங்கள் செய்துள்ள பரிகாரம் போதுமானது. ந்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.