
த ஞ்சை கருந்திட்டைக்குடிக்கும், பள்ளி அக்ரஹாரத்திற்கும் இடையேயுள்ள பெருவழிச் சாலையில், "விண்ணாற்றங்கரை' என்றழைக்கப் பெறும் தலம் உள்ளது. இங்கு வீர நரசிங்கன், மணிக்குன்றன், நீலமேகன் ஆகிய திவ்யதேசத்து எம்பெருமான்கள் உள்ளனர்.
கூடவே (ஆழ்வார்களால் பாடப் பெறாத) வரதராஜன், கல்யாண வேங்கடேசர் ஆகியோரும் கோயில் கொண்டுள்ளனர். இதனால் இந்தப் பகுதி, "பஞ்ச (ஐந்து) விஷ்ணுத் தலம்' எனப்படுகிறது.
பராசர முனிவர் இத்தலம் வந்து தவம் செய்து, இங்குள்ள திருமால் வடிவங்களைக் கண்குளிரக் கண்குளிரக் கண்டதால் "பராசர úக்ஷத்திரம்' என்றும் விண்ணாற்றங்கரை குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ள வீர நரசிங்கப் பெருமாள், மார்க்கண்டேயருக்குக் காட்சி தந்ததால் "மார்க்கண்டேய úக்ஷத்திரம்' என்றும், நரசிங்கன் வராக உருக் கொண்டதால் "வராக úக்ஷத்திரம்' என்றும்கூட இத்தலம் அழைக்கப்படுகின்றது.
இங்குள்ள ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம், எதிர் வரும் நவம்பர் 1-ம் தேதியன்று நடைபெற உள்ளது.
ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில் :
ஸ்ரீ நீலமேகப் பெருமாள் என்பது இங்குள்ள திருமாலின் திருநாமம் ஆகும். ""கருமுகில்'' என்று திருமங்கையாழ்வார் இவரை போற்றியுள்ளார். செங்கமலவல்லித் தாயார் என்பது தனிக்கோயில் நாச்சியார் பெயர். ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில், தஞ்சை வெண்ணாற்றங்கரையின் மேற்குக் கோடியில், திருவையாற்றுப் பெருவழியில், கிழக்குப் பார்த்த திருக்கோயிலாக அமைந்துள்ளது.
கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் ராஜகோபுரத்தின் வலப்புறத்தில் கல்விக்கடவுளான பரிமுகன், திருமகளுடன் சேவை தருகின்றார். அதன்பின் வாகன மண்டபமும், மடைப் பள்ளியும் உள்ளன. மடைப்பள்ளியிலிருந்து மேற்கே கிழக்கு நோக்கியவாறு தாயார் சந்நிதியும், அதற்கு சற்று வடக்கில் சௌந்தர்ய விமானத்தின் கீழ் அருள்பாலிக்கும் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் சந்நிதியும் அமைந்துள்ளன. அப்படியே வலமாகக் கிழக்கு நோக்கி வந்தால், ராஜகோபுரத்தின் இடது மூலையில் ஹயக்ரீவர் சந்நிதிக்கு எதிரில் ஆழ்வார், தேசிகன், ராமானுஜர் சந்நிதிகள் காணப்படுகின்றன.
துவஜ ஸ்தம்பம், கருட மண்டபம் ஆகியவற்றைக் கடந்து உள்ளே செல்லுங்கால் முகமண்டபத்தில் அர்த்த மண்டபத்தை நெருங்குவதற்கு முன் வலது மூலையில் சேனை முதல்வர், ஆண்டாள், ஸ்ரீ லஷ்மி நரசிம்மர், ஸ்ரீவராஹப் பெருமாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கர்பக்கிரகத்தில் உபயநாச்சியாருடன் அமர்ந்த திருக்கோலத்தில் மூலவரும், நின்ற திருக்கோலத்தில் உற்சவரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
"தஞ்சைக் கோயில்' என்று இத்திருக்கோயிலை பூதத்தாழ்வாரும், "தஞ்சை மாமணிக்கோயில்' என்று திருமங்கை ஆழ்வாரும் பாடியுள்ளனர்.
வாய்ப்புள்ளவர்கள், நீலமேகப் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷண விழாவில் கலந்து கொண்டு பெருமாளின் திருவருளைப் பெற்றுய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.