

உலகைக் காக்கும் கடவுளான திருமகளின் கருணை வடிவமே மகாலட்சுமி. இந்த அன்னையின் அருட் பார்வை, செல்வ வளத்தினை அள்ளித் தரும். ஆயினும் அற வழியில் நின்று, தர்ம காரியங்களுக்காகச் செலவிடாத தீயவர்களின் வாழ்வில், அச்செல்வமே துன்பத்தைத் தரும் கருவியாகவும் மாறும். நீதி வழுவாத நிறை மதியாளர்களின் வாழ்விலோ, "நிம்மதி' என்னும் பெறற்கரிய செல்வத்தைக் குறைவின்றி வழங்குபவளும் மகாலட்சுமியே!
பாற்கடலில் பிறந்ததால் லட்சுமியை, "அலை மகள்' என்றும் கூறுவர். அமுதம் வேண்டி பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்தபோது தோன்றிய திருமகளை, திருமால் மணம் முடித்ததாகப் புராணங்கள் கூறும். எனினும் ஆதியந்தம் இல்லாத பரம்பொருளின் ஒரு வடிவமே அலைமகள். இவளை வணங்குபவர்களுக்கு முக்தி என்னும் "ஐஸ்வர்யம்' நிச்சயம் உண்டு.
பாரதத்தில் உள்ள பல்வேறு திருமால் ஆலயங்களில் மகாலட்சுமிக்கு சந்நிதி உண்டு. ஆயினும் கோல்ஹாபூர், மும்பை, வாராணசி போன்ற தலங்களில் தனிக்கோயில்களில் திருமகள் அருள் பாலிக்கின்றாள். வாராணசியில், "மணிகர்ணிகா துறை'யின் அருகே எழுந்தருளியுள்ள "சித்தி லட்சுமி'யை முறைப்படி வணங்குபவர்களுக்கு அணிமாதி சித்திகளும் கைகூடும் என்று ஸ்காந்த புராணத்தில் உள்ள "காசி காண்டம்' என்னும் பகுதி கூறுகின்றது.
வெற்றிலை, பாக்கு, தீபம், பூஜைக்குரிய மணி, பசுவின் பின்புறம், யானையின் முகம், தங்கம்- வெள்ளி போன்ற உயர்ந்த உலோகங்கள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்கள், பால், தானியம், வீரர்களின் வாள், நெல்லிக்காய், தாமரை மலர் போன்றவற்றில் திருமகள் வாசம் செய்கின்றாள்.
புதிய ஆலயத்தில் லட்சுமி தேவியின் நூதனச் சிலை வடிவை எழுந்தருளச் செய்யும்போது ஆல், அரசு, வன்னி, அத்தி, புரசு, வில்வ மரங்களின் சமித்துகள் (சுள்ளி) கொண்டு ஹோமம் செய்வது மரபு. வில்வம், சிவபூஜைக்கு உகந்தது எனினும் அதுவும் திருமகள் வசிக்கும் தளமாகவே கருதப்படுகிறது.
தமிழகத்தை ஆண்ட சோழர்கள், பெரும்பாலும் சிவநேயச் செல்வர்களே! ஆயினும் அவர்கள் திருமகளிடம் இணையற்ற பக்தி உடையவர்கள். சோழர்கள் காலத்துக் கல்வெட்டுகள் பலவற்றில், "ஜெய மகள், வீரமாது' என்ற பெயர்களில் திருமகளைப் போற்றியுள்ளனர்.
சரஸ்வதி தேவி, வெண்ணிற ஆடை அணிபவள் என்பது பிரசித்தம். ஆனால் வேதத்தில், "தாமரை மலர் மீது அமர்பவளாகவும், தூய வெள்ளாடை அணிபவளாகவும்' மகாலட்சுமி துதிக்கப்படுகின்றாள். திருமகளை வணங்குபவர்களுக்குக் கள்ளமில்லா வெள்ளை மனம் வாய்க்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.