

மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. பிள்ளையைப் பெற்று, துணிகளில் பாதுகாப்பாகச் சுற்றி வைத்து, தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
""ஆண்டவர் ஏழ்மையில் பிறக்கத் திருவுளமானார். செல்வராய் இருந்தும், அவருடைய ஏழ்மையால் நாம் செல்வராகும்படி நமக்காக ஏழையானார்'' (2கொரி 8:9) என்ற வசனம் இங்கே சிந்திக்கத் தக்கது.
மேற்கண்ட இறை வார்த்தை, இயேசுவின் பிறப்பையும், அவரது வாழ்க்கையையும் மிக ரத்தினச் சுருக்கமாகவும் எடுத்துக் கூறுகின்றது.
"திருவருகை' அல்லது கிறிஸ்துமஸ் விழா என்பது இறைவனின் ஒரே மகன் இயேசு, அன்னை மரியாள் வழியாக பாவிகளான மக்களை மீட்க உலகுக்கு வருகை தந்த வரலாற்று நிகழ்வாகும்.
அன்பின் ஊற்றாக, அமைதியின் வடிவமாக, வறுமையில் பிறந்து, உலகச் செல்வங்களையெல்லாம் புறக்கணித்தவராக வாழ்ந்தார் இயேசுநாதர்.
தாழ்ச்சியான நிலையில் பிறந்து, உலக ஆடம்பரங்களை அகற்றி, துன்ப நிலையில் பிறந்து, இன்பங்களை ஒதுக்கிய இறைமகனின் வருகையை கிறிஸ்துமஸ் விழாவாக உலக கிறிஸ்துவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.
இப்பெருவிழாவினை எவ்வாறெல்லாம் புதுமையான முறைகளில் கொண்டாடலாம் என்று கற்பனையிலும், கனவுகளிலும் திளைத்து, பின்னர் செயல்படுத்தி மகிழ்கின்றனர்.
ஆனால் இயேசுவின் வருகை, எளிமையானதாகக் கொண்டாடப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் துவக்கத்தில் வரும் இறை வார்த்தையின் மெய்ப் பொருள்.
ஏழை, எளியவர்களுக்கு உதவுவோம்
""நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்'' (யாக்: 2:5) என்ற இறை வார்த்தையை நாமனைவரும் போற்ற வேண்டும். இன்றைய நவீன உலகில், நாகரிகம் என்ற போர்வையில், ஏழை-எளியவர்களைப் பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாதிருத்தல் கூடாது.
பண்டிகைக் காலங்களில், நம்மிடம் மீதியுள்ளதை இல்லாதார்க்குக் கொடுத்து உதவும் மனப்பாங்கினை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களின் வழியாக வரும் பல விதமான கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, கண்ணைக் கூசச் செய்கிற களியாட்டங்களில் மனதைச் செலுத்துதலைத் தவிர்ப்பதும் அவசியம். இவ்வாறெல்லாம் பண்போடிருப்பதே இறைமகன் இயேசுவின் வருகையை உண்மையாகக் கொண்டாடுவதாகும்.
""இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்'' (மாற்கு 7:7) என்ற இறைமகனின் சாடலை, நாமனைவருமே நினைவு கூர்தல் அவசியம். நம் பாவங்களைக் கழுவ வந்த இயேசுவின் நல்லுபதேசங்களைப் புறக்கணித்துவிட்டு, ஆடம்பரங்களிலேயே திளைப்பதைத் தவிர்ப்போம்.
செல்வந்தன் உவமை
""எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' என்றார் இறைமகன் இயேசு.
இதை நிறுவ, அவர் ஓர் உவமையையும் சொன்னார்: ""செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம், நன்றாய் விளைந்தது. அவன், "நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!' என்று எண்ணினான். பின்னர், "ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும், பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு என் உள்ளத்திடம், என் நெஞ்சமே! உனக்குப் பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு! பல்லாண்டுகள் உண்டு, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்' என்று தனக்குள் கூறிக் கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், "அறிவிலியே! இன்றிரவே உன் உயிர் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' எனக் கேட்டார்.'' (லூக்கா 12:15-20)
கவலை வேண்டாம்... உங்கள் தந்தைக்குத் தெரியும்:
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது : ""ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். உயிர் வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? பறவைகளை கவனியுங்கள். அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை. அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை; களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா? கவலைப்படுவதால் உங்களுள் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? ஆதலால் மிகச் சிறிய ஒரு செயலைக்கூடச் செய்ய முடியாத நீங்கள் மற்றவை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?
காட்டுச் செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கூர்ந்து கவனியுங்கள். அவை உழைப்பதுமில்லை; நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையிலெல்லாம் அவற்றில் ஒன்றைப் போல் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
நம்பிக்கைக் குன்றியவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்வார் அல்லவா? ஆதலால் எதை உண்பது, எதைக் குடிப்பது எனத் தேடிக் கொண்டிருக்கவும் வேண்டாம்; கவலை கொண்டிருக்கவும் வேண்டாம். உங்களுக்கு இவை தேவையென உங்கள் தந்தைக்குத் தெரியும். நீங்கள் அவருடைய ஆட்சியை நாடுங்கள்; அப்பொழுது அவை உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள். இற்றுப் போகாத பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்''. (லூக்கா12:22-34)
உண்மையான கிறிஸ்துமஸ்
நம் மீது அன்பு கொண்டு, நம் பாவங்களைப் போக்க அன்பே வடிவாகப் பிறந்த இயேசுவை போற்றுவோம்! பகைமை, வஞ்சகம், பொறாமை, களவு, மோகம் போன்ற பாவச் செயல்களை விலக்கி, எளியவர்க்கும் ஏழைகளுக்கும் நம்மால் இயன்ற அளவு உதவிகள் புரிந்து, அன்பில் ஓங்கி வளர்வோம்!
பிறரன்பில் வளர்ச்சி காணவும்,
தாழ்ச்சியுள்ளவர்களாகவும், எளிமையை விரும்பி ஏற்று, ஆடம்பரங்களையும், உலகு சார்ந்த இன்பங்களை அகற்றி இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கவும், இறைமகன் பிறந்த இந்த நன்னாளில் அவரின் அருள் வேண்டி மன்றாடுவோம்.
கார் மேகம்! பனிப் படலம்!
உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால், உங்களுக்கு என்ன கைமாறு கிடைக்கும்?
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர்.
ஆண்டவரும், போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றொருவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.
நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார்.
அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
மலைகளை இடம் பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என் மீது அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.
என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும், என் உடலைச் சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும், அடித்தளமுமாய் அமைவதாக!
நீங்கள் அறிவிலும், அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன்.
அன்பர்களே! ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
நம் ஆண்டவரும், மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள்.
கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்.
குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம், அன்பின் மூலம் இணைந்து உயிர்பெறச் செய்தார் ஆண்டவர். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.
நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாத இது கடவுளின் கொடை.
உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் (கடவுளிடம்) திரும்பி வா! நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.
தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல நான் (இறைவன்) உங்களைத் தேற்றுவேன்.
கடவுளையும், நமது ஆண்டவராகிய இயேசுவையும் நீங்கள் அறிவதன் வாயிலாக உங்களுக்கு அருளும், நலமும் பெருகுக!
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறு பெற்றோர்.
ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
என் பொருட்டு (இயேசுவுக்காக) மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை, பொல்லாதவை எல்லாம் சொல்லும்போதும் நீங்கள் பேறு பெற்றவர்களே!
உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன் மேல் வந்து உன்னில் நிலைக்கும். நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய்; வயல் வெளியிலும் ஆசி பெற்றிடுவாய்.
என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்! உலகம் தோன்றியது முதல், உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம்.
- பைபிள் பொன்மொழிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.