சிவமயமே எங்கும் சிவமயமே

சூரியன் எந்த ராசியில் இருக்கின்றாரோ அது அந்த மாதத்தின் பெயர். சூரியனை வைத்துக் கணக்கிடுவதை "சௌரமானம்' என்றும், சந்திரனை வைத்துக் கணக்கிடுவதை "சாந்திரமானம்' என்றும் ஜோதிட நூல்கள் சொல்லும். அமாவாசைக்கு
சிவமயமே எங்கும் சிவமயமே
Updated on
4 min read

சூரியன் எந்த ராசியில் இருக்கின்றாரோ அது அந்த மாதத்தின் பெயர். சூரியனை வைத்துக் கணக்கிடுவதை "சௌரமானம்' என்றும், சந்திரனை வைத்துக் கணக்கிடுவதை "சாந்திரமானம்' என்றும் ஜோதிட நூல்கள் சொல்லும். அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் பௌர்ணமிவரை சுக்லபட்சம். இந்த சுக்லபட்ச பிரதமையிலிருந்து அமாவாசை முடிய சாந்திரமானப்படி ஒரு மாதம். சாந்திரமானப்படி மாதத்தைக் கணக்கிடுபவர்களும்,  சௌரமானப்படி மாதத்தைக் கணக்கிடுபவர்களும் உள்ளனர். இதனாலேயே சில சமயங்களில் சில பண்டிகைகள் முன் பின்னாகக் கொண்டாடப்படுகின்றன.

அவ்வகையிலே இவ்வாண்டு பிப்ரவரி 12ம் தேதி சாந்திரமானப்படியும், மார்ச் 13ம் தேதி சௌரமானப்படியும் மகாசிவராத்திரி விழா ஆங்காங்கே கொண்டாடப்படுகின்றன.

பஞ்சபூதத் தலங்களில் ஒன்றானதும், தேவாரப் பாடல் பெற்றதுமான ஸ்ரீகாளஹஸ்தி திருத்தலத்தில் பிப்ரவரி 12ம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு பத்து நாட்களுக்கு பெருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. நக்கீரர் "கயிலை பாதி, காளத்தி பாதி' என்று இத்தலப் பெருமையை பாடியுள்ளார். சந்திரனை தனது ஜடாமுடியில் தரித்தவர்  என்ற காரணத்தினால் சிவபெருமான் "சந்திரமௌலீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். எனவே இந்த சாந்திரமான மாதத்தில் வரும் சிவராத்திரி நன்னாளில் சந்திர மௌலீஸ்வரரான சிவபெருமானை வழிபடுவதும், ஒரு வகையில் பொருத்தமானதே!

சிவராத்திரி மகிமை

கயிலையில் உமாதேவி விளையாட்டாக தன் திருக்கரங்களால் பரமேசுவரனின் திருக்கண்களை பின்புறமாக வந்து பொத்திவிடுகிறாள். எங்கும் பேரிருள் பரவுகிறது. இந்நிலையில் தேவர்கள் சிவபூஜை செய்த இரவே சிவராத்திரி என்பர் சிலர்.  திருமாலும், பிரம்மனும் அடிமுடி தேடியும் காணாத அருட் பெருஞ்ஜோதி பேரொளிப் பிழம்பாகத் தோன்றிய தினமே சிவராத்திரி எனவும், தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை சிவன் உண்டு, அதைத் தன் கழுத்திலேயே நிறுத்திய ராத்திரியே சிவராத்திரி எனவும் சில புராணங்கள் விவரிக்கின்றன.

சிவராத்திரி விரத பலன்

சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்ற பலவகைப் பொருளைத் தரும். சிவமான ராத்திரி என்பதே இவைகளில் மிகப் பொருத்தமானது.

இப்பூவுலகில் முக்தியளிக்கக் கூடியது சிவார்ச்சனையும், ஸ்ரீ ருத்திர பாராயணமும், சிவராத்திரி உபவாசம் இருத்தலும் ஆகும். சூரியன், முருகன், எமன், மன்மதன், இந்திரன், அக்னி, சந்திரன், குபேரன் முதலியோர் முறைப்படி சிவராத்திரி விரதமிருந்து பேறு பெற்றவர்கள். ஆனால் இப்படி விரதமேதும் இருக்காமல் ஒரு வில்வ மரத்தடியில் சிவராத்திரி அன்று சிவன், பார்வதி இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அந்த மரத்திலிருந்த குரங்கு ஒன்று தானும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தது. தூக்கம் வராத குரங்கு வில்வ இலைகளைப் பறித்து சிவன் மேலும், பார்வதி மேலும் வீசியபடி இருந்தது. இரவு முழுவதும் தூங்காமல் அந்தக் குரங்கு வீசிய வில்வ இலைகளை ஏற்று, சிவபெருமான் அதனை முசுகுந்த சக்கரவர்த்தியாய்ப் பிறக்க அருள் புரிந்தார்.

சிவன் லிங்க உருவமாகக் காட்சியளிக்கும் அற்புதம் நமது ஆலயங்களில் சிவபெருமான் லிங்க ரூபமாகக் காட்சியளிப்பதைக் காண்கின்றோம். நமது முன்னோர்கள் அருவ வழிபாடு, உருவ வழிபாடு, அருவுருவ  வழிபாடு என்று மூன்று முறைகளை வகுத்தனர். எந்த உருவமும் இல்லாத இறைவனை மனதில் தியானிக்க ஏதாவது ஒரு மார்க்கம் வேண்டும் அல்லவா? அதற்காகவே லிங்கம், மகாமேரு, பாதம் போன்றவைகள் ஏற்பட்டிருக்கின்றன.

சிவலிங்கத்தை சைவர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் முக்காலத்தில் வழிபட்டனர். ஏனென்றால் அதில் சிவம் இருக்கின்றது; விஷ்ணு இருக்கிறார்; பிரம்மனும் இருக்கிறார். எல்லாக் கடவுளையும் ஒன்று சேர்த்தே லிங்கம் விளங்குகிறது. "மலர்ந்த அயன் மாலுருத்திரன் மகேசன்' என்பது திருமூலர் வாக்கு. பொதுவாக சிவலிங்கங்கள் 28 வகைப்படும். லிங்க தரிசன பலனைப் பற்றி புராண நூல்கள் பல்வாறு விவரிக்கின்றன.

இந்தியாவில் மிகப் பழமையான லிங்கம் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) ஆந்திராவிலுள்ள குடிமங்கலம் என்கிற கிராமத்தில் உள்ள ஆலயத்தில் உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. ஆனால் வேதத்திலேயே "சிவலிங்க வர்ணனை' உள்ளதால், ஆய்வாளர்களின் கருத்தை முழுமையானதாக எண்ண இடமில்லை. "அருவமும் உருவமும் ஆனாய் போற்றி' என்று மணிவாசகப் பெருமான் போற்றுகிறார். ஓங்கார ஒலியைக் குறிக்கும் வடிவமே லிங்கம் என்று வேதங்களும், ஆகமங்களும் உரைக்கின்றன.

பஞ்சாட்சர மகிமை

சிவனுக்கு உகந்த மந்திரம் "நம: சிவாயா' என்கிற பஞ்சாட்சரமாகும். திரு ஐந்தெழுத்தின் அருமையை நாயன்மார்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். இந்த மகா மந்திரம் வேதத்தின் நடுவில் காணப்படுகிறது. "பழுத்தன ஐந்தும் பழமறையுள்ளே' என்பது திருமூலர் வாக்கு. ""வேத நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நமச்சிவாயவே'' என்பது சம்பந்தர் வாக்கு.

பஞ்சாட்சரத்தில் தூலம், சூக்குமம், காரணம் எனப் பல வகைகள் உண்டு. இவற்றை தக்க குருவின் மூலம் அறியலாம். குரு உபதேசமின்றி எல்லோரும் எப்போதும் ஜபித்துப் பேறு பெற "நம: சிவாய' என்ற திருநாமமே போதும். இதனால் இகவுலகிலும் நன்மைகள் பல பெற்று, சிவ கதியையும் திண்ணமாக அடையலாம்.

"சிவ' வார்த்தையின் அர்த்தம்

"சிவ' என்ற வார்த்தை எப்படி ஏற்பட்டது என்று நோக்குங்கால், ஆரம்ப எழுத்தான "சி' என்ற எழுத்தைப் பார்த்தால் ச்+இ+அ என்று ஆகிறது. இதில் இயங்கும் எழுத்து "ச'கரமும் "இ'கரமும் ஆகும். "ச'கரம் "சரண்' என்னும் புகலிடத்தைக் குறிக்கும் சொல். "இ'கரம் "இவன்' என்பதைக் குறிக்கும் சொல். "சிவனிடம்தான் நீ சரணடைய வேண்டும்' என்பதை "சி' என்ற எழுத்து உணர்த்துகிறது. அதே போன்று "வ' என்ற எழுத்து உயிரைக் குறிப்பது.

எனவே உயிர்கள் சிவபெருமானை சரண் அடைந்தால், எல்லா துன்பங்களும் நீங்கி அவன் அருள் பெறலாம் என்பதே "சிவ' என்பதின் அர்த்தம்.

திருநீறு பூசுவதின் தத்துவம்

சிவனைப் பற்றிச் சொல்லும்போது திருநீறு பூசுவதின் மகிமையையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சிவனை வழிபடுபவர்களின் முக்கிய சின்னம் திருநீறு என்கிற விபூதி. இது பசுவின் சாணத்தை எரித்து உண்டாக்கப்படுகிறது. ஆதலால் அது பசுக்களாகிய ஆன்மாக்களது மலங்களை நீக்குதலைத் தெரிவிக்கும் ஒரு உன்னதமான சைவச் சின்னம். ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் நீக்குவது திருநீறு.

மேலும் திருநீறு சாம்பலே. எப்பொருள் அழியினும் தான் அழியாது நிலை பெற்றிருக்கும் அடிநிலைப் பொருளே சாம்பல். எல்லாம் அழியும்போதும் அழியாமல் இருக்கும் இறைவனை அது குறிக்கும். தனது திருநீற்றுப் பதிகத்தில் ஞானசம்பந்தர், ""வேதத்தில் உள்ளது நீறு'' என்று குறிப்பிடுகிறார். ஒüவைப்பிராட்டியார் ""நீறில்லா நெற்றிப் பாழ்'' என்று பாடியுள்ளார். அது போன்றே ருத்ராட்சமும் சிவனடியார்கள் தரித்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான சின்னமாகும்.

உயர்ந்த பதவி

இப்பூவுலகில் முக்தியடையும் ஆன்மாக்கள் கடைசியில் போய்ச் சேர்வது சைவர்களைப் பொறுத்தவரை கயிலாயமும், வைணவர்களைப் பொறுத்தவரையில் வைகுண்டமும் ஆகும். இவ்விரு உயர்பதவிகளை அடைய நாம் செய்ய வேண்டிய கர்மாக்களையும், கடமைகளையும் நினைவூட்டும் வகையில் அவ்வப்பொழுது ஆசார்ய புருஷர்களும், மகான்களும் இப்பூவுலகில் அவதரித்து நம்மை நல் வழிப் படுத்துகின்றனர். வைணவ ஆழ்வார்களில் ஒருவரான சுவாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருநாடு (வைகுண்டம்) செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே அநுபவித்து, "சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழங்கின' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களில் பரக்கப் பேசுகிறார்.

அதேபோன்று ஆதி சங்கர பகவத் பாதாள், பரமேசுவரனை தனது கண்களால் பார்த்து பிரம்மானந்தம் அடைந்தார். அந்த ஆனந்தத்தை நம் போன்ற சிவபக்தர்களும் உணர்வதற்காக பரம கருணையுடன் தான் கண்டதை கண்டபடியே அருளிச் செய்ததுடன், அதை அறிவதால் நாமும் அந்த சிவதரிசனம் பண்ணிய பலன்களை அடையலாம் என்று தனது "சிவகேசாதி பாதபர்யந்த ஸ்துதி' என்ற நூலின் மூலமாக உபதேசிக்கிறார்.

இந்த ஸ்துதி மூலம் சிவபெருமான் எல்லோரும் மங்களம் அடையச் செய்கிறார் என்று சிலாகித்துக் கூறுகிறார். சிவபாதாதி ஸ்தோத்திரத்தில் முதலில் பாதம் முதல் தலைவரை சிவ பாதங்கள் வைத்திருக்கும் பீடத்தைப் பற்றியும், அவருடைய பாதகமலங்களை வர்ணித்தும், தொடர்ந்து சிவ சபையை வர்ணித்தும் போற்றுகிறார்.

""பகவான் பரமேஸ்வரன் மூவுலகத்திற்கும் அதிபதியானதால் உத்தமமான சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். அங்கு பாதத்தை வைத்துக் கொள்ள அழகான பீடம் உள்ளது. அது தாமரைப் பூவைப் போன்றே இருக்கிறது. சங்கரனாரது பாதங்களில் உள்ள ரேகைகளும் தாமரைப் பூவைப் போன்றே இருக்கின்றன. இத்துடன் அந்த திவ்ய சரணத்தில் தேவர்கள் வணங்குகிறார்கள். அவர்கள் தலையில் ரத்ன கிரீடங்கள் உள்ளன.

அந்த ரத்னங்களுடன் ஸ்ரீபரமேசுவரனின் சரணத்தில் இருக்கும் விரல்களின் நகங்களும் ரத்னங்கள் போல் பிரகாசிக்கின்றன'' என்றெல்லாம் ஆதி சங்கரர் விவரித்துள்ளார்.

இதில் மட்டும் திருப்தி அடையாமல் ஆதி சங்கரர் திரும்பவும் "சிவகேசாதி பாதம்' (தலையிலிருந்து பாதம் வரை) என்னும் ஸ்துதியை இயற்றி, சிவபெருமான் வீற்றிருக்கும் கோலத்தைப் பாடி பரவசப்படுகிறார்.

சிவன் என்றால் "மங்களம் அளிப்பவன்' என்பது பொருள். உலக உயிர்கள் யாவும் இன்பமாக வாழவே விரும்புகின்றன. எனவே உலகம் முழுவதும் மங்களம் பெருக அந்த சிவபெருமானை இத்திருநாளில் வணங்கி அருள்பெறுவோம். சர்வம் சிவ (மங்களம்) மயமாக அவன் தாள் வணங்கி வேண்டுவோம்.  இந்தியாவில் மட்டுமில்லாமல் அயல்நாடுகளிலும் சிவாலயங்கள் உள்ளன. "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்ற மணிவாசகப் பெருமான் வாக்கிற்கு இணங்க, தென்னாட்டில் மட்டுமில்லாமல் உலகெங்கும்  சிவராத்திரி நன்னாளில் அவன் புகழ் பாடி மகிழ்வோம்.

இன்றிரவு, சாந்திரமான முறைப்படி சிவராத்திரி விரதமிருப்போர், நான்கு கால அபிஷேக அர்ச்சனைகளை சிவலிங்கத்துக்குப் புரிவார்கள். இரவு 11.15 முதல் 12.45 வரை "லிங்கோத்பவ காலம்' எனப்படும். இந்நேரத்தில் சிவ நாமங்களை ஜபிப்பது, கோடி புண்ணியங்களைத் தரும். திருக்காளத்தி வரை செல்ல இயலாதவர்கள், இருக்கின்ற இடத்திலேயே காளத்தியப்பரை மனதில் நிறுத்தி, திருவைந்தெழுத்தை ஓதினால், அவர்களது உள்ளமே திருக்கயிலை ஆகும். சிவ மயமே எங்கும் சிவ மயமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com