

சிவத்தொண்டில் குறிப்பிடத் தக்கவர்களாக போற்றப்படுவோர் அறுபத்து மூவர் ஆவர். இவர்களின் தொண்டுகளுக்கு இல்லாத தனிச் சிறப்பு, சிறுத் தொண்டரின் தொண்டுக்கு உண்டு என்றால் அது மிகையல்ல. சிவனடியார்க்கு தன் ஒரே புதல்வனை பிள்ளைக்கறியாகப் படைத்த சிறுத் தொண்டரின் தியாகம், எவரும் செய்யத் துணியாதது என்பதில் ஐயமில்லை. இத்தொண்டரால் பெருமை பெறுவது "திருச்செங்காட்டங்குடி' என்னும் திருத்தலமாகும்.
சிறுத் தொண்டர்
நரசிம்ம பல்லவ மன்னனிடம் படைத் தளபதியாக விளங்கியவர் பரஞ்சோதியார். இவர் தலைசிறந்த சிவத் தொண்டர். இவரது காலம் ஏழாம் நூற்றாண்டாகும். இவர் மன்னனின் ஆணைப்படி வாதாபி மீது போர் தொடுத்து மாபெரும் வெற்றி பெற்றார்.
பரஞ்சோதியார் சிவத் தொண்டில் சிறந்து விளங்குவதைக் கேள்விப்பட்ட மன்னர், அவரை வணங்கி, அத்தொண்டிலேயே அவர் முழுமையாக ஈடுபட அனுமதி அளித்தார்.
உடனே தனது "போர்த் தளபதி' பதவியை விட்டு நீங்கி, சிறுத் தொண்டர் என்னும் பெயருடன், தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடி வந்து சேர்ந்தார். அங்கே அவரது மனைவியாரான "திருவெண்காட்டு நங்கை'யுடன் சிவத்தொண்டில் ஈடுபட்டார். நாள்தோறும் ஒரு சிவனடியாருக்காவது அன்னமிட்டு உண்பது அந்தத் தம்பதியின் வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில், ஒரு நாள் ஒரு அடியார் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால், "யாரேனும் சிவனடியார் கிடைக்கின்றாரா?' என்று பார்த்து வரப் புறப்பட்டார். இவரின் அன்பை வெளிப்படுத்த விரும்பிய இறைவன், பைரவர் வேடம் தாங்கினார்; சிறுத் தொண்டரின் இல்லத்திற்கு வந்தார்.
அவரை சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையும், பணிப்பெண் சந்தன நங்கையும் வரவேற்றனர். தன்னை "உத்திராபதி' என்று அறிமுகப்படுத்திக் கொண்ட சிவபெருமான், ""பெண்கள் மட்டுமே உள்ள இல்லத்தில் யாம் புகுவதில்லை, யாம் கணபதீச்சரத்து (திருச்செங்காட்டங்குடி கோயில்) அருகே உள்ள ஆத்திமரத்தடியில் காத்திருக்கிறோம். சிறுத்தொண்டர் வந்ததும் வருகிறோம்'' என்று கூறிச் சென்றுவிட்டார்.
அடியார் கிடைக்காமல் மனம் வருந்தி வீடு திரும்பிய சிறுத் தொண்டர், நடந்ததை அறிந்தார். உடனே ஆத்திமரத்தடிக்கு ஓடினார். அங்கே சிவபெருமான், சிவனடியார் கோலத்தில் காத்திருந்தார். அவரை அமுதுண்ண அழைத்தபோது, ""நான் நரப்பசு மட்டுமே உண்பேன்; எனக்கு பெற்றோரின் விருப்பத்தின் பேரில் ஊனமில்லாத தலைமகனின் கறி சமைத்துத் தந்தால் சாப்பிட வருவேன்'' என்று கூறினார்.
இதைக் கேட்டு சற்றும் தயங்காத சிறுத் தொண்டர், அடியார்க்கு அமுது படைக்க தனக்கொரு பிள்ளை பிறந்ததை எண்ணி மகிழ்ந்தார். அவரது மனைவியும் கணவன் சொல் தட்டாத காரிகை. அதனால் மனதைத் திடமாக்கிக் கொண்டு, பிள்ளைக் கறி சமைக்க ஒப்புக் கொண்டாள். இருவரும் மனமொருமித்து, சிவனடியார்க்கு பிள்ளைக் கறி சமைக்கத் தயாராகினர். ஆகா! இவர்களது மெய்யன்பை யார்தான் உணர வல்லார்?
தங்கள் குழந்தையான சீராளனைப் பள்ளிக் கூடத்தில் இருந்து அழைத்து வந்து, அவனை ஒரு காய்கறிப் பொருளாகவே எண்ணி, அரிந்து கறி சமைத்தனர், சிறுத் தொண்டரும் அவரது மனைவியாரும்! சமைத்ததை வாழை இலையில் பரிமாறினர்.
சாப்பிட அமர்ந்த இறைவன், ஒன்றும் அறியாதவர் போல், "உன் மகனையும் அழைத்து என் பக்கத்தில் அமர வைத்தால்தான் சாப்பிடுவேன்' என்று பிடிவாதம் செய்தார். வேறு வழியின்றி சிறுத் தொண்டர் வெளியே சென்று, ""கண்மணியே சீராளா! ஓடி வா! சிவனடியார் நாம் உய்யும்படி உடன் உண்ண உன்னை அழைக்கின்றார், ஓடி வா!'' என்று ஓலமிட்டு அழைத்தார்.
அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.
பள்ளிக்கூடத்திலிருந்து சீராளன் வழக்கம்போல ஓடி வந்தான்! அவனைக் கண்டு அதிசயித்த சிறுத் தொண்டர், அவனை வாரி அணைத்து சிவனடியாரிடம் கொண்டு சென்றார். அங்கே அடியாரைக் காணவில்லை. இவை அனைத்தும் இறைவனின் திருவருளே என்பதை உணர்ந்தனர். அப்போது வான வீதியில் காளை வாகனத்தில், அன்னை பார்வதியுடன் இறைவன் சோமாஸ்கந்தராகத் தோன்றி காட்சியளித்து அருள் வழங்கினார்.
இச்சம்பவம் நிகழ்ந்த நாள், சித்திரை மாதம் பரணி நட்சத்திர நாளாகும். இன்றும் இந்த ஐதீகம், "அமுது படையல் திருநாளாக' ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. பிள்ளைக் கறி கேட்டு வந்த "உத்திராபதி' என்னும் பைரவர், திருங்செங்காட்டங்குடி கோயிலில் தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றார்.
கஜமுகன்
மகத நாட்டை ஆண்ட மன்னனுக்கு விபுதை என்ற அசுர குலப் பெண் மனைவியாக இருந்தாள். அவளுக்கு யானைத் தலையும், அசுர உடலும் உடைய மகன் பிறந்தான். அதனால் அவன் கஜமுகாசுரன் என்று அழைக்கப்பட்டான். சிவனை நோக்கித் தவமிருந்து சிறப்பான வரம் பெற்றதால், அவனை யாராலும் வெல்ல முடியாத நிலை இருந்து வந்தது.
அகந்தை கொண்ட கஜமுகன், கொடுங்கோலாட்சி புரிந்து வந்தான். இதனால் தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். வரம் கொடுத்த தன்னால் அவனை அழிக்க இயலாது என்பதால், "என் மூலமாக யானை முகத்துடன் ஒரு மகன் தோன்றுவான்; அவன் மூலம் உங்கள் குறை நீங்கும்' என்றார் பெருமான்.
அதன்படியே விநாயகப் பெருமான் தோன்றி, கஜமுகாசுரனை ஆயுதங்களால் கொல்லாமல், தனது வலக் கொம்பை ஒடித்து, அதனை ஏவி அவனைக் கொன்றார். ஆனால், வரத்தின் பலனால் கஜமுகன் பெருச்சாளியாக மாறி சண்டையிட்டான். கணபதி தன் ஆற்றலால் பெருச்சாளியின் ஆற்றலை அடக்கி, அவரையே தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார். அசுரனைக் கொன்றபோது, இவ்வூரில் செங்குருதி ஆறாக ஓடியது. அதனால் இத்தலம் "செங்காடு' எனப் பெயர் பெற்றது.
கஜமுகனைக் கொன்ற விநாயகர், ஒரு சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டார். அதனால் இவ்வூருக்கு "கணபதீச்சரம்' என்ற பெயர் வழங்கப்படுகிறது. இந்த ஐதீகம், மார்கழி தோறும் வளர்பிறையில் சஷ்டியன்று விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
உத்திராபதியார்
ஐயடிகள் காடவர்கோன் எனும் பல்லவ மன்னர், சிறுத் தொண்டரின் பெருமைகளை அறிந்து, இத்தலத்திலேயே தங்கியிருந்தார். சிறுத் தொண்டருக்கு அளித்த பைரவக் கோலக் காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டுமென இறைவனிடம் மனமுருகக் கேட்டுக் கொண்டார்.
அப்போது ஒரு அசரீரி தோன்றியது. "இன்னும் 21 நாட்களில் திருக்கோயில் திருப்பணி முடித்து உத்திராபதியாரின் திருவுருவத்தையும் அமைத்து, சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு நடத்தினால், யாம் அவ்வாறே காட்சி தருவோம்' என்று கூறினார் பரமேஸ்வரன். மன்னரும், சிலை செய்வோரும் பலமுறை முயன்றும், தோல்வியே மிஞ்சியது. கடைசி முயற்சியாக ஐம்பொன் உலோகம் காய்ச்சி அச்சில் ஊற்றத் தயாரானார்கள்.
அப்போது அங்கொரு சிவனடியார் வந்தார். "எனக்குத் தாகமாக உள்ளது; தண்ணீர் கொடுங்கள்' என்று கேட்டார். ஏற்கெனவே நொந்து போயிருந்த சிலை வடிப்போர், வெறுப்பில், "இங்கே உலைச் செம்புதான் உருகி தண்ணீராக இருக்கிறது; வேண்டுமானால் எடுத்துக் குடியுங்கள்' என்று கூறினர்.
அதன்படியே சிவனடியாரும் அந்த உருகிய உலோகத் தண்ணீரைக் குடிக்க, கண நேரத்தில் அவர் உத்திராபதியார் ஐம்பொன் சிலையாக உருமாறினார். இதைக் கண்ட மன்னர் மெய் சிலிர்த்தார்.
உத்திராபதியாரின் நெற்றியில் ஒரு புடைப்பைக் கண்டு அதைச் சரி செய்யுமாறு சிற்பிகளுக்கு ஆணையிட்டார். பொற்கொல்லர் அதைச் சரி செய்ய முயன்றபோது அச்சிலையிலிருந்து ரத்தம் பீறிட்டது. உடனே மன்னர், அதைச் செதுக்க வேண்டாமென்று ஆணையிட்டார்.
காயத்தின் மேல் குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், சந்தனம் ஆகியவற்றைக் கலந்து சாற்றினர். ரத்தம் வடிவது நின்றது. இதன்பின் மன்னர் வணங்கத் தொடங்கியதும், வடக்கு வீதியில் சண்பகப் பூ மணம் பலமாக வீசியது. அப்போது உத்திராபதியார் நேரிலும் மன்னருக்குக் காட்சி தந்தருளினார். இந்த ஐதீகம், சித்திரைத் திருவோண நாளில் "சண்பகப் பூ விழா'வாகக் கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தை சத்தியாசாடமுனிவர், திருமால் முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.
ஆலய அமைப்பு
சுமார் 93 அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே தெற்கு நோக்கிய சந்நிதியில் "வாய்த்த திருகு குழலி' என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அன்னை காட்சி தருகின்றாள். "திருகு குழல் உமை நங்கை பங்கன் தன்னைச் செங்காட்டான் குடியதனில் கண்டேன் நானே' என திருநாவுக்கரசர் இந்த அன்னையைப் போற்றிப் புகழ்கின்றார்.
உட்பிரகாரத்தில் சிறுத் தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன் ஆகியோர் சிலை வடிவங்களைக் காணலாம். ஆலயச் சுற்றில் பழைமையான காட்டாத்திமரம் அமைந்துள்ளது. அதனருகே உத்திராபதியார் சந்நிதி அமைந்துள்ளது. இது உலோகத்தினால் தோன்றிய சுயம்பு மூர்த்தமாகும். இவரது எழிற்கோலம் கலை ரசனை மிக்கது.
கிழக்கு நோக்கிய மூலவராகக் "கணபதீச்சரர்' காட்சி தருகின்றார். தெற்குப் பிரகாரத்தில் வாதாபி கணபதியின் தனிச் சந்நிதி அமைந்துள்ளது. கைகளைத் தொடையில் இருத்தி, கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் இடப்பக்க துதிக்கை கழியுடன் விநாயகர் காணப்படுகிறார்.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்ற இவ்வாலயம், வேளாக்குறிச்சி ஆதீனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அமைவிடம்
நாகை மாவட்டத்தில் திருச்செங்காட்டங்குடி அமைந்துள்ளது. நன்னிலத்திலிருந்து வடகிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்திற்கு திருவாரூர்-திருமருகல் வழித்தடத்தில் நேரடி பஸ் வசதி உள்ளது. திருப்புகலூர் வந்தும் எளிதில் திருங்செங்காட்டங்குடி வரலாம்.
இச்சிறப்புமிகு ஆலயத்திற்கு வரும் ஜனவரி 21ஆம் (21.1.2010) நாளன்று குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் திருப்பணியிலும் பங்கேற்று இறைவன் அருளைப் பெறலாம். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : அருள்மிகு உத்திராபதீஸ்வர சுவாமி திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, நாகப்பட்டினம் வட்டம் & மாவட்டம், பின்- 609 704. வங்கிக் கணக்கு எண்: எஸ்.பி. அக்கௌண்ட் நம்பர் 309802, சிட்டி யூனியன் வங்கி, திருமருகல் கிளை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.