

உமையம்மை கம்பை நதிக்கரையில் மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்து முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தருளிய திருத்தலம் காஞ்சிபுரம். கந்தபுராணம் பாடியருளிய கச்சியப்ப சிவாசார்யர் பூஜித்து அருள் பெற்ற குமரக் கோட்டமும், ஆதி சங்கரர் வழிபட்டு ஸ்ரீ காமகோடி பீடம் நிறுவிய காம கோட்டமும் காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பன. காமாட்சியம்மன் கோயிலை ஸ்ரீ காமகோட்டம், கௌரி திருக்கோட்டம் என்றெல்லாம் அழைப்பர். காஞ்சியில் உள்ள அனைத்துச் சிவாலயங்களுக்கும் அருட் சக்தி காமாட்சி அம்மை மட்டுமே!
காஞ்சி காமாட்சி ஐந்து வடிவங்களாக அங்கே காட்சி அளிக்கிறாள். மூல காமாட்சி, ஸ்ரீ சக்ர காமாட்சி, தபஸ் காமாட்சி, பிலாகாச காமாட்சி, ஹேம காமாட்சி என்னும் பங்காரு காமாட்சி ஆகியவையே அவை. ஸ்ரீ பங்காரு காமாட்சி விக்ரஹம் பொன்னால் ஆகியது என்றும், இதனை பிரம்ம தேவன் உருவாக்கியதாகவும் கூறுவர். இந்த பங்காரு காமாட்சி திவ்ய விக்ரஹத்திற்கும், ஏகாம்பரநாதருக்கும் ஆதியில் ஒருபங்குனி உத்திரத்தில் பிரம்ம தேவனே திருக் கல்யாணம் நடத்தினாராம்.
18-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கர்நாடகப் போர் காரணமாக அந்நியர் படையெடுப்பால், பாதுகாப்பு கருதி ஸ்ரீ பங்காரு காமாட்சியை தென்னகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது ஸ்ரீ காமகோடி பீடத்தின் நான்காவது ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், இந்த விக்ரஹத்துடன் புறப்பட்டார். ஸ்ரீகாமாட்சியம்மனை பூஜித்து வந்த ஸ்மார்த்த வடமாள் வகுப்பைச் சேர்ந்த வைதீகக் குடும்பத்தினரும் பங்காரு காமாட்சியுடன் வந்தனர்.
அக்காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசரும், உடையார்பாளையம் ஜமீன்தாரும் இந்து சமய உணர்வு மிக்கவராக இருந்தனர். காஞ்சியிலிருந்து எடுத்து வரப்பட்ட விக்ரஹம் செஞ்சி, உடையார்பாளையம், சிறுகாட்டூர், அணக்குடி, சிக்கல், நாகூர், திருவாரூர் என்ற பல ஊர்களுக்கும் சென்றது. 1771-ல் தஞ்சையில் பிரதாப சிம்மன் ஆதரவால் தஞ்சை மேல வீதியில் தனி ஆலயம் கட்டப்பெற்று ஸ்ரீபங்காரு காமாட்சியைப் பிரதிஷ்டை செய்தனர்.
அணைக்கரையிலிருந்து காட்டு மன்னார்குடி செல்லும் வழியில் ஆறு கிலோமீட்டரில் அமைந்துள்ள கிராமம் சிறு காட்டூர். ஸ்ரீகாமாட்சியம்மனுடன் வந்தவர்களில் ஆத்ரேயகோத்ரம், போதாயன சூத்திரம் பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு உடையார்பாளயம் ஜமீன்தார் இக்கிராமத்தை சர்வ மானியமாக அளித்தார். அங்கு யாக யக்ஞங்களைக் குறைவில்லாமல் நடத்தி வர உதவினார்.
அந்த வம்சத்தின் உறவின் முறையினரும், மற்றொரு குடும்பமுமான கௌதம கோத்திரத்தில் வந்த ஸ்ரீசியாமா சாஸ்திரிகள் (சங்கீத மும்மணிகளில் ஒருவர்) 1763ல் திருவாரூரில் தோன்றினார். சிறுகாட்டுர் வம்சத்தில் வந்த ராமசேஷு தீட்சிதர், காஞ்சி மஹா சுவாமிகளுக்கு விழுப்புரத்தில் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தவர். தருமபுரம் ஆதீன தற்போதைய 26-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமசார்ய சுவாமிகள் அவதரித்த பெருமையுடையது சிறுகாட்டூர் கிராமம்.
சிறுகாட்டூரில் பல ஆலயங்கள் சிறப்புற்று விளங்கி வந்துள்ளன. அவைகளில் மிகப் பழைமையானதும், பல நூறு குடும்பத்தினருக்குக் குலதெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் குறிப்பிடத்தக்கது. மழையை "மாரி' என்னும் தாயாக உருவகித்து வழிபட்டு வருவது நமது பண்பாடு. கொள்ளைநோய் போன்ற வெப்ப நோய்களைத் தடுத்து நிறுத்துபவள் மாரியம்மை. மழை வளத்திற்காகவும், நோய் நீக்கத்திற்காகவும் மாரியம்மன் கோயில்கள் கிராமந்தோறும் காணப்படும். மருத்துவக் குணம் மிகுந்த வேப்பிலை, மாரியம்மன் வழிபாட்டில் முக்கிய இடம் பெறக்கூடிய ஒன்று. அசுரர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட வெப்ப நோயை நீக்க சிவபெருமான் ஜடையிலிருந்து மாரியம்மனை தோற்றுவித்தார் என்றும், இந்த அம்மையே சீதளாதேவி என்றும், அவள் தேவர்களின் வெப்ப நோயை நீக்கி (சீதளம்-குளிர்ச்சி) அருள்புரிந்தாள் என்றும் வரலாறு உண்டு.
சிறுகாட்டூர் மகா மாரியம்மன் திருக்கோயில் திருப்பணி, 58 ஆண்டுகளுக்குப் பின் மேற்கொள்ளப்பட்டு மகாமண்டபம், வாகன மண்டபம், மடைப்பள்ளி அறை முதலியன கட்டப் பெற்றுள்ளன. புதிதாகப் பலிபீடம், வாகனம், ஸ்ரீபாலமுருகன் மற்றும் மாரியம்மன் உற்சவ மூர்த்தி ஆகியவை பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளன. சிறுகாட்டூரில் வாழ்ந்த ஆத்ரேய கோத்திர மரபில் வந்த குடும்பத்தினர் மற்றும் தருமபுரம் மஹாசன்னிதானம் அவர்களது பேருதவியாலும், ஆசியாலும் நாளது விக்ருதி வருஷம், ஆனி மாதம் 7-ந் தேதி, 21.6.2010 -திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.விரைவில் சிறுகாட்டூர் சிவாலயம், ஐயனார் கோயில் முதலான திருப்பணிகள் தொடங்கப் பெற்று மீண்டும் பழைய பொலிவுடனும் சிறப்புடனும் சிறுகாட்டூர் விளங்க அனைவரது ஒத்துழைப்பையும், நிதியுதவிகளையும் அளித்துதவக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு: ஜி. சுவாமிநாதன், சிறுகாட்டூர் 9840506324
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.