

நாளை 'சௌரமான' விதிப்படி மகா சிவராத் திரி. தமி ழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் நாளைதான் 'சிவராத்திரி' பெருவிழா நடைபெறுகின்றது. 'சிவன் என்னும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்' என்று உருகுவார் அப்பர் பெருமான். 'சிவன்' என்ற சொல்லுக்கு, 'மங்கலங்களை அளவின்றி வழங்குபவர்' என்பது பொருள். இந்தப் பெயர், மற்ற தேவதாந்தரங்களுக்கு 'சப்த கௌரவம்' கருதி இடப்படினும், கயிலை நாதனே 'சிவன்' என்னும் திருநாமத்துக்கு உரித்தான ஒரே கடவுள் என்பது ஆரிய, திராவிட வேதங்களின் ஆணித்தரமான கருத்து.
புராண வரலாறு
சைவ புராணங்களின் அடிப்படையில் மகா சிவராத்திரி பற்றி கூறப்படும் வரலாறு, அகிலம் அனைத்தும் அறிந்ததே! திருமாலுக்கும், நான்முகனுக்கும் இடையே, 'தங்களில் யார் பெரியவர்' என்ற போட்டி எழுந்தது. அப்போது அவர்கள் மத்தியில், 'ஆதியும் அந்தமும் இல்லா ஜோதி' ஒன்று தோன்றியது. 'இந்த ஜோதியின் அடியையும், முடியையும் யார் காண வல்லரோ அவரே பெரியவர்' என்ற அசரீரி எழுந்தது.
உடனே வராக (பன்றி) அவதாரம் எடுத்த திருமால், அந்த ஜோதியின் அடிப்பகுதியைத் தேடி விரைந்தார். அன்னப் பறவை வடிவெடுத்த நான்முகன், ஜோதியின் முடி நோக்கிப் பறந்தார். இருவரும், எவ்வளவு முயன்றும் தங்களது செயலில் வெற்றி காணாது மலைத்தனர். இதில் தாழம்பூவை பொய் சாட்சிக்கு அழைத்ததாக பிரம்மன் மீது ஒரு புகாரும் உண்டு. அயர்ந்த அரிக்கும், அயனுக்கும் சிவபெருமான் தரிசனமளித்தார். 'தங்கள் முன் ஜோதி வடிவில் தோன்றிய சிவமே பரம்பொருள்' என்றுணர்ந்து, மாலவனும் நான்முகனும் பரமனடி பணிந்துய்ந்தனர். அந்த இனிய நாளே சிவராத்திரி என்பர் பெரியோர். ஈசனின் இந்தத் திருவிளையாடல் நடந்த தலம், 'திருவண்ணாமலை' ஆகும்.
செல்வச் செழிப்பு
'சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை' என்பது திருமூலரின் வாக்கு. 'அழியாச் செல்வம் உடையவரும், அதை பக்தர்களுக்குத் தருபவரும் சிவபெருமானே. சங்க நிதி, பதும நிதி என்ற இரண்டு பெருஞ்செல்வங்களின் அதிபதியான குபேரன், சிவபெருமானின் தோழனாக நிற்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளான். அவனுக்கு அத்தகைய அந்தஸ்து கிடைத்ததே சிவபெருமானால்தான் என்பதை அவன் நன்கறிவான். அதனால்தான் பரமேஸ்வரன் குபேரனை தோழனாக வரித்தும், அவன் 'தொண்டனாய் வாழ்வதே பேரின்பம்' என்று கருதி, சிவத்துக்கு பணிவிடை ஆற்றுகின்றான்! அண்ணலின் ஆணைப்படி அடியார்களைச் செல்வந்தர்களாக ஆக்குகின்றான்!
அருத்தமாவது நீறு!
உபநிஷதம், திருநீற்றை 'ஐஸ்வர்யம்' என்கிறது. இதில் ஆழ்ந்த உள்ளர்த்தம் உண்டு. பூவுலகில் ஒருவன் பல கோடிகளுக்கு அதிபதியாகத் திகழ்ந்தாலும், மாண்டுவிட்டால் அவனது உடல், பிடி சாம்பலாகப் போய்விடும். திருநீறு பூசும்போது, 'என்றேனும் இந்த சரீரம் சாம்பலாகத்தானே ஆகப் போகிறது!' எனும் உணர்வு, அடியார்களுக்கு ஏற்படும். இதனால் 'நிலையாமைத் தத்துவம்' அவர்களுக்கு எளிதாக மனதில் பதியும். 'வாழ்வு நிலையற்றது' என்கின்ற உணர்வுடையோர், பாவச் செயல்கள் புரிய அஞ்சுவர்; பக்தி வழி நிற்பர்! இதனால் உண்மையான ஐஸ்வர்யமான முக்தியையும் அவர்கள் பெறுவார்கள். இப்படி மோட்சம் என்னும் அழியாச் செல்வத்துக்கு வித்திடுவதாலேயே திருநீறுக்கு 'ஐஸ்வர்யம்' என்ற பெயரைச் சூட்டியது வேதம்.
அதற்காகத் திருநீறு பூசுவோர் பூவுலகில் பொருட் செல்வம் இன்றி இருப்பர் என்று எவரும் கூறவில்லை. 'அருத்தம் அது ஆவது நீறு' என்று அழுத்தமாகக் கூறுகின்றார், பர சமயக் கோளரியான ஞான சம்பந்தர். இதன் பொருள், 'பூவுலகில் வாழத் தேவையான பொருளையும் அள்ளி வழங்கி, அது நிலையற்றது என்ற விவேகத்தையும் கொடுத்து, ஈசனடியில் சேர்க்கும் திறமை உள்ளது திருநீறு' என்று விரியும்.
'ஐஸ்வர்யம்' உள்ளவனே ஈஸ்வரன். பாமர மக்கள்கூட, 'ஈஸ்வரன் கோயில்' என்று சிவாலயத்தைதான் அழைப்பார்கள்.
வீரத் திருவுரு
அடுத்ததாக தன்னிகரற்ற பேராண்மை! அதற்குரியவரும் சிவபெருமானே! முப்புரங்களை அழித்தது, அந்தகாசுரனை சம்ஹரித்தது, மாரண வேள்வியில் தோன்றிய மதயானையின் தோலை உரித்தது, ஜலந்தராசுரனை வதைத்தது, சிவனுக்கு அவிர் பாகம் அளிக்காத 'தட்ச யக்ஞத்தில்' கலந்து கொண்ட அனைத்துத் தேவர்களையும் வீரபத்திரர் மூலம் தண்டித்தது, மற்ற வானவர்கள் திக்குத் தெரியாமல் சிதறி ஓட- ஆலகால விஷத்தை அஞ்சாதுண்டது, மன்மதனை எரித்தது என சிவத்தின் வீரத்திற்கோர் அளவே இல்லை எனலாம். தமிழ்நாட்டில் சிவபெருமானின் வீரத் திருவிளையாடல்கள் நிகழ்ந்த 'அட்ட வீரட்டானத் தலங்கள்' உள்ளன.
'புஷ்டி' என்றால் தூய ஆரோக்கியம். அது சிவபெருமானை வழிபடுவதால் ஏற்படுமென வேத மாதாவே கூறுகின்றாள். 'புஷ்டி வர்த்தனம்' என்கிறது ஸ்ரீருத்ரம்.
கருவறை புகாத கடவுள்
பெரும் புகழிலும் சிவத்தை வெல்வார் எவருமில்லை. 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்று பிற மதத் தைச் சேர்ந்த இளங் கோ வ டிகளே தனது சிலப்பதிகாரத்தில் சிவபெருமானை போற்றுகின்றார். 'கருவறை புகாத கடவுள்' என்ற பெருமையொன்றே பரமேஸ்வரனின் புகழை விளக்கப் போதுமானது. மற்றவற்றைப் பட்டியலிடின் எழுதி மாளாது.
'சப்த த்வீபங்கள்' எனப்படும் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு காலத்தில் சிவவழிபாடு இருந்ததாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். இதையொட்டியே, 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று துதிக்கின்றார் மாணிக்க வாசகர்.
ஆலமர் கடவுள்
பேரறிவின் உறைவிடமும் சங்கரரே. 'ஞானத்தில் இச்சையுள்ளோர், சிவபெருமானையே வழிபட வேண்டும்' என்று சாத்திரம் உரைக்கின்றது. சனகாதிகளுக்கு, வாய் திறந்து எதையும் பேசாமலேயே, ஆல மரத்தடியில் அமர்ந்து, சின் முத்திரை காட்டி திவ்விய ஞானத்தை வழங்கியவர், தட்சிணாமூர்த்தியாகிய பரமேஸ்வரன். 'அவர் நேரில் வரவேண்டுமென்பதில்லை; அவரது பெயரை சொன்னாலே ஞானம் கிட்டிவிடும்' என்கிறார் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் என்னும் அருளாளர். 'நமச்சிவாயவே ஞானமும், கல்வியும்' என்கிறது தேவாரம்.
வைராக்கிய சிகாமணி
'பற்றின்மை' எனப்படும் உயர்ந்த குணமும் பரமசிவத்திடம் காணப்படுவதுபோல் வேறு எங்கும் காணப்படுவதில்லை. 'தவம் செய்து கொண்டிருந்த உமா தேவியாரின் மேல் சிவனாரின் கடைக்கண் பட வேண்டும்' என்ற எண்ணத்துடன் மன்மதனை அனுப்பி வைத்தனர் மற்ற தேவர்கள். சிவபெருமானோ காமத்தை வென்றவர். அதனால் மன்மதனைப் பொசுக்கி, 'தான் வைராக்கிய சிகாமணி' என்பதைத் தேவர்களுக்குத் தெரிவித்தார். அதற்காக உமையவளையும் கை விடவில்லை! அவள் தவத்தை மெச்சிக் கரம் பற்றினார்! மன்மதனுக்கும் உயிர் பிச்சை வழங்கினார்.
கருணைக் கடல்
சம்பந்தருக்கு முத்துச் சிவிகை பந்தல் அளித்தது, பாலுக்காக அழுத 'உபமன்யு' என்ற முனி குமாரனுக்கு பாற்கடலையே வழங்கியது, மதுரை பாண்டிய வம்சத்துக்காக பல திருவிளையாடல்கள் நிகழ்த்தியது, ஆறே நாளில் கண்ணப்பருக்கு முக்தி அளித்தது, கள் விற்போனும் 'சிவ நாமம்' சொன்னதால் அவனுக்குக் கயிலைப் பதவி தந்தது, ஆறறிவில்லாத உயிரினங்களுக்குக்கூட அருள் புரிந்தது என ஆயிரமாயிரம் விதங்களில் தான் 'பேரருளாளன்' என்பதை சிவபெருமான் உணர்த்தியுள்ளார்.
இப்படி சிவபெருமானின் குண நலன்களை வேத, உபநிஷத, புராணங்களின் அடிப்படையிலும் திராவிட வேதமான திருமுறைகளின் ஆதாரத்திலும் எழுதிக் கொண்டே போகலாம். பரமசிவத்தின் இப்படிப்பட்ட அருட்திறங்களை மனதினால் சிந்தித்து மகிழ்ந்து, ஐந்தெழுத்தை ஓதி, திருநீறும் உருத்திராக்கமும் அணிந்து, நாலு கால அபிஷேகங்களைத் தரிசித்து, சைவத் திருமுறைகளைப் பாராயணம் செய்து, 'மகா சிவராத்திரி' விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். இப்படிச் செய்பவர்களுக்கு திருஞான சம்பந்தர் கூறியபடி, 'மண்ணில் நல்ல வண்ணம் வாழவும், இறுதியில் சிவகதி பெறவும்' திருவருள் உதவும்.
- புடார்ஜுனன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.