

உலகத்தைப் படைத்தசிவபெருமான், உலகில் உள்ள உயிர்களைக் காக்கும் பசுபதியாகவும் இருக்கின்றார். அம்மையாகவும் அப்பனாகவும் பிரிந்தும், சேர்ந்தும் தனது திருவிளையாடல்களை நடத்திக் காட்டுகின்றார். அப்படி உலகில் இறைவன் அம்மையாகவும், அப்பனாகவும் சேர்ந்தும், பிரிந்தும் அருளாட்சி நடத்தும் திருத்தலங்கள் ஏராளம்.
சில தலங்களில் சக்திக்கே முதலிடம். பராசக்தியின் அம்சமான மாரியம்மன், பிடாரி, பேச்சி, கருமாரி போன்ற தேவிகளை இவ்வகையில் தரிசித்து அருள் பெறலாம். இப்படி தேவி அருளாட்சி நடத்துகின்ற இடங்களில் ஒன்றுதான் வலங்கைமான் வரதராஜம் பேட்டை. இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கே எழுத்தருளியுள்ள மாரியம்மன், ""பாடை கட்டி மாரி'' என்று போற்றப்படுகின்றாள்.
"மாரி' என்ற சொல் மழையைக் குறிக்கும். கருணை மழை பொழிந்து மக்களைக் காப்பதாலேயே தேவியை "மாரியம்மன்' என்கிறோம். அதுவும் கோடைக் காலத்தில்பூமி வறண்டு, மரங்களில் இலைகள் உதிர்ந்து, வயல்களில் புல்பூண்டுகள் காய்ந்து, குடிப்பதற்கு நீரும் கிடைக்காமல் மக்களும் விலங்குகளும் வாடுவது வழக்கம். அப்போது அம்மை நோயும், வெப்பு நோயும் கொடுமை செய்கின்றபோது உயிர்களைக் காப்பதற்கு மழைபோல் இருப்பவள் மாரியம்மன். இவளுக்கு சீதளா தேவி என்றும் திருநாமம் உண்டு. "சீதளம்' என்ற சொல், குளிர்ச்சியைக் குறிக்கும். வெம்மையில் வாடுகின்ற உயிர்களைக் குளிர்வித்து காக்கின்ற தாயாக விளங்குவதால்தான் மாரியம்மன் வழிபாடு, பல்வேறு தரப்பினரிடமும் புகழோடு விளங்குகிறது.
வலங்கைமான் மாரியம்மனை தினசரி வணங்குவோர் ஏராளம். அம்மைநோய் கண்டவர்கள் இங்கே வந்து அம்பாளே கதியென்று ஜாதி மத பேதமின்றி கோயில் வளாகத்திலேயே படுத்துக் கிடக்கின்றனர். சந்நிதிக்கு வரமுடியாதவர்கள் இருக்கின்ற இடத்திலிருந்தே வேண்டிக் கொள்கிறார்கள். நோய் நீங்கிய பின்னர் அவளின் சந்நிதிக்கு வருகின்றனர்.
எப்படி வருகின்றனர்...? இது வேறு எங்கும் காணமுடியாத வேண்டுதல். ஆம்! உற்றார், உறவினர், நண்பர்கள் பின்னே வருவார்கள். கொள்ளிச் சட்டியை ஏந்திக் கொண்டு முன்னே ஒருவர் வருவார். இறுதி யாத்திரையில் வாசிக்கப்படும் தப்பும், தரையும் முழங்கும்! பச்சை மூங்கிலில், வாழைக் குருத்தும், தென்னை ஓலை பாடையில் வைக்கோல் தலையணையில், கால் கட்டு, கை கட்டு, வாய்கட்டு கட்டப்பட்டு, நெற்றியிலே ஒரு கால் ரூபாய் நாணயத்தையும் வைத்து, பெற்றவர்களும், பெற்ற குழந்தைகளும் மற்றவர்களும் அருகில் வந்து வாய்க்கரிசி போட்டுவிட, உயிருள்ள மனிதனே நிஜ பாடைக்காவடியிலே படுத்திருப்பார்!! இந்த ஊர்வலம் பாடை கட்டி மாரியம்மன் திருக்கோயிலை மூன்றுமுறை வலம் வருகிறது. மூன்று சுற்று முடிந்த பின்னர் அம்பாள் கோயில் வாசலிலே பாடைக் காவடி இறக்கப்படுகிறது. பாடையிலிருக்கும் மனிதர்கள் அப்போதுதான் விழித்தெழுவதைப் போல நினைவுக்குத் திரும்புகின்றனர். பாடைக் காவடியில் இருக்கும்வரை அவர்களுக்கு இந்த ஊர்வலத்தின் உணர்வுகளே இருப்பதில்லை என்று கூறுகின்றார்கள். இது ஓர் பேரதிசயம் அல்லவா? இது ஒருபுறமிருக்க இந்த அம்மன் இங்கு எப்படிக் கோயில் கொண்டாள் என்ற வரலாற்றை நோக்குவோம்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வலங்கைமானில் இறை பக்தியில் சிறந்த காதக்கவுண்டர், கோவிந்தம்மாள் என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். காதக்கவுண்டர் விவசாயம் செய்து வந்தார். இறைவனை மறவாது வணங்கும் சிறந்த நெறியாளராய்த் திகழ்ந்தார்.
கணவனுக்கு ஏற்ற மனைவியாக விளங்கிய கோவிந்தம்மாள், கணவரோடு இறைவனை வழிபடுவாள். தின்பண்டங்கள் செய்து அவற்றை பக்கத்தில் உள்ள புங்கஞ்சேரி கிராமத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவாள். அப்படி ஒரு நாள் விற்பனை செய்தபோது வழக்கத்திற்கு மாறாக ஏராளமான நெல்லும், காசுகளும் கிடைத்தன. அளவற்ற மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி கூறினாள் கோவிந்தம்மாள்.
வியாபாரத்திற்காகச் சுற்றிய களைப்பு தீர, அந்தக் கிராமத்தில் உள்ள ஐயனார் கோயிலை ஒட்டிய குளத்தில் குளிக்கச் சென்றாள். குளித்து முடித்துவிட்டு கரைக்கு வந்தபோது ஐயனார் கோயிலிலிருந்து குழந்தை ஒன்று அழும் குரல் கேட்டு அங்கு ஓடினாள். அனாதையாக அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்க விரும்பினாள். ஆனால் ஊர் மக்களோ, "குழந்தையை நாட்டாண்மைக்காரர் வளர்க்க வேண்டும்' என்று கூறிவிட்டனர்.
அடுத்த சில நாட்களில் அந்த ஊரிலும், சுற்றுப்புற ஊர்களிலும் அம்மை நோயும், வேறு தொற்று நோய்களும் திடீரெனப் பரவின. ஆடு, மாடுகள்கூட நோய் கண்டு இறந்தன. குளங்களில் நீர் வற்றியது. எங்கும் வறட்சி வந்தது. இதுகண்டு மக்கள் எல்லோரும், "இது ஏதோ தெய்வக் குற்றத்தால்தான் வந்திருக்க வேண்டும்' என்று கருதினர். அப்போது அந்த ஊர் மணியக்காரரின் கனவிலே அம்பாள் தோன்றினாள். ""அடைக்கலம் காத்த ஐயனார் கோயிலில் கிடைக்கப் பெற்ற பெண் குழந்தையை அதைக் கண்டெடுத்த கோவிந்தம்மாளிடமே ஒப்படைத்தால் நோய்கள் விலகும்; பஞ்சம் தீரும்; பயிர்கள் தழைக்கும்; மழை பொழியும்'' என்றார்.
அவ்வாறே ஊர் மக்கள் காதக் கவுண்டர்-கோவிந்தம்மாள் வீட்டிற்குச் சென்று குழந்தையைக் கொடுத்தனர்.
அடுத்த நாள் முதல் ஊரெங்கும் அம்மை நோய் குறைந்தது. மழை பெய்தது. குளம், குட்டைகள் நிறைந்தன. இவையெல்லாம் அந்தத் தெய்வக் குழந்தையின் செயல்தான் என்று மக்கள் வியந்தனர்.
பின்னர் பலவித அற்புதங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்தியது அந்த தெய்வக் குழந்தை. ஆயின் அதற்கு ஏழரை வயதானபோது திடீரென மறைந்தது! காதக் கவுண்டரும், கோவிந்தம்மாளும், கிராமத்தாரும் அம்பாளே குழந்தை வடிவில் வந்து அவர்கள் மத்தியிலே வாழ்ந்து மறைந்ததாக நினைத்தனர். கவுண்டரின் தோட்டத்திலேயே அந்தக் குழந்தையை அடக்கம் செய்து சமாதி எழுப்பி வழிபட்டனர். அதுவே இன்றைய பாடை கட்டி மாரியம்மன் திருக்கோயில் ஆகியது.
ஒரு ஜமீன்தாரை சர்ப்பக் காவடி எடுக்க வைத்தது, வாய் பேசாத ஊமையைப் பேச வைத்தது, திருவிழாவை நிறுத்திய ஒரு காவல்துறை ஆய்வாளரின் கண் பார்வையை மறைத்து, பின்னர் அவரே முன்னின்று திருவிழாவை நடத்தி மீண்டும் பார்வை பெற்று, அந்தத் திருவிழாவை இன்றளவும் காவலர்கள் நடத்துவது, பாடைக் காவடியைப் பழித்த ஒருவருக்குஅருள் புரிந்து அவரையே பாடைக் காவடி எடுத்துவரச் செய்தது, அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு டாக்டர் பெண்மணியின் கனவில் தரிசனமளித்து கோயிலுக்கு அழைத்து வந்தது எனப் பலப்பல அதிசயங்களையும், அற்புதங்களையும் இந்தப் பாடைகட்டி மாரியம்மன் இப்போதும் நடத்தி வருகின்றாள்.
வருடந்தோறும் பங்குனி ஞாயிற்றுக் கிழமைகளில் மிகச் சிறப்பான பெருந்திருவிழா நடைபெற்று வருகின்றது. ஆண்டில் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வந்து பாடைக் காவடி எடுத்தும், மாங்கல்யம் சாத்தியும், சேவல் சுற்றிவிட்டும், ஆடு, மாடுகளை காணிக்கை கொடுத்தும் தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். என்றாலும் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழாவில் 3-வது ஞாயிற்றுக்கிழமை, பாடைக் காவடித் திருவிழா நடைபெறுகின்றது. நூற்றுக் கணக்கான காவடிகள் குட முருட்டி ஆற்றிலிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயிலுக்கு வரிசையாகச் சென்று முடிக்கவே இரவு நெடுநேரம் ஆகிவிடும். தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் இலங்கை, மலேஷியா, கனடா போன்ற நாடுகளிலிருந்தும் அப்போது பக்தர்கள் பெருந்திரளாக வருகின்றனர். வரும் 28.3.2010 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக பாடைக் காவடி திருவிழா நடைபெறுகின்றது.
பொதுவாக காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் கோயில் திறந்தே இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்து இருக்கும். இத்திருக்கோயில் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில், நீடாமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உண்டு. தங்கும் வசதிகள் அருகில் உள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ளன. ஆலய சம்பந்தமாக மேலும் தகவல்கள் அறிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி: 9488521115, 04374-264575.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.