

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மடம் கிராமம்! இவ்வூரின் நடுநாயகமாய் அமைந்துள்ள ஸ்ரீதடாகபுரீஸ்வரர் ஆலயம், முதலாம் குலோத்துங்க சோழனால் எழுப்பப்பட்டது! குளத்தில் இருந்து கிடைக்கப் பெற்றவர் இவ்வாலயத்து மூலவர்! பிரம்மாண்டமான இச்சிவாலயம், பல காலம் கவனிப்பார் அற்று சிதிலமடைந்து, முட்புதராய் மண்டி, மண் சரிந்து கிடந்தது.
அந்த நிலையில், நமது "வெள்ளிமணி'யில் ஆலயத்தின் அவல நிலை பற்றி ஓர் உருக்கமான கட்டுரையும் வெளி வந்தது. தொடர்ந்து சிவனனருள் கூட்டி வைக்க, ஊரார் ஒன்று கூடினர்! அரசும் கண் திறந்து பார்த்தது! உடன் தொல்லியல் துறையும் இணைந்தது! தற்போது திருப்பணி துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவையான நிதி அதிகமென்பதால் சிவநேயச் செல்வர்கள், தங்களால் இயன்ற அளவு உதவிகளை இச்சிறப்பான தருணத்தில் செய்து இச்சிவாலயத் திருப்பணிக்கு மேன்மை சேர்க்க வேண்டுமென விரும்புகின்றோம்!
ஆலயத் திருப்பணிக்கு உதவ விரும்புவோர், "வீ. சுந்தரமூர்த்தி, செயலாளர் -ஸ்ரீ தடாகபுரீஸ்வரர் திருப்பணிக் குழு, மடம் (அஞ்சல்), வழி- மழையூர், பின்கோடு- 604502, திருவண்ணாமலை மாவட்டம்' என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். இத்திருப்பணிக்கென இந்தியன் வங்கி, மழையூர் கிளையில் வங்கிக் கணக்கு எண்: 847044570 துவங்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சிராப்பள்ளி நகரிலிருந்து வயலூர் செல்லும் சாலையில், சுமார் நான்கு கி.மீ. தொலைவில், குடமுருட்டி ஆற்றைத் தாண்டியவுடன் வலது பக்கம் பார்த்தால் சிறிய குன்றின் மீது ஒரு கோயில் தென்படும். இக்கோயில், "உய்யக்கொண்டான் திருமலை' எனப் போற்றி அழைக்கப்படுகிறது. உய்யக்கொண்டான் வாய்க்கால் (சர்ப்ப நதி), காவிரி ஆறு நீர்வளத்தால் பசுமையான வயல்கள் சூழ இயற்கை அழகில் இத்தலம் அமைந்துள்ளது.
கற்குடி :
அருளாளர்களான திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற திருத்தலம் இது! தேவாரப் பாடல்களில் "கற்குடி' என இக்கோயில் குறிக்கப்படுகிறது. சிறிய குன்றின் மீது அமைந்துள்ளதால் இக்கோயில் "கற்குடி' என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். "காமருவார் பொழில் சூழுங் கற்குடி மாமலை' என ஞானசம்பந்தர் போற்றுகின்றார். திருநாவுக்கரசர் பெருமான் தமது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும், "கற்குடியில் விழுமியானை, கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே'' எனச் சிறப்பித்து போற்றுகின்றார். சுந்தரர் தமது பாடல்கள் ஒவ்வொன்றிலும் "அடியேனையும் அஞ்சலென்னே' என்று வேண்டுகின்றார்.
இறைவன்-இறைவி :
இங்கு கோயில் கொண்டு விளங்கும் இறைவன் உஜ்ஜீவநாதசுவாமி, உச்சிநாதர், கற்பகநாதர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இறைவி அஞ்சனாட்சி (மைவிழியம்மை) எனவும், பாலாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றார். வில்வமரம், தல மரமாக விளங்குகிறது. பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாலி, எண்கோணத் தீர்த்தம், நாற்கோணத் தீர்த்தம் ஆகியவை இக்கோயிலின் தீர்த்தங்களாகச் சிறப்புப் பெறுகின்றன.
புராண வரலாறு :
மிருகண்டு முனிவரின் மைந்தரான மார்க்கண்டேயர், இங்கு கற்பகநாதரை வழிபட்டு, சிரஞ்சீவியாக வாழ வரம் பெற்றதாகக் கூறுகின்றனர். மார்க்கண்டேயருக்கு அருளுவதற்காக இறைவனே வாயிலில் வந்து அருளியதால் இக்கோயிலில் தெற்குப் பகுதியில் கொடிமரமும், அதனருகே இறைவனுடைய பாதங்களும் உள்ளன. எல்லையில்லா பக்திக்கும், இறைவனின் கருணைக்கும் அடையாளமாக இக்கோயில் விளங்குகிறது. இதனை ""வருங்காலன் உயிரை மடியத்திரு மெல்விரலாற் பெரும் பாலன்றனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே'' என சுந்தரர் போற்றுகின்றார்.
சுயம்பு மூர்த்தி :
இத்திருக்கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாய் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். கருவறையின் தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்கை, பிரம்மா, அர்த்தநாரீசுவரர் ஆகிய வடிவங்களைக் கண்டு வழிபடலாம். மேலும் திருச்சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான், கஜலட்சுமி, ஜேஷ்டா தேவி, பைரவர், சூரியன், சனி பகவான், நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. இங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழால் போற்றியுள்ளார்.
இக்கோயிலில் பெüர்ணமி வழிபாடு சிறப்புப் பெற்றது. ஒவ்வொரு பெüர்ணமியிலும் இறைவனுக்கு ஸ்ரீருத்ரம் பாராயணத்துடன் தேன்-பால்-சங்காபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. தை மாதத்தில் உஜ்ஜீவநாதசுவாமியும், அஞ்சனாட்சி அம்பாளும் அருகில் உள்ள சோமரசம் பேட்டைக்கு எழுந்தருளுகின்றனர். அந்நாளில் வயலூர் முருகப் பெருமானும் எழுந்தருளி உமா-மகேசுவரரை சந்திக்கும் வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் உஜ்ஜீவ நாதருக்கும்-அஞ்சனாட்சி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
வரலாற்றுச் சிறப்பு :
வழிபாட்டுச் சிறப்பு உடையது போலவே வரலாற்றுச் சிறப்பு உடையதாகவும் இக்கோயில் விளங்குகிறது. இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் "நந்திவர்ம மங்கலம்' என்று பல்லவ மன்னன் பெயரால் இத்தலம் குறிப்பிடப்படுகிறது. சோழ மன்னர்கள் காலத்தில் "ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம்' என இவ்வூர் அழைக்கப்பட்டது. இங்கு கோயில் கொண்டு விளங்கும் இறைவன் உய்யக் கொண்ட நாயனார், கற்குடி பரமேசுவரர், கற்குடி விழுமியர் என்றெல்லாம் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். இக்கோயில் உறையூர் கூற்றம் என்ற நாட்டுப் பிரிவில் இருந்ததையும் கல்வெட்டுகளால் அறிகிறோம்.
இக்கோயிலில் பராந்தக சோழன், சுந்தர சோழன், செம்பியன் மாதேவியார், ராஜராஜன், ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன், குலோத்துங்க சோழன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் மற்றும் விஜயநகர மன்னர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விஜயநகர மன்னன் மல்லிகார்ஜுன மகாராயர் காலத்தில்தான் இவ்வூர் "உய்யக்கொண்டான் திருமலை' என அழைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.
வீரத்தாவளம் போசள மன்னர்களின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக இங்கு "வீரத்தாளம்' என்னும் படைத்தள நகரம் பாண்டியரால் அமைக்கப்பட்டது என்பதை முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டு (கி.பி. 1307) கூறுகிறது.
கி.பி. 18ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின் போது ஃபிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும், மைசூர்காரர்களும் தங்கியிருந்த யுத்த அரணாக இவ்விடம் விளங்கியது என்பதையும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
கற்குடிமாமலை மாலை :
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இக்கோயிலைப் போற்றி "கற்குடி மாமலை மாலை' என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் நூறு தோத்திரப் பாடல்களை உடையது.
மேலும் "தமிழ்த் தாத்தா' எனச் சிறப்பாகப் போற்றப்பட்ட உ.வே. சாமிநாத ஐயர் அவர்களும் தனது தனிப்பாடலில் இத்தலத்தைப் போற்றியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கோயிலுக்கு சென்ற வாரம் மிகச் சிறப்பாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கருணையே வடிவமாக எழுந்தருளியுள்ள கற்பகநாதர்-அஞ்சனாட்சி அம்மன் ஆகியோரை வழிபட்டு அனைத்து நலன்களையும் அடைவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.