இம்மையும் மறுமையும்!

"இவ்வுலக வாழ்வே மனிதனுக்கு உண்டு; மறுமை என்பது கற்பனையைத் தவிர வேறில்லை' என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். மறுமையில் (மரணத்திற்குப் பின் உள்ள மனித நிலை) இறையருளைப் பெற்று சுவன வாழ்வில் சுகமாக வ
Published on
Updated on
1 min read

"இவ்வுலக வாழ்வே மனிதனுக்கு உண்டு; மறுமை என்பது கற்பனையைத் தவிர வேறில்லை' என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர்.

மறுமையில் (மரணத்திற்குப் பின் உள்ள மனித நிலை) இறையருளைப் பெற்று சுவன வாழ்வில் சுகமாக வாழ்வதற்கே, இம்மையில் மனிதனைப் படைத்துள்ளான் இறைவன். ஆனால் ஒரு நிபந்தனை. இவ்வுலகில் மனிதன் எம்முறையில் வாழ்கின்றான்? தன்னுடைய நற்பண்புகளாலும், நல்லொழுக்கத்தாலும் மனித நேயத்துடனும், பிறருக்கு எவ்விதத் தீங்கு தராமலும் வாழ்கின்றானா? - இவற்றை பொறுத்தே அவனுடைய மறுமை வாழ்வு சிறப்பாக அமையும்.

இவ்வுலகம் ஒரு நாள் முற்றுமாக அழியக் கூடியதே. ஒவ்வொருவரும் மரணத்தைத் தழுவியே ஆகவேண்டும்.

""எல்லாம் வல்ல இறைவா! எங்களுக்கு இம்மையையும் அழகாக்கி வை; மறுமையையும் அழகாக்கி வை; நரக நெருப்பை விட்டும் நீக்கி வைப்பாயாக!'' என்று இறைவனை இறைஞ்சக் கூடியவர்களாக இருக்கின்றோம். இறை நம்பிக்கையும், இறையச்சமும், நற்செயல்களுமே நம்மை மறுமையில் மகிழ்விக்கும்.

""நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கின்றீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச் செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; மேலும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள்'' (அல்குர்ஆன் 2:28)

இம்மையில் இறைவணக்கம் பேணி, முறையாகத்  தன் செல்வத்தில் இரண்டரை விழுக்காட்டை ஏழைகளுக்கு ஈந்து, நோன்பு நோற்று, மனித நேயத்துடன் கூடிய பிற அன்றாடச் செயல்பாடுகளில் எவர் முன் மாதிரியாகத் திகழ்கின்றார்களோ அவர்களே வெற்றியாளர்கள்; அவர்கள் இறையருளுடன் கூடிய மறுமை வாழ்வை நிச்சயமாக அடைவர்.

இம்மை ஒரு விளைநிலம்; மறுமை, இதில் விளைச்சலைப் பொறுத்து வள வாழ்வு தரக்கூடியது. இம்மையைவிட மறுமையே சிறந்தது என்பது இஸ்லாமியக் கோட்பாடு.

இம்மை வாழ்வு சில காலம்; மறுமை வாழ்வோ நிரந்தரமானது.

"மறுமை நாள்' எனும் "கியாமத்' பற்றி திருக்குர்ஆனில் ஓர் அத்தியாயமே உள்ளது. (திருக்குர்ஆன் 75வது அதிகாரம்)

""அந்நாளில் பார்வையும் மழுங்கி, சந்திரனின் ஒளியும் மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். அந்நாளில் தப்பித்துக்கொள்ள எங்கு ஓடுவது என்று மனிதன் வினவுவான். இல்லை, இல்லை; தப்பித்துக் கொள்ள இடமே இல்லை! அந்நாளில் உம் இறைவனிடம்தான் தங்குமிடமுண்டு'' (திருக்குர்ஆன் 75:7-12)

""அல்லாஹ் ஒருவனே தீர்ப்பு நாளின் அதிபதி'' (1:3). எனவே, "மனிதர் ஒவ்வொருவரும் இம்மையைவிட மறுமைக்காகவே படைக்கப்பட்டுள்ளனர். மறுமை வாழ்வே நனி சிறந்தது' என்பதை நம்பி, இம்மையில் பணிவுடனும், இறை நம்பிக்கையுடனும், இறையச்சத்துடனும் வாழக் கற்றுக் கொள்வோமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com