விசாக விஜயனுக்கு திருக்கல்யாணம்

வைகாசி விசாகம், நேற்று ஆறுமுகக் கடவுள் உறையும் அத்தனைத் திருத்தலங்களிலும் அற்புதமாகக் கொண்டாடப்பட்ட ஒரு உன்னத விழாவாகும். "ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய' என்று அருணகிரிநாதர் போற்றியபட
விசாக விஜயனுக்கு திருக்கல்யாணம்
Updated on
2 min read

வைகாசி விசாகம், நேற்று ஆறுமுகக் கடவுள் உறையும் அத்தனைத் திருத்தலங்களிலும் அற்புதமாகக் கொண்டாடப்பட்ட ஒரு உன்னத விழாவாகும். "ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய' என்று அருணகிரிநாதர் போற்றியபடி, வைகாசி விசாகத்தன்று கந்தக் கடவுள் தோன்றினார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. முருகப் பெருமான் "உலகம் உய்வதற்காக' தோன்றியவர் எனினும், தமிழர்களின் சொந்தக் கடவுள் அவர்.

தமிழகத்தில் ஏழை எளியவர் முதல் கோடீஸ்வரர்கள் வரை குமரவேளின் திருவடிகளைப் பணிந்துய்வதைப் பாக்கியமாகக் கருதுகின்றனர். அந்த விசாக விஜயனாகிய சரவணன், திருமணம் புரிந்து கொண்டு ஒரு திருத்தலத்தில் அனைவர்க்கும் இன்று தரிசனம் தருகின்றான் என்பது அரிய ஆன்மீக விஷயமல்லவா? அது பற்றி இங்கு காண்போம்.

கோடை நகர்

ஆறுபடை வீடுடைய அழகிய குமரன், கோடை நகரிலும் கம்பீரமாகக் கொலுவிருக்கின்றான். "எங்கே உள்ளது இந்த நகர்?' என்கின்றீர்களா? நமது "வல்லக்கோட்டை' திருத்தலத்தின் தொன்மையான திருப்பெயர்தான் கோடை நகர். இத்தலம், காலத்தால் மிகத் தொன்மையானது; அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்களைப் பெற்ற பெருமையுடையது. தனது பாக்களில், வல்லக்கோட்டையைக் "கோடை நகர்' என்றுதான் குளிர் தமிழில் குறிப்பிடுகின்றார் அருணகிரியார்.

மாமனார் சீதனம்

இந்திரனின் மகளாக வளர்ந்த தவப்புதல்வி தேவயானி. இவளை "தெய்வானை' என்று என்றுமுள தென்தமிழ் உரைக்கும். அமரர்களை வதைத்துக் கொண்டிருந்த சூரபதுமன் உள்ளிட்ட அவுணர்களை சக்தி வேலால் வீழ்த்தி, வெற்றித் திருமகனாய் விளங்கினார் சரவணபவன்.

இதனால் மகிழ்ந்த இந்திரன், தனது மகள் தெய்வானையை வேலனுக்கு மணம் முடிக்க விரும்பினான். சிவபெருமானும், பார்வதி தேவியும் இதற்கு ஒப்புதல் தந்தனர். முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில், திருப்பரங்குன்றத்தில் திருமண வைபவம் நடந்தது.

பின்னர் வள்ளி தேவியையும் திருமணம் செய்து கொண்டார் வரதரான முருகப்பெருமான். அதன் பின்னர் ஏராளமான திருத்தலங்களில் வள்ளி}தேவசேனா சமேத சுப்பிரமணியராகவே அவர் காட்சி தருகின்றார்.

அந்தத் தலங்களையெல்லாம் ஒரு சந்தர்பத்தில் தரிசித்தபடி வந்த தேவேந்திரன், கோடை நகருக்கும் வந்தான். இச்சா சக்தி, கிரியா சக்தி (வள்ளி-தேவயானை) சமேத ஞான சக்தியாக முருகப் பெருமான் இங்கு காட்சி தருவது கண்டு மனம் மகிழ்ந்தான். கோடை நகரில் ஒரு குளிர் தீர்த்தத்தை, தானே உருவாக்க எண்ணினான். உடனே தனது வஜ்ராயுதத்தை பூமியில் ஓச்சி, ஒரு அழகிய நீர்நிலையை உருவாக்கினான். அதுவே தற்போது "பொற்றாமரைக் குளம்' என்றழைக்கப்படுகிறது.

தன் மாப்பிள்ளைக்கு ஏற்கெனவே பல சீதனங்கள் தந்து பெருமையுற்ற இந்திரன், கோடை நகரில் ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கித் தந்து, முருகவேளை மகிழ்வித்தான்; பக்தர்களையும்தாம்!

பகீரதன் வழிபாடு

சகர மன்னரின் பிள்ளைகள் கபில முனிவரிட்ட சாபத்தால் சாம்பலாகிப் போக, அவர்களுக்கு நற்கதி கிடைக்க வானத்திலிருந்த கங்கையை அரும்பாடு பட்டு பூமிக்குக் கொணர்ந்தவர் பகீரத மன்னர். இதனால் கங்கைக்கு "பாகீரதி' என்ற பெயரும் ஏற்பட்டது.

கங்கையில் மூழ்குபவர்களின் கர்மம் தொலையும். இந்த நல்வாய்ப்பை உலகோருக்கு நல்கிய பகீரதன், பாரதத்தில் உள்ள மற்ற தீர்த்தங்களிலும் நீராட விரும்பினார்; யாத்திரையாகப் புறப்பட்டுப் பல்வேறு திருத்தலங்களுக்கு வந்தார்.

அப்போது கோடை நகருக்கும் வந்து, இந்திரனால் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தில் நீராடி, வள்ளி-தெய்வானை மணாளனை வழிபட்டு மகிழ்ந்தார். கங்கையைக் கொணர்ந்தவர்க்கு கந்தவேளின் மீது அத்துணை பக்தி! முருகவேளும் தவச்சீலரான பகீரதனுக்கு தரிசனமளித்து உவந்தார்.

அருணகிரியாரிடம் காட்டிய அன்பு

குமரன் குடி கொண்டுள்ள கோயில்களுக்கெல்லாம் சென்று "திருப்புகழ்' பாடி மகிழ்வதைத் திருத்தொண்டாகச் செய்தவர் அருணகிரி. இவர் எந்தத் தெய்வத்திடமும் வெறுப்பில்லாத அத்வைத {ஞானி! ஆயின் முருகப் பெருமானிடம் மட்டுமே முதிர்ந்த காதல் உடையவர்.

ஒரு சந்தர்பத்தில் திருப்போரூர் வந்த அருணகிரியார், அங்கேயே தங்கி கந்தக் கடவுளுக்கு மலர்களாலும், மணம் மிகு பாக்களாலும் ஆராதனை நடத்தி வந்தார். சில காலத்துக்குப் பிறகு "திருத்தணி' சென்று வேலவரைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் உந்த, தணிகை நோக்கிப் பயணிக்க முடிவு செய்தார்.

அன்றிரவு குமரன், அருணகிரிநாதரின் கனவில் தோன்றி, "கோடை நகருக்கு வருக' என்று அழைப்புவிட்டான். காலையில் எழுந்த அருணகிரிநாதர், தன்னைச் சொந்தம் கொண்டாடும் கந்தன் கருணையை எண்ணியெண்ணிக் கண்ணீர் மல்கினார். உடனே வழி விசாரித்துக்கொண்டுகோடை நகர் வந்து சேர்ந்தார்.

வள்ளியும்-தெய்வானையும் இரு புறத்திலும் விளங்க, சுமார் ஏழடி உயரத்துடன் காட்சி தரும் முருகப் பெருமானைக் கண்டு உள்ளம் உருகினார்; திருப்புகழ் பாடிப் பரவினார். "போகம் அதிலே உழன்று பாழ் நரகம் எய்தாமல் உன்றன் பூவடிகள் சேர அன்பு தருவாயே'என்று பிரார்த்தனை செய்தார். எட்டு திருப்புகழ் பாடல்களை, எண்டோள் ஈசன் மகனாகிய முருகப் பெருமான் மீது பாடி, இத்தலத்தில் அர்ப்பணித்தார்.

இன்று திருக்கல்யாணம்!

இன்று "வல்லக்கோட்டை' எனப்படும் கோடை நகர், (திருப்பெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்-602105), பெரும்புகழ் வாய்ந்த தலமாக விளங்குகிறது. கடந்த 16ம் தேதியன்று இங்கு வைகாசி விசாகப் பெருவிழா தொடங்கியது. நேற்று வைகாசி விசாகத்தையொட்டி புஷ்பப் பல்லக்கில் "சுப்பிரமணிய சுவாமி' சேவை சாதித்தார்.

இன்று (28.05.2010) "திருக்கல்யாண உற்சவம்' மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அது நிறைவேறியதும் "அதிகார மயில் சேவை' நடைபெறும். அன்பர்கள் அனைவரும் வைகாசி விஜயனின் விவாகத் திருக்காட்சியையும், அதிகார மயில் புறப்பாட்டையும் கண்டு ஆனந்தத்தையும், அருளையும் பெற அழைக்கின்றோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com