நற்றமிழ் பாசுரங்கள் நல்கிய நம்மாழ்வார்

திருமகளின் தலைவனாயும், கருணைக் கடலானவனுமான ஸ்ரீமன் நாராயணன் உலகினோர் உய்யும் பொருட்டு ஆழ்வார்களையும், ஆசார்ய புருஷர்களையும் திரு அவதாரம் செய்விக்கிறான். இத்தகைய பெரியோர்கள்தான் வைணவ சமயத்தின் அஸ்திவார
நற்றமிழ் பாசுரங்கள் நல்கிய நம்மாழ்வார்
Updated on
2 min read

திருமகளின் தலைவனாயும், கருணைக் கடலானவனுமான ஸ்ரீமன் நாராயணன் உலகினோர் உய்யும் பொருட்டு ஆழ்வார்களையும், ஆசார்ய புருஷர்களையும் திரு அவதாரம் செய்விக்கிறான். இத்தகைய பெரியோர்கள்தான் வைணவ சமயத்தின் அஸ்திவாரங்கள், ஆணிவேர்கள். எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஊறி ஆழ்ந்தவர்கள் என்பதால் இவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகின்றனர்.

இத்தகைய பெருமைமிக்க ஆழ்வார்கள் தமிழ் நாட்டின் புண்ணிய நதி தீரங்களில் அவதரித்திருக்கிறார்கள். அவ்வகையில் வற்றாத வளம் கொழிக்கும் பாண்டிய நாட்டில் தாமிரபரணி நதி தீரத்தின்பால் உள்ள திருக்குருகூர் தலத்தில் அவதரித்தவர்தான் சுவாமி நம்மாழ்வார்.

இந்த அவதாரத் தலம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகர்தான். (கி.பி.9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்). ஒரு பிரமாதி ஆண்டில் வைகாசித் திங்கள் பன்னிரண்டாம் நாள் வளர்பிறையில், பௌர்ணமி திதியில், வெள்ளிக்கிழமையன்று விசாக நட்சத்திரத்தில் சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்சேனரின் அம்சமாக அவதரித்தவர்.

நால்வேத சாரத்தை நற்றமிழ்ப் பாசுரங்களாக நல்கியருளிய நம்மாழ்வார், ஆழ்வார்களில் முதன்மையானவர். பிறந்தது முதல் இவர் பால் அருந்தவில்லை. அழவில்லை. வேறு உபாதைகளும் இல்லை. கண் திறந்து பார்க்கவும் இல்லை. இருப்பினும் உடல் மெலிந்து வாடவும் இல்லை.

உலக இயல்புக்கு மாறுபட்டும் இருந்தார். ஆக, இவருக்கு மாறன் எனப் பெயரிட்டு குருகூர் ஆலயத்துப் புளியமரத்தில் தொட்டில் கட்டிவிட்டனர் பெற்றோர்கள். திருமாலின் ஆணைப்படி ஆதிசேஷனே மிகப் பெரிய பொந்துள்ள புளியமரமாக தோன்றினான் என்பர். இந்த புளிய மரத்தின் பொந்தில் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் மூழ்கி இருந்தார். நம்மாழ்வார் என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட மாறனார் ஆழ்ந்த மோனத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு திருமால் கருடசேவை காட்சிதந்து மறைந்தருளினார்.

அத்தரிசனத்தின் பயனாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை இயற்றியருளினார். திருவிருத்தம் என்பது ரிக் வேதத்தின் சாரம் என்றும் திருவாசிரியம் என்பது யஜூர்வேதத்தின் சாரம் என்றும், பெரிய திருவந்தாதி அதர்வண வேதத்தின் சாரம் என்றும், திருவாய்மொழி சாம வேத சாரம் என்றும் பெரியோர்கள் கூறுவர்.

இவரது அமுதத் தமிழ்ப் பாசுரங்களில் ஆழ்ந்த அனைவருமே சமயம், இனம் போன்ற வேறுபாடுகள் இன்றி இவரை அன்புடன் "நம்மவர்' என்று உரிமை பாராட்டிப் போற்றியதால் இவர் ""நம்மாழ்வார்'' என நானிலத்தில் அறியப்பட்டார்.

நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலையாக எழுதியவர் மதுரகவியார் என்னும் ஆழ்வார். இவர் நம்மாழ்வாரின் சீடரானது ஒரு வியப்பூட்டும் சம்பவம். யாத்திரையில் இருந்த மதுரகவியார் வானில் காணப்பட்ட ஒரு ஒளியைத் தொடர்ந்து, ஓர் உந்துதலால், ஆழ்வார் திருநகரி வந்தடைந்து சுவாமி நம்மாழ்வாரைத் தரிசித்தார். புளியமரத்தில் மோன நிலையில் களைபொருந்திய ஒளிப் பிரபையுடன் விளங்கிய நம்மாழ்வாரை நோக்கி ""செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'' என மதுரகவியார் கேள்வி கேட்க, அதற்கு ஆழ்வார் ""அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்'' என பதிலுரைத்தாராம் (இதன் பொருள்; உயிரற்றதாகிய பிரகிருதியினால் ஆகிய உடம்பில் அணுவடிவாய் உள்ள ஆன்மா வந்து புகுந்தால் எதனை அனுபவித்துக் கொண்டு எவ்விடத்தில் இன்பம் உண்டென்று எண்ணியிருக்கும்? பதில்: அந்த உடலின் தொடர்பினால் ஆகும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் இவ்வைந்தினால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு அவ்விடத்திலேயே இன்புற்றேன், இளைத்தேன் என்று சொல்லிக் கொண்டே கிடக்கும்). அப்பதிலைக் கேட்ட மதுரகவியார் நம்மாழ்வாரைக் கை கூப்பி வணங்கி அடியேனை ஆட்கொண்டு அருள வேண்டும் என வேண்ட நம்மாழ்வாரும் தம்முடைய பாசுரங்களை எழுதும் பணியை அருளினார்.

நம்மாழ்வாருடைய பாடல்களில் இறையுணர்வு, அன்பு, இன்பம், பொதுமையின் சிறப்பு, கவிதையின் எழில் முதலியன காணப்படும். பரமபதம் உட்பட இவரால் பாடல்பெற்ற திவ்ய தேச தலங்கள் 35 ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் இவருடைய பாசுரங்களை வேண்டி அந்தந்த திவ்ய தேச எம்பெருமான்களே இவரைத் தேடி வந்து காட்சி கொடுத்து பாசுரங்களைப் பெற்றனர் என்பதே. நூல் இயற்றப்புகுவோர் முதலில் விநாயகருக்கு வணக்கம் கூறுதலைப் போன்று இவ்வாழ்வாருக்கு வணக்கம் கூறுதல் மரபாயிற்று. வைணவ சம்பிரதாயத்தில் இவரை அவயவி எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புகள்) என கூறும் வழக்கம் உண்டு.

அவை முறையே (தலை-பூதத்தாழ்வார், இரண்டு கண்கள்- பொய்கை, பேயாழ்வார், முகம்}பெரியாழ்வார், கழுத்து- திருமழிசையாழ்வார், இரண்டு கைகள்- குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், மார்பு}தொண்டரடிப் பொடியாழ்வார், தொப்புள்- திருமங்கையாழ்வார், பாதங்கள்- மதுரகவியாழ்வார்! எம்பெருமான் திருவடிகளுக்கு மிகவும் அந்தரங்கராக இவர் இருந்ததால் பெருமானது பாதுகையாக இவர் மதிக்கப்படுகிறார். ஆகவே எம்பெருமான் திருப்பாதுகை இவரது பெயரான ஸ்ரீசடகோபன் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இவ்வளவு சிறப்புடைய இந்த ஆழ்வார் இந்த மண்ணுலகில் முப்பத்திரண்டு ஆண்டுகளே உயிர் வாழ்ந்துள்ளார்.

இவரின் அவதார உற்சவம் ஆழ்வார் திருநகரியில் ஜூன் 2ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 8ம் தேதி நடைபெற்ற நவதிருப்பதி எம்பெருமான் கருட சேவையைத் தொடர்ந்து 12ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூன் 18ஆம் தேதி உற்சவம் நிறைவு பெறுகிறது. வேதத்தின் சாரத்தை இனிய தமிழ்ப் பாசுரங்களாக நல்கியருளிய இந்த ஆழ்வாரின் வைபவத்தில் பங்கேற்று, இதன் மூலம் ஆழ்வார் மற்றும் எம்பெருமானின் அருளைப் பெறுவது நமக்குக் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாகக் கருதி திருமால் அடியார்கள் பயன்பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com