இறைத் தூதர் இப்ராஹீம் நபி, இறைவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் பொழுது ஏற்பட்ட எண்ணற்ற சோதனைகளை வென்றதால், அவரை மனிதர்களுக்கு வழிகாட்டியாக ஆக்கியதாக அருள்மறை குர்ஆன் (4-124) கூறுகிறது.
மனிதர்களுக்கு வழி காட்டுவோர் என்போர் சமுதாய, அரசியல், ஆட்சித் தலைவர்கள். அவர்கள் சட்டம் சொல்லும் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். "ஆட்சிக்கு வீழ்ச்சி வராது காப்பதே கடமை' என்று வாய்மை பேணுவதை விடுத்து, வாய்மூடி மௌனியாக இருக்கக் கூடாது; மெய்யை மெய்யாகவே மெய் வழியில் மெய்யென்று நிலை நிறுத்தும் மேலான தலைவர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தினர், கூட்டாளிகள் கொள்கைகளுக்குப் புறம்பாய்ச் செயல்பட்டால் அவர்களை ஆதரிக்கக் கூடாது. அவர்களுக்கு வக்காலத்து வாங்கவும் கூடாது. அடக்கமும் இரக்கமும் உடைய இப்ராஹீம் நபி, தனது தந்தை அல்லாஹ்வின் ஆணைக்கு மாறு செய்கிறார் என்பது தெரிந்ததும் தந்தைக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்று திருக்குர்ஆன் (9-114) கூறுகிறது.
இறைவனின் கட்டளையை விட்டெறிந்து இணை வைத்து வணங்கும் உறவினரை உதறிவிட்டு அல்லாஹ்வின் ஆணையை ஏற்று தாய் நாடாம் ஈராக்கை விட்டு பாலஸ்தீனத்தில் குடியேறினார் இப்ராஹீம் நபி.
அக்காலத்தில் மக்கள் வாழாத மக்கத்து பாலைவனத்தில் மனைவி ஹாஜிராவையும் மகன் இஸ்மாயிலையும் விட்டுவிட்டு இறைத்தூதை எடுத்தியம்ப எடுப்பாய்ப் புறப்பட்டார் இறை பிடிப்புள்ள இனிய நபி இப்ராஹீம். அருமை மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட அல்லாஹ் ஆணையிட்ட பொழுதும் அஞ்சாது அறுத்து பலியிட நெஞ்சுவந்து முன் வந்தார் இறைத் தோழர் இப்ராஹீம்.
""நானே இறைவன்; எனக்கு மேல் எவரும் இல்லை'' என்ற கொடியோன் நம்ரூது கொடு நெருப்பில் வீசிய பொழுதும் கூசாது குதித்தார் நேசர் நபி இப்ராஹீம்.
இவ்வேதனையான சோதனைகளில் வென்ற பின்பே நன்றியுடைய நந்நபி இப்ராஹீமை மக்களுக்கு வழிகாட்டி ஆக்கினான் அல்லாஹ். சொகுசாய் சுக போகத்தில் வளர்ந்து வாழும் வாரிசு வழித் தலைவர்கள் தலைமைக்குத் தக்கோரல்லர். சோதனைகளை வென்றவரே சாதனை படைத்து மக்களுக்கு நல்வழி காட்டும் நல்ல தலைவர்.
தலைவர்கள், முன்னோரின் முரண்படாத வழியைப் பின்பற்ற வேண்டும். இதையே குர் ஆன் (37-83) இப்ராஹீம் நூஹ் நபி வழியைப் பின்பற்றியவர் என்று கூறுகிறது. "என் வழி தனி வழி' என்று தள்ளாடித் தடுமாறி எழ முடியாமல் விழக் கூடாது.
நன்னெறி நடக்கும் தலைவர்கள் உண்மையாளராக இருப்பர். அவர்களை உலகம் போற்றும் என்பதை குர்ஆன் (19-41) ""இப்ராஹீம் நபியை மிக்க உண்மையானவர் என்று புகழ்ந்து உலகோர் அவரை வாழ்த்துகிறார்கள்'' என்றும் கூறுகிறது.
மக்களை ஆள்கின்ற தலைவர்கள் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் சுய லாபம் தேடும் சுய நலமிகளாக இருத்தல் கூடாது. தான் நல்வழி நடந்து மக்களுக்கு நல் வழி காட்டும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். இதையே முஹம்மது நபி, ""வழி காட்டிகளில் சிறந்தோர் மக்களை நேசித்து மக்களால் நேசிக்கப்படுபவர்கள். வழிகாட்டிகளில் கெட்டவர்கள், இரக்கமற்ற அநியாயக்காரர்கள்; மக்களின் வெறுப்பிற்கும் சாபத்திற்கும் உரியவர்கள்'' என்று கூறினார். புகாரி, முஸ்லீம் கிரந்தங்களில் இவ்விவரம் காணப்படுகிறது.
சுய நலத்திலும் ஊழலிலும் ஊறித் திளைத்து, கொழுத்த பணத்தைக் கொள்ளையிட்டு, குடும்பத்தினரை கோடீஸ்வரர்களாக்கி, உல்லாசமாய் உப்பரிகையில் வாழும் இன்றைய தலைவர்கள், மக்களுக்கு வழிகாட்டும் நல்ல தலைவர்களாக மாற இப்ராஹீம் நபியின் வாழ்க்கையை பாடமாகக் கற்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.