ஏழு மலைகள் என்னென்ன?

ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வே
ஏழு மலைகள் என்னென்ன?
Published on
Updated on
2 min read

ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை சொல்லில் அடங்காதது.

நாராயணன் எழுந்தருளியுள்ள திருமலையில் ஏழு மலைகள் அடங்கியுள்ளன. அவை சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகியவை. திருமலை, திரேதா யுகத்தில் அஞ்சனாத்ரி என்றும், கிருத யுகத்தில் நாராயணாத்ரி என்றும் துவாபரயுகத்தில் நரசிம்மாத்ரி என்றும் கலியுகத்தில் திருவேங்கடாத்ரி என்றும் பெயர் பெற்றுள்ளது.

சேஷாத்ரி: ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் ஒரு சமயம் சண்டை ஏற்பட்டது. அதில் ஆதிசேஷன் வெற்றி பெற்றான். அவனுக்கு கர்வம் ஏற்பட்டது. தான் இல்லாவிட்டால் பகவானுக்கு படுக்கை ஏது? தூக்கம் ஏது? என்றும் நினைக்க ஆரம்பித்துவிட்டான். இந்த கர்வம் அடங்கிய பின் பகவானிடம் தன் தவறை ஒப்புக்கொண்டான். கர்வத்தை விட்ட ஆதிசேஷன் பெயரால் சேஷாத்ரி என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது.

அஞ்சனாத்ரி: அஞ்சனாதேவி அனுமாரின் தாயார். அவள் திருப்பதியிலுள்ள ஆகாச கங்கையில் நீராடி தவமிருந்து ஆஞ்சநேயரை பிள்ளையாக அடைந்தாள். அவள் பெயரிலேயே அஞ்சனாத்ரி என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது.

நாராயணாத்ரி: நாராயண முனிவர் என்பவர் பிரம்மாவின் யோசனைப்படி இத்தலத்தைத் தேர்ந்தெடுத்து தவமியற்றினார். விஷ்ணு பிரத்யட்சமாகி வேண்டிய வரம் கேட்டபோது அவர் ""உலகிலுள்ளவர்கள் வருத்தம் தரும் யோக மார்க்கத்திலிருந்து உன்னைக் காண சக்தி இல்லாதவர்கள். ஆதலால் தாங்கள் எவ்வுயிருக்கும் அருள் சுரந்து காட்சி அளிக்க அகலாது இங்கேயே எழுந்தருளி இருக்க வேண்டும்'' என்று கோரினார். பகவானும் அதற்கு இசைந்தார். இந்த இடத்திற்கு "நாராயணாத்ரி' என்ற பெயர் ஏற்பட்டது. பகவானே இந்த இடத்தில் தானே வந்து கோயில் கொண்டதால் இது ஸ்வயம்வக்த ஷேத்திரமாகும்.

விருஷபாத்ரி: விருஷபன் என்று ஒரு அரசன். அவன் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்தான். திருமால் பிரத்யட்சமானார். ""உன்னை எல்லாரும் பொல்லா சுவாமி என்கிறார்களே. உன்னோடு போர் புரிய ஆசை. அந்த வரம் தா'' என்றான். இந்த வரம் காரணமாக போர் நடந்தது. ஏழுமலையானின் நாமமே அவனை பயமுறுத்திவிட்டது. அவர் சக்கரத்தை எடுத்தவுடன், ""சுவாமி நீ பொல்லாத சுவாமிதான். என் பெயரால் இம்மலையின் பெயர் ஏற்பட வரம் அருள்'' என்றான். இதனால் விருஷபாசலம் என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது. இதுவே விருஷபாத்ரி என்று அழைக்கப்படுகிறது.

கருடாத்ரி: கருடனையும் ஞாபகப்படுத்தும்படி கருடாசலம் என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. நாராயணனுடைய மலையானதால் நாராயணாத்ரி. திருப்பதி பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன் என்ற பெயருண்டு. ஆகவே ஸ்ரீநிவாஸாத்ரி. இம்மலை கேட்ட வரங்களை எல்லாம் கொடுக்கும் என்று நம்பி "சிந்தாமணிகிரி' என்றும் அழைக்கிறார்கள்.

வேங்கடாத்ரி: திருமலையில் ஏறியதுமே பாவங்கள் பஸ்பமாகி விடுகின்றன. "வே' என்றால் பாவங்கள். "கட' என்றால் கொளுத்தப்படுதல் என்று பொருள். இப்படி பாவங்களைப் போக்குவதால் வேங்கடாத்ரி என்ற பெயர் ஏற்பட்டது.

நீலாத்ரி: நீலன் என்ற வானர வீரன் தவம் செய்த மலை. எனவே இம்மலைக்கு நீலாத்ரி என்ற பெயர் அமைந்தது.

இந்த ஏழுமலையிலும் எழுந்த ருளும் கோவிந்தனை புரட்டாசியில் சரணடைந்து புண்ணியம் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com