

பார்க்கும் இடமெல்லாம் ஞானமயம். ஞான விநாயகர், ஞான மலை, ஞானபண்டிதப் பெருமான் முருகன்... வழிபடுவோர்க்கு ஞானமும் செல்வமும் வாரி வழங்கும் இந்தத் தலம் - ஞானமலை. வேலூர் மாவட்டத்தில் உள்ளது இம்மலை. ஞான வடிவினனாய் முருகன் குடிகொண்ட குன்றம் இது.
வள்ளிமலையில் இருந்து குற வள்ளியை அழைத்துக் கொண்டு திருத்தணிக்குச் சென்ற முருகப் பெருமான், சற்று நேரம் இளைப்பாற எண்ணினார். அப்போது கண்ணில் பட்டது சிறிய குன்று. இருவரும் அந்தக் குன்றில் தங்கி இளைப்பாறினர். பின்னர் திருத்தணிக்குச் சென்றனர். ஞான மலை மீது முருகனின் திருவடிகள் பதிந்த பாதச் சுவடுகளைக் காட்டுகிறார்கள் பக்தர்கள். இங்கிருந்து திருத்தணியும் வள்ளிமலையும் சமமான தொலைவில் முக்கோண வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.
அருணகிரிநாதருக்கு, தனது பாத தரிசனத்தை முருகன் காட்டி அருளிய தலமும் இந்த ஞானமலை திருத்தலம்தான். இங்கே எழுந்தருளியுள்ள முருகனைப் போற்றி இரண்டு திருப்புகழ் பாடியுள்ளார் அருணகிரிநாதர். அதில் ஒரு பாடலில்,
நாதரிட மேவு மாதுசிவ காமி நாரிஅபி ராமி அருள்பாலா நாரண சுவாமி ஈனுமக ளோடு ஞானமலை மேவு பெருமாளே - என்கிறார்.
மலையின் அடிவாரத்தில் இறங்கியதும் படியேறிச் செல்லும்போது ஞானஸித்தி விநாயகர் சந்நிதியைக் காணலாம். ஞானமே உருவாக, ஓம் எனும் பிரணவப் பொருளாய் அமர்ந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். மலைக்குச் செல்ல படிக்கட்டுகள் மற்றும் நிழற்கூரைகள் உள்ளன. வழியில் வெப்பாலை, குடசப்பாலை மரங்கள் நிறைய காணப்படுகின்றன. இயற்கை அழகு கொஞ்சும் மலையில் ஏறி மேலே சென்றால் முருகப் பெருமானின் சந்நிதி. சந்நிதியை வலம் வரும்போது, மலையின் இடது புறம், ஒரு சுனை காணப்படுகிறது. 14-ஆம் நூற்றாண்டில் காளிங்கராயன் என்பவன், ஞானமலை கோயிலுக்கு படிகள் அமைத்த செய்தியைச் சொல்கிறது அங்குள்ள ஒரு கல்வெட்டு.
முருகன் சந்நிதிக்குப் பின்னே, மலை மீது சற்று ஏறிச் சென்றால், அங்கே சிவபெருமான் சந்நிதி. இவரை ஞானகிரீஸ்வரர் என்கின்றனர். இந்த சந்நிதிக்குப் பின்னே, மலையில் முருகன் பாதம் பதிந்த தடங்கள் என இரு பாதச்சுவடுகளைக் காட்டுகிறார்கள். அந்த அமைப்பை சிறு மண்டபம் கட்டி, அதனுள் பாதுகாத்து வைத்துள்ளனர்.
வலம் வந்தபின் முருகனின் சந்நிதியை தரிசிக்கலாம். இங்கே, ஸ்ரீமுருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பேரழகுடன் காட்சி தருகிறார். ஞானமலை முருகனின் திருமுகம் ஞானக்களையுடன் திகழும் அழகே அழகு. இதனை பிரம்ம சாஸ்தா வடிவம் என்கின்றனர். பல்லவர்கள் எழுப்பிய ஆலயங்களில், பெரும்பாலும் முருகப் பெருமான், பிரம்ம சாஸ்தா வடிவில்தான் இருப்பாராம். ஜபமாலை ஒரு கையிலும் கமண்டலம் ஒரு கையிலுமாகக் கொண்டு, முன் கைகள் இரண்டில் ஒன்று அபய ஹஸ்தமாகவும் ஒன்றை இடுப்பிலும் வைத்தபடி காட்சி தருகிறார். உற்ஸவர், கோலக் குறமகள் தழுவிய ஞானக் குமரனாக, வள்ளியைத் தன் மடியில் இருத்தி, அணைத்தபடி காட்சி தருகிறார்.
உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்களின் துணையுடன், இக்கோயிலில் உற்ஸவங்கள் நடக்கின்றன.
கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலான விழாக்கள் இங்கே விமரிசையாக நடைபெறுகின்றன. அருணகிரிநாதருக்கு முருகன் தரிசனம் தந்த விழா, கார்த்திகை மாதத்தில் சீரும் சிறப்புமாக நடக்கிறது. கல்வி கேள்விகளில் சிறக்க பிரம்மசாஸ்தா வடிவமாகத் திகழும் ஞானமலை முருகனை தரிசிப்போம்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவில் மங்கலம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து ஞானமலை பெயரைத் தாங்கியுள்ள வளைவின் வழியாக சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால் ஞானமலை அடிவாரத்தை அடையலாம்.
தரிசனத் தொடர்புக்கு: கே.மணி
(அர்ச்சகர்) 04177-292411 9445207242
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.