சுந்தரர் பாடிய தண்டாங்கோரை!

சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர், அடியார் கூட்டத்துடன் பல திருத்தலங்களுக்குச் சென்றனர். அங்குள்ள இறைவனைத் தொழுது, போற்றிப் பாடுங்கால், அத்திருத்தலங்களுக்கு (அவையே பா
சுந்தரர் பாடிய தண்டாங்கோரை!
Published on
Updated on
2 min read

சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர், அடியார் கூட்டத்துடன் பல திருத்தலங்களுக்குச் சென்றனர். அங்குள்ள இறைவனைத் தொழுது, போற்றிப் பாடுங்கால், அத்திருத்தலங்களுக்கு (அவையே பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள் எனப் பெயர் பெற்றன) அருகிலிருந்த தலங்களைப் பற்றிக் கேள்வியுற்று அவற்றையும் தம் திருப்பதிகங்களில் பாடினர். அவையே "வைப்புத் தலங்கள்' என்று அழைக்கபடுகின்றன. அவ்வகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற வைப்புத் தலங்களில் ஒன்றுதான் தண்டாங்கோரை எனும் சோழ நாட்டுத் தலம். இங்கே ஸ்ரீமும்மூர்த்தி விநாயகர் திருக்கோயில், ஸ்ரீசத்சித் ஆனந்த சித்தரின் ஜீவ சமாதி, ஸ்ரீஊரிடைச்சி அம்மன் கோயில், ஸ்ரீசர்வ லோக ஜனனி சமேத கைலாசநாதர் சுவாமி கோயில், ஸ்ரீ சீதா பிராட்டி சமேத கோதண்ட ராமசுவாமி கோயில் ஆகிய சிறப்புமிக்க ஐந்து கோயில்கள் உள்ளன. இவற்றில் சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

 மும்மூர்த்தி விநாயகர் கோயில்:

 இது ஊரின் வடக்கே அமைந்துள்ளது. இக்கோயிலில் மூன்று விநாயகர் உருவங்கள் உள்ளன. இவை சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் ஸ்வரூபங்களாகக் கருதப்படுகின்றன. சுமார் 300 வருடங்களுக்கு முன், திருச்சோற்றுத் துறையில் வாழ்ந்த பெரியவர்களால் நிர்மாணிக்கப்பட்ட கோயில் இது. இந்த மும்மூர்த்தி விநாயகர் வேண்டிய வரங்களைத் தருபவர். திருமணம் ஆகாதவர்கள் இவரை வணங்கினால் மாங்கல்ய பாக்கியம் அருள்பவர்.

 ஸ்ரீசத்சித் ஆனந்த சித்தரின் ஜீவ சமாதி:

 பிள்ளையார் கோயிலுக்குக் கிழக்கே, சோறுடையான் வாய்க்காலின் தெற்குக் கரையில் உள்ளது ஸ்ரீசத்சித் ஆனந்த சித்தரின் ஜீவ சமாதி. திருநெல்வேலியிலிருந்து வருகை தந்த இந்த சித்தர் சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இவ்வூரில் தங்கினார். தன்னுடைய ஞானத்தால் பலரின் மனக்குறைகளைத் தீர்த்து வைத்து சித்தியடைந்தவரின் ஜீவ சமாதியைப் பலரும் வழிபடுகின்றனர்.

 ஊரிடைச்சி அம்மன் கோயில்:

 இக்கோயில் சுற்றுவட்டாரங்களில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில். இங்கு ஊரிடைச்சி, நாராயணி ஆகிய இரு அம்மன்களும் அருகருகே அமர்ந்து அருள்புரிகின்றனர்.

 ஸ்ரீசர்வ லோக ஜனனி சமேத கைலாசநாதர் சுவாமி கோயில்:

 ஊரின் நடுவில் அமைந்துள்ளது இக்கோயில். ஸ்ரீஅம்பாள், சுவாமி சந்நிதிகள் உள்ளன. இவை தவிர விநாயகர் சந்நிதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நிதி, வள்ளி - தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி சந்நிதி, ஸ்ரீசண்டிகேசுவரர் சந்நிதி, ஸ்ரீ நந்தி மண்டபம், ஸ்ரீ நவகிரக சந்நிதி ஆகியவை இருக்கின்றன. குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மண வாழ்க்கையில் நிறைவு இல்லாதவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இந்தக் கோயிலில் உறையும் அம்பாளையும், சுவாமியையும் மனதார வழிபட்டால் அனைத்து இன்பங்களும் பெறலாம்.

 ஸ்ரீகோதண்ட ராமர்:

 ஸ்ரீசீதாப்பிராட்டி சமேதராக இவ்வூரில் அருள்புரிகிறார் ஸ்ரீ கோதண்ட ராமர்.

 இங்கே பெருமாளையும், தாயாரையும் வழிபடுபவர்கள் அனைத்துக் கிரக தோஷங்களிலிருந்தும் நிவர்த்தி பெறுவது கண்கூடான ஒன்று.

 இவற்றில் ஸ்ரீகோதண்ட ராமர் கோயிலும், கைலாசநாதர் கோயிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். தற்போது இக்கோயில்களின் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. திருப்பணி குறித்த தகவல் அறிய விரும்புவோர் 94449 76980 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 அமைவிடம்:

 தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில், தஞ்சாவூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தண்டாங்கோரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com