வாய்மையே வெல்லும்!

 சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் குற்றம் குறைகளை மறைப்பதற்காக பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுவிட்டனர். இப்படிப்பட்ட பொய்யை சர்வ சாதாரணமாகப் பேசிப் பழக்கப்பட்டவர்களிடமிருந்து உண்
வாய்மையே வெல்லும்!
Published on
Updated on
1 min read

 சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் குற்றம் குறைகளை மறைப்பதற்காக பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுவிட்டனர். இப்படிப்பட்ட பொய்யை சர்வ சாதாரணமாகப் பேசிப் பழக்கப்பட்டவர்களிடமிருந்து உண்மையை எதிர்பார்ப்பது இயலாத ஒன்றாகும்.

 ""உறுதியாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான் (அல்குர்ஆன்: 40:28)''.

 நல்வழியை விட்டும் தடுக்கும் கேடயமாக பொய் உள்ளது என்பதை மனிதர்கள் விளங்கிக்கொண்டால், வாழ்நாளில் பொய் உரைப்பதை அவர்கள் விரும்பவே மாட்டார்கள்.

 நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், ஒருவர் தினந்தோறும் மது அருந்துவோராகவும், இரவுப் பொழுதில் திருடுபவராகவும், பிறன் மனை விழையும் ஈனராகவும், கொலை செய்பவராகவும் இருந்தார். எந்தப் பாவங்களையும் அவர் விட்டுவிட எண்ணினாலும், அப்பாவங்கள் அவரை விட்டு நீங்க மறுத்தன. இந்தப் பாவங்களிலிருந்து ஒவ்வொன்றாக, தன்னை விட்டு நீக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தன.

 ஒருநாள் அவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் முன்னால் வந்து நின்றார். தம் பாவங்களைப் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார். தான் செய்யும் ஒவ்வொரு பாவங்களை விட்டு வெளியேறுவதாகவும் வாக்குறுதி அளித்தார். முதலில் எந்தப் பாவத்தை விடுவது என்று கேட்டார் வந்தவர். நபிகள் பெருமகனார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ""முதலில் நீர் பொய்யுரைப்பதை விட்டு விலகுவீர்'' எனக் கட்டளையிட்டார்கள்.

 அன்றைய ஆட்சியை விட்டும் கதிரவன் மறைந்தான். இருள் சூழ்ந்தது. நள்ளிரவும் வந்தது. அந்தப் பாவியின் மனதில், எந்தப் பாவத்தை செய்யாமல் இருப்பது? எதனைச் செய்வது? என்ற மனக்குழப்பம் பிறந்தது. குடிப்பதா? கொலை செய்வதா? திருடுவதா? பெண்ணின்பம் காண்பதா? எதைச் செய்தாலும், நாளைய பொழுது விடிந்தவுடன் நபிகளார் (ஸல்) அவர்களிடம் போனால், "நேற்று இரவு என்ன செய்தாய்?' என்று கேட்பார். நான் இந்தப் பாவத்தைச் செய்தேன் என்று உண்மையை உரைத்தே ஆக வேண்டும்; பாவம் செய்துவிட்டு அவர்கள் முன்னால் போய் நிற்க எனக்கு மனத்துணிவு இல்லை. எனவே எந்தப் பாவங்களையும் இனி நான் செய்யப் போவதில்லை என்று மன உறுதிகொண்டார். தன் மன உறுதியை நபிகளாரிடமும் சென்று உரைத்தார். ""அனைத்துப் பாவங்களுக்கும் பொய்யே ஆணி வேராக உள்ளது'' என்பது நபிகளாரின் பொன்னுரை.

 நேர்மையே சிறந்த கொள்கை; வாய்மையே வெல்லும்; பொய்யே கொல்லும் என்பதனை நாம் நன்கு உணர்ந்து வெற்றிப் படிகளில் ஏறிச்சென்று எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ்வின் பேரருளை முழுமையாகப் பெற்று வாழ்வோமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com