தோரண மலையில் அழகின் அரசன்!

தென்றல் தவழும் தென்பொதிகை மலைத்தொடரில் தென்காசி கடையம் பாதையின் மேற்கில் யானை வடிவமாய் அமைந்துள்ளது தோரணமலை. குலுக்கை மலை, ஆனைமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு யானை உட்கார்ந்த நிலையில் துதிக்கையால் நி
தோரண மலையில் அழகின் அரசன்!
Published on
Updated on
1 min read

தென்றல் தவழும் தென்பொதிகை மலைத்தொடரில் தென்காசி கடையம் பாதையின் மேற்கில் யானை வடிவமாய் அமைந்துள்ளது தோரணமலை. குலுக்கை மலை, ஆனைமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு யானை உட்கார்ந்த நிலையில் துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் இம்மலை தோற்றம் அளிப்பதால் ஆனைமலை என்ற பெயர் ஏற்பட்டது. வாரணம் என்ற சொல் யானையைக் குறிக்கும். இச்சொல் காலப்போக்கில் தோரணம் என்று மருவி தோரணமலை என்று அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். 64 சுனைகள் இருப்பதால் தோரணமலை இயற்கை ராணியின் சிம்மாசனமாகத் திகழ்கிறது.

தோரணமலையில் நானூறு ஆண்டுகளுக்கு முன்பே பழமையான முருகன் கோயில் ஒன்று இருந்ததாக சொல்லப்படுகின்றது. தமிழகத்தை நாயக்க மன்னர்கள் ஆண்டு வந்தபோது, அம்மன்னர் மரபில் வந்த வெங்கலவன் என்பவன் அம்மலையில் முருக வழிபாட்டை மேற்கொண்டான் என்றும் மலைப்பகுதியில் அவன் குடியிருந்தான் என்பதும் செவி வழிச் செய்தி.

நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோயில் 1928ஆம் ஆண்டு மீண்டும் தோற்றம் பெற்றது.

தோரணமலையில் எழுந்தருளியுள்ள முருகன் இரு கைகளை உடைய சாத்வீக மூர்த்தியாக அழகின் அரசனாக விளங்குகிறான். ஒரு கையில் வேலேந்தி, மயில் வாகனத்தோடு, நின்ற திருக்கோலத்தில் பால முருகனாகக் காட்சி தருகிறான்.

இத்திருக்கோயிலுக்கு படிக்கட்டுகளில் ஏறி மக்கள் வருகிறார்கள். படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தை அடிவாரம் என்று அடியார்கள் குறிப்பிடுவர். அடிவாரத்தில் பெரிய திருமேனியுடன் வல்லப விநாயகர் கிழக்கு முகமாகக் காட்சி தருகிறார்.

சந்நிதிக்கு வெளியே இருக்கின்ற வெளிப்பிராகாரத்தின் கிழக்குப் பக்கத்தில் பத்ரகாளி எழுந்தருளியிருக்கிறாள்.

தைப்பூசம்

இத்திருக்கோயிலில் தினமும் ஒருவேளை பூஜை நடக்கிறது. ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகின்றது. இவ்விழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. இறுதி நாளன்று அதாவது தைப்பூச நன்னாளில் சிறப்பு பூஜைகளும், கலை நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும், சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெறும்.

திருவிழாவின் போது இறைவனுக்கு பொங்கலிடுதல், மொட்டையடித்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி காணிக்கை செலுத்ததல் போன்றவை நடக்கின்றன.

மேலும் தகவலுக்கு:9965762002,04633 250768.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com