

எல்லையை மிதித்தாலே நமது தொல்லை வினைகளை "இல்லை' என்றாக்கும் தில்லைத் தலத்தில் தினந்தோறும் திருவிழாதான்!
ஆனித் திருமஞ்சனம், தைப்பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், மாதப் பிறப்பு, பிரதோஷம், நால்வர் விழா என அநேக விழா அதி அற்புதமாக நடந்தாலும் சிகரம் வைத்தாற்போல் சிறந்து பொலியும் நன்னாளே ஆருத்ரா தரிசனம்.
சிதம்பரம், திருவாரூர் இரண்டும் மிகப் பழமையான திருத்தலம். "இரண்டில் எது மூத்தது?' என்ற கேள்வி எழலாம்.
தேவாரம் இதற்கு என்ன பதில் சொல்கிறது என்று தெரிந்துகொள்வோமா?
"மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக்கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே'
-எது முந்தி என எவராலும் சொல்ல முடியாது. "முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம் பொருளாக' நடராஜ மூர்த்தி பொலிகின்றார். ஆனால் அவரது ஆடல் என்றும் புதுமையாக இலங்குகின்றது.
நடன சபாபதியான சிவபிரான், திருவாதிரை நன்னாளில் - ஆருத்ரா தரிசன விழாவில் ஆனந்தம் மிகக் கொள்கிறார். அதனால்தான் "ஆதிரை முதல்வன்' என்றும் "ஆதிரையான்' என்றும் திருப்பெயர் பெற்றுள்ளார்.
மார்கழி மாதம், திருஆதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடியேற்றி பத்து நாள் விழா நடைபெறுகிறது.
திரு ஆதிரை நட்சத்திரத்தில் "இராஜசபை' என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்
குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில்
பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்
காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த
மாநிலத்தே!'
-அப்பரடிகள்தான் எவ்வளவு அழகாகச் சொல்லியுள்ளார்.
பிறவி பெற்றதன் பயனே நடராஜரைத் தரிசிப்பதுதான். அதுவும் ஆருத்ரா தரிசனம் பாவ விமோசனம்.
பனி மாதமாக விளங்கும் மார்கழி மாதம் இறைவனைப் பணியும் மாதமாகவும் சிறந்து விளங்குகிறது.
இம்மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே நாம் எழுந்து விடுகிறோம். நாம் மட்டுமல்ல. தேவர்களும் எழுந்து தெய்வ தரிசனம் பெறுகிறார்கள்.
எப்படி என்கிறீர்களா?
தை முதல் நாள் முதல் "உத்தராயணம்' என்கிற பகல் பொழுது தேவர்களுக்கு. அப்படியென்றால் தைக்கு முன் வருகின்ற மார்கழி தேவர்களுக்கு அருணோதய நேரம்தானே!
வானவர்களும், மண்ணுலகத்தோரும் ஒரு சேர வணங்கும் மார்கழித் திங்களில்தான் மகாதேவனுக்கும் விழா! மாலவனுக்கும் விழா!
"கோயில்' என்று சொன்னாலே சைவர்களைப் பொறுத்தவரை சிதம்பரம்தான்! வைணவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான்.
ஸ்ரீரங்கத்தின் சிறப்பு விழா வைகுண்ட ஏகாதசி. அவ்வாறே தில்லையில் சிறப்பு விழா ஆருத்ரா தரிசனம்.
நடராசப் பெருமான், மார்கழி திருவாதிரையிலும், மாசி சுக்ல சதுர்த்தசியிலும், சித்திரை திருவோணத்திலும், ஆனி உத்திரத்திலும், ஆவணி சுக்ல சதுர்த்தசியிலும், புரட்டாசி சுக்ல சதுர்த்தசியிலும் அபிஷேகம் ஏற்கிறார். நமக்கு ஒரு வருடம் என விரிவது தேவர்களுக்கு ஒரு நாளே! மேற்கண்ட வண்ணம் ஒருநாளைக்கு ஆறுமுறை அபிஷேகம் ஏற்கிறார் தேவாதி தேவரான சிவ பரம்பொருள்.
ஒரு நாளின் முதற்குளியல் திருவாதிரைத் திருவிழா அன்றுதான். எனவேதான் ஆருத்ரா தரிசனம் போற்றப் பெறுகிறது. புலவர்களாலே ஏற்றப் பெறுகிறது.
""மார்கழி மாதம் திருவாதிரைநாள்
வரப்போகுது ஐயே'' என நந்தனார் மனம் உருகினார்.
""அருமருந்தொரு திருமருந்து
அம்பலத்தே கண்டேனே'' என முத்துத்தாண்டவர் முழக்கமிடுகிறார்.
""நடுங்க வைக்கும் குளிர்கொண்ட மாதத்திலே குளிர்ந்த தண்ணீரில் விடியற்காலையில் அபிஷேகமா? என்ன சிவபெருமானே இப்படிக் குளிப்பது ஏற்புடைத்தா?' என்று அதியற்புதமாக வினவுகிறார் அப்பைய தீட்சிதர்.
""பெருமானே! தங்கள் சிரத்தில் குளிர்ந்த கங்கை உள்ளது. மேலும் குளிர்ந்த பிறைச் சந்திரனும் பொலிகின்றது. உங்கள் ஒருபக்கத்தில் உறையும் உமாதேவியோ பனிமலை அரசனின் புதல்வி. வதைக்கும் இக்குளிர்நிகழ்வுகள் போதாதா? மார்கழி விடியற்காலையில் சந்தனத்தில் வேறு அபிஷேகமா? இவ்வளவு குளிரைத்தாங்கிக் கொள்வதற்கு ஒரே வழிதான் உள்ளது. காமம், கோபம், மதம் என தீய குணங்களால் என் இதயம் தகிக்கிறது. அங்கே வந்துவிடு குளிர் காயலாம். இதமாக இருக்கும்'' என கவித்துவத்தோடு நயம்பட அழைக்கிறார் அப்பைய தீட்சிதர்.
ஆருத்ரா தரிசனத்தில் என்ன அமுதமயமான கவிதரிசனம் பார்த்தீர்களா?
மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவத்தின்போது வேறொரு வித்தியாசமான நிகழ்வும் நடைபெறுகிறது.
அது என்ன தெரியுமா?
நடராஜப் பெருமான் தன்னை ஆலயத்தில் வந்து வழிபடாத ஆருயிர்கட்கும் அற்புதக் கருணை காட்டி அவர்தம் இல்லங்களுக்கு தாமே எழுந்தருளுகிறார்.
ஆமாம்.
கருவறையை விட்டு ஆருத்ரா தரிசன நன்னாள் அன்று நான்கு வீதிகளிலும் உற்ஸவராக அவரே உலா வருகின்றார். நம் மேல் நடராஜர் காட்டும் கருணைக்குத்தான் அளவேது?
கருவறை மூலவர் தெரு வரை உலா வருவது வேறு ஆலயங்களில் காணமுடியாத எட்டாவது அதிசயம்.
அதிகாலை எழுந்து மலர் பறித்து ஆண்டவனை வழிபட வேண்டும் என்ற ஆசையினால் மரங்கள் ஏற புலிக்காலை வேண்டிப் பெற்றார் ஒருவர்.
திருமால் கண்டு மகிழ்ந்த நடராஜர் திருநடனத்தை தானும் காண ஆசைப்பட்டார் ஆதிசேஷன்.
புலிக்கால் பெற்றவரே வியாக்ர பாதர்.
ஆதிசேஷனே பதஞ்சலி.
இவர்கள் இருவரும் காண சபாபதி இயற்றும் தனிப் பெருங்கூத்தே இவ்வுலகை இயக்கி வருகிறது.
"யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே' என்னும் திருமந்திரம் அருளிய திருமூலர் ஆருத்ரா நாயகனை அற்புதமாகப் பணிகின்றார்.
எங்கும் திருமேனி! எங்கும் சிவ சக்தி!
எங்கும் சிதம்பரம்! எங்கும் திருநடம்!
வானாகி,மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி அனைவரையும் கூத்தாட்டுவானாக விளங்குபவன் தானே ஆதிரை முதல்வன் ஆதிசிவன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.