கோவை மாநகரில் மேலத் திருப்பதி!

கோவை மாநகரத்திலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மொண்டிபாளையம். "மேலத் திருப்பதி' எனவும் அழைக்கப்படும் இத்தலத்தில் வெங்கிடாசலபதி வீற்றிருக்கிறார். மூன்று பிராகாரங்களோடு பரந்து விரிந்துள்ள
கோவை மாநகரில் மேலத் திருப்பதி!
Updated on
1 min read

கோவை மாநகரத்திலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மொண்டிபாளையம். "மேலத் திருப்பதி' எனவும் அழைக்கப்படும் இத்தலத்தில் வெங்கிடாசலபதி வீற்றிருக்கிறார். மூன்று பிராகாரங்களோடு பரந்து விரிந்துள்ள இந்த ஆலயத்தை திருமலையைப் போன்றே ஏழு மேடுகளைக் கடந்து அடையலாம்.

இவ்வாலயத்தின் வெளிப்பிராகாரம் தேர் ஓடும் வீதிகளாக அமைந்துள்ளது. இரண்டாவது பிராகாரத்தில் திருமண மண்டபங்களும், பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகளும் உள்ளன. பெரிய துளசி மாடமும் உள்ளது. உள் பிராகாரத்தில் தும்பிக்கை ஆழ்வார், மகாலட்சுமி, வைகுண்டநாதர், ஆண்டாள், வேணுகோபாலர், சக்கரத்தாழ்வார், பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோர் தனித் தனி சந்நிதிகளில் அருள் புரிகிறார்கள்.

இதுதவிர ஆஞ்சநேயர், சனீஸ்வரர் சந்நிதிகளும் உள்ளன. இப்பிராகாரத்தின் வடக்கு திசையில் பெருமாளின் திருப்பாதம் கண்டு சேவிக்கும் பேறும் நமக்குக் கிடைக்கிறது. சமீப காலத்தில் இங்கு நிர்மாணிக்கப்பட்ட உலோகத்தினாலான தசாவதார சிற்பங்கள், கலைநயம் நிறைந்து நம் கண்களையும் கருத்தையும் கவர்கின்றன.

இவற்றையெல்லாம் கடந்து சென்றால் வெங்கடேச பெருமாள் அலங்கார ரூபத்தில் காட்சியளிப்பதை தரிசிக்கலாம். பெருமாள் சுயம்பு வடிவானவர். சுயம்பு மூர்த்தியின் மேற்புறத்தில் வெங்கடேச பெருமாளின் திருவுருவம் புடைப்புச் சிற்பமாக தங்க முலாம் பூசப்பட்டு ஒளி வீசுகிறது. கருவறையிலேயே ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக உற்ஸவ மூர்த்தியையும் வணங்கலாம்.

இங்கே பக்தர்கள் பெருமாளுக்கு திருக்கல்யாணம் செய்வித்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் ஆறு சனிக் கிழமைகளிலும் சிறப்பாக உற்ஸவம் கொண்டாடப்படுகிறது. தை மாதம் தேர்த்திருவிழா பதினோரு நாட்கள் நடக்கிறது. முதல் நாள் திருமுளை, நகர சோதனை என்று தொடங்கி ஆறாம் நாள் திருக்கல்யாணமும், எட்டாம் நாள் தேரோட்டமும், ஒன்பதாம் நாள் பரிவேட்டை உற்ஸவமும், பத்தாம் நாள் தெப்பத் திருவிழாவும், பதினோறாவது நிறை நாளில் கொடி இறக்குதலும், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்வாலயத்தில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், உறியடித் திருவிழாவும் மற்றும் பல திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன.

இங்கு ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீஹயக்ரீவர் ஹோமம் ஆகியவற்றை பிரத்யேக யாக சாலை மூலம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணம் செய்யப்பட்ட இவ்வாலயத்திற்கு நான்கு புறமும் நெடிதுயர்ந்த வாயில்கள் இருக்கின்றன. ஆனால் இக்கோயிலின் கிழக்கு வாயிலில், ஒரு ராஜகோபுரம் இல்லையே என்ற பக்தர்களின் கவலையைப் போக்க, ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு: 98949 54395, 98942 39185.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com